நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறையில் தென் மாநிலங்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுப்பிய குரலால், தென்னிந்திய மாநிலங்கள் முழுவதும் ஒன்றியத்தை ஆளும் பா.ஜ.க. அரசை நோக்கி குரல் கொடுத்துவருகின்றன. இந்நிலையில் தமிழ்நாட்டில் புதிய நகராட்சி, மாநகராட்சிகளில் நடக்கும் புதிய வார்டு உருவாக்கம், மறுவரையறை, ஆளும்கட்சியிலேயே அதிருப்தியை உருவாக்கியுள்ளது.
2019-ஆம் ஆண்டு ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடந்த மாவட்டங்களின் மக்கள் பிரதிநிதிகளின் பதவிக்காலம் 2025 ஜனவரி மாதத்தோடு முடிந்தது. மீண்டும் தேர்தல் நடத்தப்படவில்லை. அதற்கு அரசுத்தரப்பில் கூறப்படும் காரணம், புதியதாக மாநகராட்சி, நகராட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றோடு அருகிலுள்ள ஊராட்சிகள் இணைக்கப்பட்டுள்ளன. நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான பதவிக்காலம் 2026 இறுதிவரை உள்ளது. இப்போது ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தினால் மாநகராட்சி, நகராட்சிகளோடு இணைக்கப்பட்ட ஊராட்சிகளுக்கு மக்கள் பிரதிநிதிகள் இருக்கமாட்டார்கள். இதனால் அங்கு அடிப்படை வசதி செய்துதருவதில், மக்கள் தங்கள் கோரிக்கைகளை முறையிடுவதில் சிக்கல் வரும், அதனால் நிர்வாகரீதியான பிரச்சனைகள் தீர்வுக்கு வந்தபின் தேர்தல் நடத்தப்படும். அதன்படி ஊரக உள்ளாட்சியில் சிறப்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு நிர்வாகம் நடைபெற்றுவருகிறது.
2021 நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிந்தபின்பு கடந்த 2022, 2023, 2024-ஆம் ஆண்டுகளில் தாம்பரம், காஞ்சிபுரம், கடலூர், கும்பகோணம், கரூர், சிவகாசி, திருவண்ணாமலை, நாமக்கல், புதுக்கோட்டை, காரைக்குடி என 10 மாநகராட்சிகள், 31 நகராட்சிகள் உருவாக்கப் பட்டுள்ளன. புதுக்கோட்டை நகராட்சியோடு 11 ஊராட்சிகள், திருவண்ணாமலை நகராட்சியோடு 18 ஊராட்சிகள், காரைக்குடி நகராட்சியோடு இரண்டு பேரூராட்சிகள், 5 ஊராட்சிகள், நாமக்கல் நகராட்சியோடு 12 ஊராட்சிகள் எனச் சேர்த்து மாநகராட்சிகளாக்கப்பட்டுள்ளன. புதிய மாநகராட்சிகளில் மண்டலங்கள் உருவாக்கம், புதிய வார்டுகள் உருவாக்கம் பணிகள் நடைபெறுகின்றன. அதேபோல் நகராட்சிகளிலும் புதிய வார்டுகள் உருவாக்கப்படுகின்றன. இதில் புதிய வார்டுகள் உருவாக்கம், வார்டுகள் மறுவரையறையில்தான் சிக்கல் எனக் கூறப்படுகிறது.
சென்னை மாநகராட்சி ஆவடி, தாம்பரம் என மூன்றாக பிரிக்கப்பட்ட பின்பு சென்னை மாநகராட்சியில் 15 மண்டலங்கள், 200 வார்டுகள் உள்ளன. 15 மண்டலங்களிலிருந்து 20 மண்டலங் களாக உயர்த்த முதலமைச்சர் ஆணையிட்டார். மண்டலங்கள் பிரியும்போது வார்டுகள் மாற்றியமைக்கப்படும், புதிய மண்டலங்களுக்குள் வார்டுகள் போகும். இதனால் அதிகாரம் குறையும், வருமானம் குறையும் போன்ற காரணங்களால் சிட்டிங் கவுன்சிலர்கள் புதிய மண்டலங்கள் உருவாக்கக்கூடாது என மாநகராட்சி நிர்வாகத்துக்கு நெருக்கடிதந்ததால் தற்போது மண்டலங்கள் பிரிக்காமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை நகராட்சியில் 39 வார்டுகள் உள்ளன. தற்போது மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டு அதனருகிலுள்ள கிராமங்கள் இணைக்கப்பட்டுள்ளதால் புதிய வார்டுகள் உருவாக்கம், வார்டு மறுவரையறை நடக்கின்றன. 39 வார்டுகள் 62 வார்டுகளாக உயர்த்தப்பட உள்ளன. 10 வார்டுக்கு ஒரு மண்டலம் என்கிற கணக்கில் 6 மண்டலங்கள் உருவாக்கப்படுகின்றன. வார்டு மறுவரையறை செய்யப்பட்டதில் பழைய வார்டுகளில் சில குளறுபடிகள் செய்யப்பட்டுள்ளதாகக் கவலைப்படுகின்றனர் ஆளும்கட்சி கவுன்சிலர்கள். இதுகுறித்து நம்மிடம் பேசியவர்கள், "அமைச்சரும், மா.செ.வு மான வேலு, நிழல் மா.செ.வாக வலம்வரும் மருத்துவரணி மாநில துணைத்தலைவர் கம்பன், மாநகர செயலாளர் கார்த்தி வேல்மாறன் ஆலோசனைப்படி ஒரு குழு, வாக்குப் பதிவு பட்டியலை வைத்துக்கொண்டு எந்த வார்டில் நமக்கு அதிக வாக்கு விழுந்தது, எந்த வார்டில் குறைவான வாக்குப் பதிவானது என ஆய்வுசெய்து, அதில் மாற்றங்கள் செய்துள்ளனர்.
இதுகுறித்து வட்டச் செயலாளர்கள், கவுன்சிலர்களிடம் குறைந்தபட்ச கருத்துகூட கேட்கவில்லை. அனைத்து வார்டுகளும் நமக்கு சாதகமாக இருக்கவேண்டும் என இந்த மாற்றம் செய்துள்ளதாகத் தெரிகிறது. உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் வாக்களிப்பது கட்சி சின்னத்தைப் பார்த்து மட்டுமல்ல, வேட்பாளர்களையும் பார்த்துதான். 50 சதவிகித வாக்குகள் வேட்பாளரின் முகத்துக்காக விழும். இது புரியாமல், போன தேர்தலில் இந்த வார்டில் நமக்கு அதிக ஓட்டு விழுந்தது, அதனால் இந்த வார்டு நமக்கு சாதகமான வார்டு, பக்கத்திலுள்ள வார்டு எதிர்க்கட்சிக்கு சாதகமான வார்டு என நினைத்து வார்டு மறுவரையறை செய்துள்ளதாகக் கூறுகிறார்கள்.
அதாவது, சாதகமான வார்டிலிருந்து சிலநூறு வாக்குகளைக் கொண்டுபோய் வீக்காக உள்ள வார்டில் சேர்ப்பது, வீக்காக உள்ள வார்டிலிருந்து சாதகமான வார்டுக்கு சிலநூறு ஓட்டுக்களை மாற்றியுள்ளனர். அதாவது, இரண்டு வார்டையும் சாதகமான வார்டாக மாற்றுவதாக நினைத்து சாதகமான வார்டையும் வீக்காக்கியுள்ளார்கள். இந்த மாற்றம் விபரீதத்தில்தான் முடியும்'' எனக் கவலைப்பட்டார்கள்.
"அரசு நிர்வாகரீதியாக வார்டு மறுவரையறை செய்ய கமிட்டி அமைக்கும். அப்படிப்பட்ட கமிட்டிகள் இன்னும் உருவாக்கப்படவில்லை. ஆளும்கட்சி வார்டு எப்படி பிரிக்கிறதோ அதனை ஏற்று அரசு அதிகாரிகளும் வார்டுகளைப் பிரித்து அறிவிப்பார்கள். இதனால் எங்கள் பிரச்சனையை எங்கும் முறையிட முடியாது' என்கிறார்கள் ஆளும்கட்சி பிரமுகர்களே.