கூடுதலாக மின் மயானங்கள், மாயமானவரை கண்டுபிடிக்க ஆட்கொணர்வு மனு என அனைத்து திசைகளிலும் ஈஷாவின் ஜக்கிக்கு எதிராக பிரச்சனைகள் சுழன்றுவருகின்றது. இந்நிலையில் "இது எம்மாத்திரம்...? அமைச்சரின் மனைவியே ஜக்கியின் பிடியில்தான் இருக்கின்றார்' என சோசியல் மீடியாவில் தகவல் ஒன்று வைரலாகி, அரசியலில் சலசலப்பை உண்டாக்கியுள்ளது.
சமீபத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்திருந்த பெரியாரிய அம்பேத்கரிய இயக்கத்தினர், "ஏற்கனவே ஈஷாவில் சுடுகாடும், இடுகாடும் இருக்கின்றது. மேலும், ஈஷாவில் மர்ம மரணங்கள் தொடர்கின்றன. இதுகுறித்து பலமுறை போராட்டங்கள் நடத்திவரும் நிலையில், வேண்டுமென்றே ஈஷா மையத்தில் "காலபைரவர் தகன மண்டபம்' என்ற பெயரில் மின்தகன மேடை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது. அதனை உடனே தடுத்து நிறுத்த வேண்டும் என ஆட்சியரிடம் மனுவினை அளித்தனர்.
இக்கரை போளுவாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரோ, "ஈஷா அமைந்துள்ள மலைப்பகுதி பாதுகாப்பு ஆணையத்தின் கீழ் அமைந்துள்ள இக்கரை போளுவாம்பட்டி கிராமம், யானைகள் வாழ்விடமாக உள்ளது. அதுபோல், சட்டப்படி குடியிருப்புக்கள் மற்றும் நீர்நிலைகள் அமைந்துள்ள பகுதிகளில் இருந்து 90 மீட்டர் தூரத்துக்கு அப்பால்தான் மயானங்கள் அமைக்கப்பட வேண்டும். ஆகையால், காலபைரவர் தகன மண்டபம் அமைக்க அனுமதியளித்த உத்தரவுக்கு தடை விதிக்கவேண்டும்' என பொதுநல வழக்கினை தொடர்ந்திருந்தார். முன்னதாக பணமே பிரதானம் என இக்கரை போளுவாம்பட்டி கிராம பஞ்சாயத்து தலைவரின் பரிந்துரை அடிப்படையில், தொண்டாமுத்தூர் பஞ்சாயத்து யூனியன் வட்டார வளர்ச்சி அலுவலர் மின்தகன மேடை அமைக்க உத்திரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
காலபைரவர் கர்மா தகன மண்டபம்:
""இறந்தவர்கள் உடலை விட்டு வெளியேறும் ஆன்மா ஒரு நல்ல இடத்திற்குத்தான் செல்ல வேண்டும். அதனை நாம் கண்டுகொள்வதில்லை. ஆதலால் இறந்தவரின் ஆன்மா கண்ட இடத்தில் அலைகின்றது. எனவே அந்த ஆன்மாவின் விருப்பத்திற்கு தகுந்தாற்போல் சில விஷயங்களை செய்தால் ஆன்மா சாந்தி அடைகின்றது. இதற்காகவே காலபைரவ கர்மாவின் அடிப்படை. இது போல் காலபைரவ சாந்தி என்னும் செயல்முறையும் இருக்கிறது. அதை இறந்த பிறகு எப்போது வேண்டுமானாலும் செய்யலாம். இந்த செயல்முறைகளுக்காக ஈஷாவின் லிங்க பைரவி சக்தித்தளமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன்மூலம் இறந்தவர்களை சொர்க்கத்திற்கே அனுப்பலாம் என்பதன் அடிப்படையில் புதிதாக கட்டப்படுவதே காலபைரவர் கர்மா மின் தகன மண்டபம்'' என்கின்றனர் விபரமறிந்தவர்கள்.
ஈஷாவில் பணியாற்றிய நபர் ஒருவரோ, ""சார்... இது அத்தனையும் சதுரங்க வேட்டை திரைப்படப் பாணி. இறந்தவர்களின் ஆன்மாவை சொர்க்கத்திற்கு அல்லது அந்த ஆன்மா வேண்டும் இடத்திற்கு அனுப்புவதற்கு எப்படி ஜக்கி அனுப்புவார்? அவர் என்ன கடவுளா? இது ஏமாற்று வேலை சார். காலபைரவ கர்மா செய்வதற்கு இயற்கை மரணமாக இருந்தால், 50 வயதிற்கு மேல் 14 நாட்களுக்குள், 50 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு 48 நாட்களுக்குள் செய்ய வேண்டும். இதில், 84 வயதிற்கு மேல் வாழ்ந்திருந்தாலோ, 1008 பௌர்ணமிகள் பார்த்திருந்தாலோ எப்போது வேண்டுமானாலும் செய்யலாம். இதற்கு இறந்தவரின் புகைப்படம், உடை (உள்ளாடை மற்றும் சேலை தவிர) இந்த செயல்முறைக்கு தேவை. இறந்தபோது அணிந்திருந்த உடை வேண்டாம்?. இரத்த சம்பந்தமான உறவினர் ஒருவர் இந்த செயல்முறையின் போது அருகில் இருக்க வேண்டும் என்கின்ற விதிமுறையும் இங்குண்டு. அதுபோல், காலபைரவ சாந்தி எனும் நடைமுறையும் இங்குண்டு. ஒவ்வொரு அமாவாசை அன்றும் நள்ளிரவில் நடைபெறும் இந்த சாந்திக்கு இறந்தவரின் புகைப்படம், பெயர், பிறந்த தேதி, இறந்த தேதி, அனுப்புநரின் முகவரி மற்றும் அலைபேசி எண் ஆகியவை தேவை என்கின்ற நியதிகள் உண்டு. இதற்காக வரும் மனிதனை உட்காரவைத்து உடுக்கையடித்து லட்சக்கணக்கில் கறந்துவிடுவதே ஜக்கியின் பலே திட்டம். இது இப்பொழுதுவரை நடைபெறுகின்றது. அதிகளவில் ஆட்கள் குவியக் குவிய புதிதாக மின்தகன மேடை தேவைப்படுகின்றது'' என்கின்றார் அவர்.
ஜக்கியை ஆட்டிப்பார்த்த ஆட்கொணர்வு மனு:
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், சுந்தர் மோகன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்த பவதுத்தா என்ற கணேசனின் ஆட்கொணர்வு மனு ஒன்றில், ஆஜரான காவல்துறையோ, ""இந்த வழக்கில் இதுவரை 36 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. புலன்விசாரணை வேகமாக நடந்து வருகிறது'' என கூறி வைக்க.. "விசாரணையை விரைந்து நடத்தி காணாமல் போனவரை கண்டுபிடிக்க வேண்டும்' என்று காவல்துறைக்கு உத்தரவிட்டனர் நீதிபதிகள்.
இதுகுறித்து பேசிய மனுதாரரின் வழக்கறிஞர் ரமேஷோ, ""கோவை ஈஷா மையத்தில் கடந்த 2007ஆம் ஆண்டு முதல் பவதுத்தா என்ற கணேசன் தன்னார்வலராக பணியாற்றி வந்தார். கடந்தாண்டு மார்ச் இரண்டாம் தேதி முதல் ஈஷா மையத்தில் இருந்து அவரை காணவில்லை. இது தொடர்பாக கடந்த ஆண்டு மார்ச் 5-ம் தேதி ஈஷா மைய பொறுப்பாளர் தினேஷ்ராஜா, கோவை மாவட்ட ஆலந்துறை காவல் நிலையத்தில் புகாரளித்திருந்தார். காவல்துறை அமைதி காத்த நிலையில், வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், "ஓராண்டு காலமாகியும் என் சகோதரரை கண்டுபிடிக்கவில்லை. எனவே காணாமல்போன என் சகோதரரை கண்டுபிடித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்படி காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும்' என்று கூறியிருந்தார். அதனடிப்படையில் காவல்துறையினர் தங்களது விளக்கத்தை தெரிவித்தனர். எனினும் இந்த வழக்கு விரைவில் முற்றுப்பெறும்'' என்றார் அவர்.
ஜக்கியின் வலையில்...
ஞாயிற்றுக்கிழமை காலையிலிருந்தே முகநூல் தொடங்கி வாட்ஸ்அப் வரை, "அமைச்சரோட மனைவி ஜக்கி பிடியிலிருக்கின்றார்' என செய்தி வைரலாக, "யார் அந்த அமைச்சர்?' என்கின்ற கேள்வி அனைவரையும் குடைந்தது. ""தமிழக அமைச்சரவையில் மிக முக்கிய இலாக்காவின் அமைச்சர் அவர்' என செய்திகள் உலாவின.