தமிழ்நாடு, புதுச்சேரியிலுள்ள 40 நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுவை ஆளுங்கட்சியான தி.மு.க., அ.தி.மு.க. உட்பட அனைத்துக் கட்சிகளும் நிர்வாகிகளிடமிருந்து வாங்கின.இதில் தி.மு.க. சார்பில் 2,984 பேரும், அ.தி.மு.க. சார்பில் 2,475 பேரும் விருப்ப மனு செய்திருந்தனர். தி.மு.க.வில் ஒரு தொகுதிக்கு சராசரியாக 74 பேர் என்ற அளவுக்கு விருப்ப மனு தந்திருப்பதாகச் சொல்கிறது தலைமை. நிஜமோ வேறாக இருக்கிறது என்கிறார்கள் தி.மு.க. நிர்வாகிகளில் சிலர். கொங்கு, டெல்டா, தெற்கு பகுதிகளிலுள்ள தொகுதிகளைத் தவிர மற்ற தொகுதிகளில் விருப்ப மனு தந்தவர்களின் எண்ணிக்கை மிகக்குறைவு சில தொகுதிகளில் விரல்விட்டு எண்ணக்கூடியவர்களே விருப்ப மனு செய்துள்ளனர் எனச்சொல்லி அதிர்ச்சியைத் தந்தனர்.
இதுகுறித்து அறிவாலயத்தோடு தொடர்பிலுள்ள தி.மு.க. முக்கிய நிர்வாகிகளிடம் பேசியபோது, "வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் சிட்டிங் எம்.பி. கதிர்ஆனந்த், முன்னாள் எம்.பி. முகமதுசகியின் மகன் ஷபி, மருத்துவர் நந்தகுமார் ஆகிய மூவர் மட்டுமே விருப்ப மனு தந்திருந்தனர். திருவண்ணாமலை தொகுதியில் சிட்டிங் எம்.பி. அண்ணாதுரை, மருத்துவரணி மாநில துணைத்தலைவர் கம்பன், பொறியாளர் அணி மாநிலச்செயலாளர் எஸ்.கே.பி.கருணாநிதி, திருப்பத்தூர் ந.செ. ராஜேந்திரன், ஜோலார்பேட்டை ஒ.செ. கவிதா தண்டபாணி, அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதியில் சிட்டிங் எம்.பி. ஜெகத்ரட்சகன், அமைச்சர் காந்தியின் மகனும், சுற்றுச்சூழல் அணியின் மாநில துணைச்செயலாளருமான வினோத் காந்தி, மாவட்ட பொருளாளர் சாரதி, அரக்கோணம் கண்ணையன், ஆரணி நாடாளுமன்றத் தொகுதியில் திருவண்ணாமலை வடக்கு மா.செ. தரணிவேந்தன் உட்பட 4 பேர், கள்ளக்குறிச்சி தொகுதியில் சிட்டிங் எம்.பி. கௌதம்சிகாமணி, தியாகதுருவம் ந.செ. மலையரசன், முன்னாள் மா.செ. அங்கயற்கண்ணி, மா.செ. உதயசூரியன் மகன் பர்னாலா, சேலம் மா.செ. சிவலிங்கம் ஆகியோர் மனு செய்தனர். இதுபோல் சில தொகுதிகளில் இப்படி விரல்விட்டு எண்ணக்கூடியவர்களே மனு தந்திருந்தனர்.
இப்போது தேர்தலில் போட்டியிட விருப்ப மனு தரவே நிர்வாகிகள் பயப் படுகிறார்கள். அமைச்சர் கைகாட்டும் நபருக்கு அல்லது அமைச்சரின் வாரிசுக்கு சீட் தாருங்கள் எனத் தங்கள் ஆசையை அடக்கிக்கொண்டு விருப்ப மனு தருகிறார்கள் அல்லது தர வைக்கப்படுகிறார்கள். பெரம்பலூரில் அமைச்சர் நேருவின் மகனுக்காக, வேலூரில் கதிர்ஆனந்த்துக்காக, அரக்கோணத்தில் விநோத்காந்திக்காக 40 பேர், 50 பேர் மனு தந்தனர். தங்களுக்கு வேண்டுமென விருப்ப மனு தந்தால் அமைச்சர் நம்மை ஓரங் கட்டிவிடுவார், மா.செ. கோவிச்சிக்குவார் எனப் பயப்படுகிறார்கள் நிர்வாகிகள். இளைஞரணி செயலாளர் உதயநிதியின் குட் புக்கில் இடம்பிடித்துள்ள சிட்டிங் எம்.பி. ஒருவர், மீண்டும் சீட் கேட்டால் அமைச்சர் கோபித்துக்கொள்வார் என மனுவே தாக்கல் செய்யவில்லை. தலைமையே அழைத்து மனு செய்யச்சொன்னபோதும் அமைச்சரிடம் கேட்டு கடைசி நாளில் கடைசி இரண்டு மணி நேரத்துக்கு முன்பாக மனு செய்தார்.
மற்றொரு அமைச்சர், தன் மகனுக்கு சீட் கேட்கிறார் என்றதும், தகுதி யோடும், வசதியோடுமிருந்த பலரும் விருப்ப மனு செய்யவில்லை. ஆரணி நாடாளு மன்றத் தொகுதியிலுள்ள 6 சட்டமன்றத் தொகுதியிலும், திருவண்ணாமலை மாவட்டத்துக்குட்பட்ட 4 சட்டமன்றத் தொகுதியிலும், வடக்கு மா.செ. தவிர வேறு ஒருவரும் மனு செய்யவில்லை. செஞ்சி, மயிலத்திலிருந்து சிலர் மட்டும் மனு செய்தனர்.
அ.தி.மு.க.வில் மக்களை ஈர்க்கும் தலைவரே இல்லையென்றாலும் 2,400க்கும் மேற்பட்டோர் விருப்ப மனு செய்திருக்கிறார்கள். இவர்களில் பெரும் பாலானவர்கள், தங்களுக்காகவே சீட் கேட்டவர்கள். இத்தனைக்கும், தொகுதிக்கு 20 கோடி செலவு செய்யவேண்டுமென கண்டிஷன் போட்டும் இத்தனை பேர் மனு கொடுத்துள்ளார்கள். நம்மை யாரும் பழிவாங்கமாட்டார்களென நம்புகிறார்கள்.
இதுபோன்ற நம்பிக்கை எங்கள் கட்சியில் இல்லை. கனிமொழி, டி.ஆர்.பாலு, ஆ.ராசா, தயாநிதிமாறன் போன்றவர்கள் போட்டியிடும் தொகுதிகளைத் தாண்டி சாதாரண தொகுதிகளிலும் விருப்ப மனு தரவே பயப்படுகிறார்கள். கட்சியின் மாவட்டச்செயலாளர், அமைச்சர்களைப் பார்த்து மற்ற நிர்வாகிகள் பயப்படும் நிலையே உள்ளது.
இதனால் கட்சி மீதும், தலைமை மீதும் நம்பிக்கை எப்படி வரும்? தொண்டன் தலைமையைக் கண்டு பயப்படலாம், கட்சியின் மா.செ. அமைச்சரையும், அவர்களின் வாரிசுகளையும் கண்டு பயப் படும் நிலையே இங்கிருக்கிறது. இதனைப் பார்க்கும் இளைய சமுதாயம் தி.மு.க.வுக்குப் போனால் நமக்கு பதவியோ, பொறுப்போ கிடைக்காது என மாற்றுக்கட்சிக்கு போகிறார்கள். கட்சி மீது இளைஞர்கள் பார்வை எப்படி இருக்கிறது என்பது, களத்திலுள்ள எங்களுக்கு தெரியும். தலைமை இதை உணர்ந்து மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும்'' என்றார்கள்.