தி.மு.க. எம்.எல்.ஏ. புகழேந்தியின் திடீர் மறைவால், அவரது விக்கிரவாண்டி தொகுதி, விரைவில் இடைத்தேர்தலைச் சந்திக்க இருக்கிறது. கடந்த 8 ஆண்டுகளில் இந்தத் தொகுதி இரண்டாவது இடைத் தேர்தலை சந்திக்க இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விக்கிரவாண்டி தொகுதியின் கடந்த கால வரலாற்றை லேசாகப் புரட்டிப் பார்ப்போம். விவசாயப் பகுதிகளைக் கொண்ட கண்டமங்கலம் தனித் தொகுதியாக இருந்த இது, தொகுதி மறு சீரமைப்பிற்கு பிறகு 2011-ல் விக்கிரவாண்டி என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அப்போதைய சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் சி.பி.எம். கட்சி வழக்கறிஞர் ராமமூர்த்தி எம்.எல்.ஏ.வாக வெற்றிபெற்றார். அடுத்து 2016 சட்டமன்றத் தேர்தலில், பொன்முடியின் கல்லூரி நண்பரான ராதாமணிக்கு இரண்டாவது முறையாக அங்கே கட்சித் தலைமை வாய்ப்பளிக்க, அவர் அந்தமுறை எம்.எல்.ஏ.வானார்.
இடையில் உடல்நலம் பாதிக்கப்பட்ட ராதாமணி 2019-ல் மரணமடைய, அதே ஆண்டில் நடைபெற்ற இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பில், விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளரான புகழேந்தி களமிறங்கியபோதும், அ.தி.மு.க. முத்தமிழ்ச்செல்வன் வெற்றிபெற்றார். தி.மு.க. சார்பில் போட்டியிட்டுத் தோல்வியடைந்த புகழேந்திக்கு 2021 பொதுத்தேர்தலில் கட்சித் தலைமை வாய்ப்பளித்தததில், அவர் முத்தமிழ்ச் செல்வனைத் தோற்கடித்து வெற்றிபெற்றார்.
இந்தநிலையில்தான் திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்ட தி.மு.க. புகழேந்தி, கடந்த மாதம் நான்காம் தேதி உயிரிழந்தார். இது தி.மு.க. தரப்பை கடும் சோகத்தில் ஆழ்த்தியது. இந்தநிலையில் விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தலை அறிவிக்கவிருக்கிறது தேர்தல் ஆணையம்.
எனவே, இந்தத் தொகுதியைக் குறிவைத்து, தி.மு.க.விலும், அ.தி.மு.க.விலும் இப்போதே பலரும் காய்நகர்த்தி வருகின்றனர்.
குறிப்பாக, தி.மு.க. சார்பில் மறைந்த எம்.எல்.ஏ. புகழேந்தியின் மருமகள் பிரசன்னதேவி சீட்டை எதிர்பார்க்கிறார். இவர் ஏற்கனவே கோலியனூர் ஒன்றியகுழுத் தலைவராக பதவி வகித்தவர். இதே போல் புகழேந்தி மகன் செல்வகுமாரும் அப்பாவின் இடத்தில் அமர்வதற்கு விருப்பப்படுகிறார். மேலும் கட்சியின் மாவட்டப் பஞ்சாயத்துக் குழு தலைவ ராக உள்ள ஜெயச்சந்திரனுக்கும் சீட் மீது கண் இருக்கிறது. இவர் பல தேர்தல்களில் சீட் கேட்டு மோதியவர். இந்த முறையாவது தனக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்.
இவர்களுக்கிடையில், விழுப்புரம் மாவட்டத் தில் கடந்த 40 ஆண்டுகளாக தி.மு.க.வில் அசைக்க முடியாத மனிதராக வலம்வருபவர் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி. இவர் ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தின் செயலாளராகவும் அமைச்சராகவும் கொடி கட்டி பறந்தவர், தற்போது விழுப்புரத்தில் இருந்து கள்ளக்குறிச்சி தனி மாவட்டமாக பிரிந்துவிட்டது. இருக்கும் விழுப்புரம் மாவட்டத்திலும் வடக்கு, தெற்கு, என இரண்டு மாவட்ட செயலாளர் பதவிகள் முளைக்க, இதில் வடக்கு மாவட்ட செயலாளராக அமைச்சர் செஞ்சி மஸ்தான், தெற்கு மாவட்ட செயலாளராக மறைந்த எம்.எல்.ஏ. புகழேந்தி என பொறுப்பு தரப்பட்டது. இப்படிப்பட்ட நிலையில் சொத்து குவிப்பு வழக்கில் பதவிப் பறிப்புக்கு ஆளாகி, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவால் மீண்டும் அமைச்சர் பதவியை அடைந்திருக்கிறார் பொன்முடி. இப்படிப்பட்ட பொன்முடியின் வாரிசான அவர் மகன் கௌதம சிகாமணியையே மா.செ.வாக்கி, அவரையே வேட்பாளராகவும் ஆக்கவேண்டும் என்கிற கோரிக்கைக் குரல், பொன்முடி ஆதரவாளர்கள் மத்தியிலிருந்து எழுந்துகொண்டிருக்கிறது. இதேபோல் ரெட்டியார் சமூகத்துக்குப் பிரதிநிதித்துவம் தரும் வகையில், ஒன்றியச் செயலாளர் வேம்பி ரவி தனக்கு சீட்டை எதிர்பார்க்கிறார்.
எதிர்க்கட்சியான அ.தி.மு.க.விலும் போட் டிக்குப் பஞ்சமில்லை. 2019 இடைத்தேர்தலில் வெற்றிபெற்று 2021 பொதுத் தேர்தலில் தோல்வியுற்ற முத்தமிழ்ச்செல்வன், ஒன்றியகுழு துணைத் தலைவர் எசாலம் பன்னீர்செல்வம். துறவி சுப்பிரமணியம் ஆகியோர் சீட்டுக்கு மோதிக் கொண்டிருக்கிறார்கள். மாவட்ட செயலாளர் சி.வி. சண்முகம் கை காட்டுபவர்தான் இங்கு வேட்பாளர் என்கிறார்கள் பலரும். இந்த நிலையில் நியூஸ் ஜெ. டி.வி. நிர்வாக இயக்குனரும் சி.வி.சண்முகத்தின், சகோதரரருமான ராதாகிருஷ்ணன் வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என்கிற பேச்சும் பலமாக உள்ளது. காரணம், அரசியலில் தம்பிக்கு பல வகை யிலும் உதவி செய்துவருபவர் ராதாகிருஷ்ணன்.
இப்படி போட்டியால் விறுவிறுப்படைந் திருக்கும் விக்கிரவாண்டியில் சுமார் மூன்றரை லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஒன்றரை லட்சம் பேர் வன்னிய சமூகத்தினர். இவர்களுக்கு அடுத்தநிலையில் பட்டியல் சமூகத்தினரும், அடுத்தடுத்து பிற சமூகத்தினரும் இங்கே வாழ்கின் றனர். அனைத்துக் கட்சிகளும் சாதி, மத பேத மில்லை என்று முழங்கினாலும், தங்கள் கட்சிகளின் சார்பில் பெரும்பாலும் இங்கு வன்னியர் சமூ கத்தினரையே நிறுத்தியிருக்கின்றன. இந்தமுறையும் இதே நிலை தொடரலாம் என்று தெரிகிறது.
கண்டமங்கலம் தொகுதியாக இது இருந்த போது, இங்கு அ.தி.மு.க. வலிமையாக இருந்தது. எனவே இதை மனதில் வைத்துக்கொண்டு ஆளும்கட்சியான தி.மு.க., தன் முழு பலத்தையும் பிரயோகித்து, இடைத்தேர்தலில் வெற்றிபெற்றே ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறது.
இது வன்னியர்களுக்கு பலமுள்ள தொகுதி என்பதால், பா.ஜ.க. கூட்டணி ஆதரவோடு இங்கே பா.ம.க. களமிறங்கத் துடிக்கிறது. அப்படி இங்கே பா.ம.க. களமிறங்கினால், அக்கட்சியின் வடக்கு மாவட்ட தலைவர் சிந்தாமணி புகழேந்தியும், ஏற்கனவே ஒரு தேர்தலில் இங்கு போட்டியிட்டு 45 ஆயிரம் வாக்குகள் பெற்ற பனியாபுரம் அன்புமணியும் தங்களுக்கு சீட் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கின்றனர்.
இப்படிப்பட்ட பல்ஸ்ரேட்டைக் கொண்டி ருக்கும் விக்கிரவாண்டியில், அனைத்துக் கட்சி களும் வெற்றிக்கான கனவுகளை வளர்த்துக் கொண்டிருக்கின்றன.