ந்தத் தெருவே சோகத்தில் மூழ்கியிருந்தது. ஆண்டாள் அழகர் இல்லத்தில் விஜயகாந்த்தின் அக்கா விஜயகாந்தின் தம்பி உள்ளிட்ட அவரது உறவினர்கள் அழுதுகொண்டே சென்னைக்கு கிளம்பத் தயாரானார்கள். அப்போது அவர்களது வீட்டில் மாட்டியிருந்த விஜயகாந்தின் பழைய புகைப்படத்தை கையில் வைத்தபடி அழுதுகொண்டிருந்த தம்பி செல்வராஜைப் பார்த்தோம்.

viji

"சார் அண்ணனைப் பார்க்கப்போறோம். என்னால அவரை உயிரற்ற உடலா பார்க்க தெம்பு இல்லை. எங்க குடும்பத்தில் மொத்தம் 11 பேர். விஜயராஜு பிறந்து மூன்று வயதுகூட ஆகவில்லை. ஆண்டாளம்மா இறந்துட்டாங்க. அவுங்க இறக்கிறப்ப 4 குழந்தைகள். அடுத்து அவுங்க தங்கையான ருக்குமணியம்மா விற்கு பிறந்தவர்கள் 7 பேர். ஆனா எல்லோரும் ஒன்னாத்தான் கூட்டுக் குடும்பமா இருந்தோம். இப்பவரை எல்லோரையும் பார்த்துகிறது விஜி அண்ணன்தான். நல்லது கெட்டதுக்கு, என் குழந்தைகள் படிப்பு, கல்யாணம் எதுவென்றாலும் அண்ணன்தான். அவர் எங்க குடும்பத்தைப் பொறுத்தவரை ”தாயுமானவன்.” எங்க குடும்பத்திற்கு மட்டுமல்ல… இந்த தமிழ்நாட்டிற்கே தாயுமானவர். அந்தளவுக்கு எல்லோ ரையும் நேசித்தவர் அண்ணன். அவர் இருக்கும் தைரியத்தில்தான் இருந்தேன். இந்த செய்தியைக் கேட்டு மொத்த குடும்பமும் உடைஞ்சு போய்ட் டோம்''’என்றார்.

விஜயகாந்தின் எதிர்வீட்டில் இருப்பவர் அலமேலு அம்மா. சிறுவயதில் விஜயகாந்த் வந்து விளையாடிய வீடுகளில் ஒன்று. "தம்பி, நானும் ருக்குமணி அம்மாவும் சிறுவயது சினேகிதிகள். விஜயராஜு சிறுவயதிலேயே துறுதுறுவென்று இருக்கும். அப்புறம் ரைஸ்மில்லைப் பார்த்துகொண்டது. எங்க வீட்டில்தான் விளையாடும். இப்ராஹிம், ரவிச்சந்திரன், சுந்தர்ராஜன் என்று எப்போது பார்த்தாலும் கூட்டத்தோடுதான் இருக்கும். அடிக்கடி இப்ராஹிம் வந்து விஜயராஜுவை சினிமாவுக்கு கூட்டிக்கிட்டு போவார். அது அவுங்க அப்பாவுக்குத் தெரியாது. தெரிந்து சிலசமயம் கம்பை எடுத்துக்கொண்டு அடிக்கவருவார். அப்ப எங்க வீட்டிற்குள் வந்து ஒளிந்து கொள்ளும்.

viji

Advertisment

திடீரென இப்ராஹி மோட சினிமாவில் நடிக்க சென்னைக்குப் போனது. "இனிக்கும் இளமை' படத்தில் நடிச்சிருக்கேன் அலுமேலு அம்மா என்று சொல்லி, திடீர்னு ஒருநாள் வந்து எல்லோரையும் மதுரை சென்ட்ரல் தியேட்டருக்கு கூட்டிக்கிட்டுப் போனது. அந்த சமயத்தில் பார்த்தது. அதன்பின் பல படங்கள் நடித்து பெரிய ஆளானபிறகு அப்பா இறந்தப்ப பார்த்தது. சில சமயம் தன் அண்ணன், தம்பிகளைப் பார்க்கவரும்போது என்னையும் வந்து பார்க்கும். அரசியலில் பெரிய தலைவராகப் பார்க்கும்போது மிகுந்த சந்தோஷமாக இருந்தது. அதுவும் தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவராக அமர்ந்திருந்ததைப் பார்க்கும்போது பெருமையாக இருந்தது. நான் தூக்கிவச்சிருந்த பையன் மக்கள் போற்றும் தலைவராக உயர்ந்தது என் வாழ்வில் நான் செய்த பாக்கியம். இந்த துயர செய்திகேட்டு மிகவும் மனசு கஷ்டமா இருக்கு தம்பி''’என்று கண்ணீர் சிந்தினார்.

அதே தெருவில் விஜயகாந்துடன் விளையாடிய பால்ய நண்பர்களைத் தேடினோம். நாகராஜனைச் சந்தித்தோம். “"சார், விஜி அண்ணே எனக்கு சீனியர். அப்பல்லாம் சினிமா வாய்ப்பு தேடி சென்னைக்கு போகவர இருந்தது. அந்த ராவுத்தர் அண்ணே கூடவே இருக்கும். நட்பு என்றால் விஜி- ராவுத்தர் நட்புதான். அந்தளவுக்கு நெருக்கமாக இருந்தார்கள். மதுரைக்கு அழகர் திருவிழாவிற்கு வருவார். அப்போது ராவுத்தரும் விஜி அண்ணனும் அந்த “ஜாவா பைக்கில்” வலம் வரும் அழகே தனி. அவ்வளவு கம்பீரமாக இருப்பார்.

யாருக்கு என்ன பிரச்சனை என்றாலும் விஜி தலையிட்டு தீர்த்துவைக்கும். அதனால் அவுங்க அப்பா என்ன இப்படி இருக்கானே என்று கவலைப்படுவார். மதுரையில் சினிமா ஆசையால் தவித்துக்கொண்டி ருந்த விஜயகாந்தை சென்னைக்கு கூட் டிச்சென்றது இப் ராஹிம் ராவுத்தர். சரி அப்படியாவது பொறுப்பா பெரிய ஆளா வரட்டும் என்று அவுங்க அப்பா நினைத்தார். விஜயகாந்த் சினிமா வாய்ப்புத் தேடி ஆரம்ப காலத்தில் அலைந்தபோது நிறைய சினிமா கம்பெனி களால் அவமானப்படுத்தப்பட்டார். அப்போது எல்லாம் ஆறுதல் சொன்னதோடு நிற்காமல் திட்டியவர்களைத் தேடிப்போய் சண்டை போட்டு வந்தேன் என்று மதுரைக்கு வரும்போது சொல்வார் ராவுத்தர். தனது நண்பன் விஜயகாந்த் மீது மிகுந்த பாசம் கொண்டதால் திருமணம் செய்துகொண்டால் தனக்கு வரும் மனைவி நட்பைப் பிரித்து விடுவாளோ என்று நினைத்து கல்யாணமே செய்துகொள்ளாமல் விஜிக்காகவே வாழ்ந்தவர் ராவுத்தர். விஜயகாந்த் மனைவி பிரேமலதாவை பெண் பார்த்து அவருக்குக் கட்டி வைத்தவரும் ராவுத்தர்தான். விஜிக்கு எல்லாமே இப்ராஹிம்தான்

ஒருமுறை விஜயகாந்த் அலுவலகத்தில் இன்கம்டாக்ஸ் ரெய்டு நடந்தது. அப்போது உங்கள் சம்பளம் எவ்வளவு, எங்கு முதலீடு செய்துள்ளீர்கள் என இன்கம் டாக்ஸ் அதிகாரிகள் துருவித் துருவி கேட்கிறார்கள். விஜயகாந்த் சொன்ன பதில், “ராவுத்தருக்குதான் எல்லாம் தெரியும். இதைக் கேட்டதும் குழம்பிய அதிகாரிகள் ராவுத்தரைக் கேட்டபோது, "உண்மையில் அவனுக்கு சம்பளம், சொத்து. முதலீடு எதுவுமே தெரியாது'” என்று சொல்லி அவர் எல்லா விவரமும் தந்து அனுப்பினார் என்று சொல்வார்கள்

viji

2015-ஆம் ஆண்டு மறைவதற்கு முன்பாக, உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இப்ராஹிம் ராவுத்தரை விஜயகாந்த் அடிக்கடி சென்று சந்தித்துவந்தார். சுயநினைவிழந்து இப்ராஹிம் ராவுத்தர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவருக்கும் விஜயகாந்துக்கும் இடையிலான நட்பு குறித்த கடிதம் ஒன்றை விஜயகாந்த் எழுதியிருந்தார். அக்கடிதத்தில் "நண்பா, நீ உடல்நிலை சரியில்லாமல் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாய் என்ற செய்தி கேட்டு வேதனையுடன் உன்னை உடல்நலம் விசாரிக்க வந்தேன். அங்கு நீ சுயநினைவு கூட இல்லாத நிலையில் கட்டிலில் இருந்ததைக் கண்டதும் என் மனம் பட்ட துயரத்தை நான் மட்டுமே அறிவேன். உன்னைக் கண்டவுடன் சிறுவயது முதல் நாம் கொண்ட உண்மையான நட்பும் வாழ்க்கையில் சாதிக்கவேண்டும் என்ற உறுதியோடு மதுரையிலிருந்து சென்னைக்கு வந்து சினிமா உலகில் போராடி நாம் பெற்ற வெற்றி தோல்விகளும் என் கண்முனே வந்துசென்றன. காலத்தின் ஓட்டத்தில் எத்தனையோ மனக்கஷ்டங்களும், சந்தோஷங்களும் வந்து சென்றிருந்தாலும் என்றுமே உன்னை என் மனம் மறந்ததில்லை. இப்ராஹிம் நீ மீண்டும் நல்ல ஆரோக்கியத்தோடு நலம்பெற்று வரவேண்டும் என்று பிரார்த்தனையை கடவுளிடத்தில் வைக்கிறேன். நண்பா மீண்டு வா, எழுந்து வா. என்றும் உன்னுடன் இருக்கும் விஜி'’ என்று எழுதியிருந்தார் விஜயகாந்த்.

தன் உயிர் நண்பன் கிட்டேயே போய்ட்டார் விஜயகாந்த். நிரந்தரமா அவர் நேசித்த மதுரையையும் தமிழ்நாட்டு மக்களை யும் பிரிந்து சென்றதுதான் வேதனையாக இருக்கு'' என்று சொல்லும்போதே நா தழுதழுத்தது நாகராஜனுக்கு.

மதுரையின் மைந்தனாகத் தொடங்கி, தமிழர்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமாகி, ஒரு அரசியல் கட்சித் தலைவராக மறைந்திருக்கும் விஜயகாந்தின் மறைவுக்கு மதுரை மட்டு மல்லாமல், தமிழகமே கண்ணீர் விட்டுக் கொண்டிருக்கிறது.

Advertisment