"அ.தி.மு.க. இளைஞர் இளம்பெண்கள் பாசறை' மாநில துணைச் செயலாளராக இருந்த விஷ்ணுபிரபு, கடந்த மே மாதம் தி.மு.க.வில் இணைந்தார். அ.தி.மு.க.வில் இருந்து விலகியது உள்பட பல்வேறு கருத்துக்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.
27 வயதிலேயே அ.தி.மு.க. இளைஞர் இளம்பெண்கள் பாசறை மாநில துணைச் செயலாளர் பொறுப்பை பெற்ற நீங்கள், அக்கட்சியில் இருந்து வெளியேற காரணம் என்ன?
2010-ல் முதல்முறை ஜெ.வை சந்தித்தேன். அதற்கு பிறகு, கார்டனுக்கு அம்மா வரச்சொன்னதாக ஜெ.வின் உதவியாளர் பூங்குன்றன் அழைப்பின் பேரில் சென்றேன். மாவட்ட இளைஞர் பாசறை துணைச் செயலாளராக இருந்த என்னை மாநில துணைச் செயலாளராக ஜெ. நியமித்தார். ஜெ. இருக்கும் வரை அனை வருக்கும் ஒரு பயம் இருக்கும். அமாவாசை வந்தாலே அனைத்து அமைச்சர்களும் டென்ஷ னோடுதான் இருப்பார்கள். ஜெ. மறைவுக்குப் பிறகு நிலைமை மாறிவிட்டது. ஒரு அமைச்சரை சந்திக்க சென்றேன். அப்போது அந்த அமைச்சர் இல்லை. அமைச்சர் உட்கார வேண்டிய இடத்தில் அவரது மகன் உட்கார்ந்திருந்தார். இது போன்று அமைச்சர்கள் பலரது குடும்பத்தினர்கள், உறவினர்களின் ஆதிக்கம் அதிகமானது. தொடர்ந்து பல தவறுகள் நடந்தது. கேட்பதற்கு ஆள் இல்லை என்பதால் அசுர வளர்ச்சி அடைந்தனர். மனசாட்சிக்கு கட்டுப்பட்ட அமைச்சர்கள் சரியாக இருந்தனர்.
"எஸ்.பி.வேலுமணி வீட்டில் நடந்த சோதனையில் எதுவும் கைப்பற்றப்படவில்லை' என்கிறார்களே அ.தி.மு.க.வினர்?
கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பதுபோல் சொல்கிறார்கள். ஆதாரப்பூர்வமாக சிக்கியுள்ளனர். வெள்ளை அறிக்கை வெளியிட்டு இவ்வளவு கடன் இருக்கிறது என தமிழக நிதியமைச்சர் சொல்கிறார். ஆனால் வேலுமணி குடும்பம் மட்டும் பல ஆயிரம் கோடி ரூபாய் சம்பாதித்துள்ளனர். தமிழ்நாட்டில் மட்டும்தான் சோதனை செய்துள்ளனர். கேரளா, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா மாநிலத்திற்கு போகவே இல்லை. கேரளா ஆணைக்கட்டியில் அவர்களுக்கு சொந்தமான சொகுசு பங்களா இருக்கிறது. அங்கெல்லாம் சோதனை நடக்கவில்லை. இதேபோல பல இடங்களில் இருக்கிறது. பல நாடுகளிலும் இருக்கிறது. இதையெல்லாம் மறைக்கவே முடியாது. அவர் ஒரு எளிமையான மனிதர் எனக் காட்டிக்கொண்டிருந்தார். ஆனால் இந்த சோதனைக்குப் பிறகு கோவை மக்களிடம் மிகப்பெரிய மாற்றம் வந்திருக்கிறது. ஒரு லட்சம் கோடி அளவுக்கு வேலுமணி சேர்த்திருப்பார் என பரவலாக பேசு கின்றனர்.
அரசியல் பழிவாங்கல், காழ்ப்புணர்ச்சி என்கிறார்களே?
நந டெக்னாலஜிஸ் என ஒரு கம்பெனிக்கு, ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்கு டெண்டர் ஒப்புதல் ஆனது. அந்த டெண்டரை திரும்பப்பெறுமாறு அந்தக் கம்பெனிக்கு அழுத்தம் கொடுக்கின்றனர். அந்தக் கம்பெனியும் திரும்பப் பெற்றது. அதேபோல பாண்டிபஜாரில் உள்ள மல்டிலெவல் கார் பார்க்கிங் பணிகளை மேற்கொண்ட கம்பெனியை மிரட்டி வெளியே அனுப்பினார்கள். அந்தக் கம்பெனிக்கு பாக்கி தொகை ஒன்றரை கோடியும் தரவில்லை. கொரோனா காலத்தில் கொரோனா நோயாளிகளுக்கு உணவு வழங்க காண்ட்ராக்ட்டை வேளச் சேரி சங்கீதா ஓட்டல் உரிமை யாளர் முரளி எடுக்கிறார். அவருக்கு கொடுக்கவேண் டிய பில் பாக்கி ஒன்றரைக் கோடி ருபாய். அதைப்போய் கேட்கும்போது மேற்கொண்டு 3 கோடி வேணும்... அந்த 3 கோடியை பில்லில் சேர்த்துக்கொடுங்க, அதை நாங்க எடுத்துக் கிறோம். அதோடு உங்களுக்கு தரவேண்டிய பாக்கிக்கு தனியா 50 லட்சம் கமிஷன் வேணும் என கேட்டுள்ளனர். அதற்கு முரளி சம்மதிக்காமல், அப்போது முதலமைச்ச ராக இருந்த எடப்பாடி மற்றும் கமிஷனரிடம் புகார் அளித்தார். பிரதமரிடமும் புகார் அளித்துள்ளார். அ.தி.மு.க. ஆட்சியிலேயே புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. இது அரசியல் பழிவாங்கலா? இதுபோல பல தொழிலதிபர்கள் இருக்கிறார்கள். ஒரு காலத்தில் இவையெல்லாம் வெளிச்சத்திற்கு வரும்.
உள்ளாட்சித் துறையில் சிறந்து செயல்பட்டதாக வேலுமணி சொல்கிறாரே?
ஒரு டெட்டால் பாட்டிலின் விலை 100 ரூபாய், 150 ரூபாய் இருக்கும். அதனை 5 ஆயிரம் லிட்டர் உள்ள டேங்கர் லாரியில் கலக்கவேண்டியது. இதற்கு பெயர் கிருமி நாசினி. அதற்கு பில் எழுதுவது, ரூபாய் ஒரு லட்சம். இந்த மாதிரி 3 மாதம் நடத்தினார்கள். இதுதான் உள்ளாட்சித் துறையில் சிறந்து செயல்பட்டதா? கொரோனா காலத்தில் தொழிலை இழந்தவர்கள், வேலையை இழந்தவர்கள் பலர். ஆனால் இவர்கள் குடும்பம் மட்டும் சொகுசு வாழ்க்கையில் இருந்தார்கள். 2006-ல் அவரோட சொத்து மதிப்பு என்ன? 2016-ல் என்ன? 2021-ல் என்ன? கோவை காந்திபுரத்தில் உள்ள நகைக்கடையில் சேல்ஸ்மேனாக பணியாற்றியவர்தான் வேலுமணி சகோதரர் அன்பரசன். இன்று அபரிமிதமான வளர்ச்சி எப்படி என பொதுமக்களே அதிருப்தியில் இருக்கிறார்கள். ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். இரண்டு பேருமே வேலுமணியை கைவிடக்கூடிய நிலைமை விரைவில் வரும். அப்போது சாஸ்டாங்கமா பா.ஜ.க.வின் காலில் விழுந்து சரண்டர் ஆவார் வேலுமணி. வேற வழியே இல்லை.
"கொடநாடு கொள்ளை சம்பவத்தில் தன் பெயரையும், அ.தி.மு.க. நிர்வாகிகள் பெயரையும் சேர்க்க சதி நடக்கிறது' என எடப்பாடி பழனிசாமி தி.மு.க. அரசு மீது குற்றம் சாட்டியிருக்கிறாரே?
சாதாரண வழக்கில்கூட சி.பி.ஐ. விசாரணை நடத்தவேண்டும் என்று சொன்ன எடப்பாடி, இதிலும் சி.பி.ஐ. விசாரணை கேட்க வேண்டியதுதானே. இந்த வழக்கில் சயான் பேசக்கூடாது என எடப்பாடி ஏன் கோர்ட்டில் தடை வாங்கவேண்டும். ஆகையால் வெளிப்படையான விசாரணைக்கு எடப்பாடி தனது எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்து முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.
படம்: விவேக்