மிழகத்தில் நடைபெற்ற தேர்தலின் முடிவுகள் மோடி எதிர்ப்பலையால் ஏற்பட்டது என அ.தி.மு.க. தரப்பிலிருந்தே குரல் ஒலிக்கும் நிலையில், பா.ஜ.க.வின் மாநில பொதுச் செயலாளரான வானதி சீனிவாசனிடம் இதுபற்றிக் கேட்டோம்.

இந்த தேர்தலில் தமிழகத்தில் வீசியது மோடி எதிர்ப்பலையா? அ.தி.மு.க. எதிர்ப் பலையா?

வானதி சீனிவாசன்: வட இந்திய மக்கள் மோடி வேண்டுமென்று வாக்களித்தார்கள் தமிழக மக்கள் மாற்றம் வேண்டுமென்று வாக்களித்தார்கள். இதில் எந்த அலையும் இல்லை.

vas

Advertisment

பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி தமிழகத்தில் ஏன் தோற்றது?

வானதி சீனிவாசன்: பல்வேறு சக்திகள் தமிழகத்தில் பா.ஜ.க.விற்கெதிராக விஷமத்தனமான பிரச்சாரத்தில் ஈடுபட்டன. அதை மக்கள் நம்பினார்கள். தமிழகத்தில் மத்திய அரசின் கழிப்பிடத் திட்டம், வீடு கட்டும் திட்டம் போன்றவை நடைமுறைப்படுத்தப்பட்டது. அதை பிரச்சாரம் செய்வதில் தொய்வு ஏற்பட்டது. தமிழக மக்களிடம் பா.ஜ.க. கட்சி மிக நெருக்கமாக இல்லை. நாங்கள் தமிழகத்தில் வளர்ந்து வரும் கட்சி, மாநில பா.ஜ.க. தலைவர்கள் எல்லாம் மக்களை சந்தித்து பேசுகிறோம். அது அவர்களது மனதை மாற்றும் அளவிற்கு இல்லை என்பது தான் இந்த தோல்வி எங்களுக்கு சொல்லும் பாடம்.

லட்சக்கணக்கான உறுப்பினர்கள், மாநிலம் முழுவதும் அமைப்புகள் என பா.ஜ.க. வளர்ச்சி அடைந்துள்ளது என விளம்பரப்படுத்தினீர்களே அதற்குப் பின்பும் லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைய காரணம் என்ன?

வானதி சீனிவாசன்: தமிழகத்தில் ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் பூத் கமிட்டி அமைக்கும் அளவிற்கு பா.ஜ.க. வளர்ந்துள்ளது. நாங்கள் அமைத்த கூட்டணியில் கெமிஸ்ட்ரிதான் சரியாக வரவில்லை. இந்தக் கூட்டணிக்கு கால அவகாசம் குறைவு. பிரதமர் மோடி முதலில் தமிழகம் வரும்போது நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கூட்டணி முழுமை பெறவில்லை. தே.மு.தி.க. அந்த மேடையில் ஏறவில்லை. இப்படி அமைக்கப்பட்ட கூட்டணி முழுமையாக... ஒரு பசையாக ஒட்டிக்கொண்டு செயல்படுவதில் பல சிக்கல்கள் இருந்தன. பல லட்ச வாக்கு வித்தியாசத்தில் தோற்றதற்கு இது முக்கிய காரணம்.

நீங்கள் வேலை பார்த்த கோவை தொகுதியில் என்ன நடந்தது?

வானதி சீனிவாசன்: இங்கே நாடாளுமன்றத் தொகுதி தேர்தலில் சூலூர் சட்டமன்றத் தொகுதியில் எங்களது கூட்டணி தி.மு.க.வை விட 19,000 வாக்குகள் குறைவாக பெற்றது. நாடாளு மன்றத் தேர்தலுக்குப் பிறகு நடந்த சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க.வை விட அ.தி.மு.க. 10,000 வாக்குகள் அதிகமாக பெற்று வெற்றி பெற்றது. சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. செலுத்திய கவனத்தை கோவை நாடாளுமன்றத் தொகுதி தேர்தலில் செலுத்தவில்லையா என்கிற கேள்வி எழுந்துள்ளது. தேர்தல் முடிவுகளை எப்படி வேண்டுமென்றாலும் விமர்சிக்கலாம்.

-தாமோதரன் பிரகாஷ்