திரிபுராவில் ஆளும் பா.ஜ.க. அரசு, அம்மாநிலத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக நடைபெற்ற வன்முறைகள் குறித்து சமூக ஊடகங்களில் பதிவிட்டதற்காகவும், போராட்டத்தில் ஈடுபட்டதற்காகவும், உண்மையறியும் குழு அமைத்ததற்காகவும் 102 பேரின் மீது உபா சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது. இவர்களில் உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள், பத்திரிகையாளர்களும் அடக்கம். இது தேசிய அளவில் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

jj

பங்களாதேஷ் நாட்டில் துர்கா பூஜையையொட்டி, சிறுபான்மையினரான இந்துக்கள் தாக்கப்பட்டதுடன் இந்துக் கோவில்களும் சூறையாடப் பட்டன. இதையடுத்து சர்வ தேச அளவில் எழுந்த கண்ட னத்தையடுத்து 450 பேர் கைது செய்யப்பட்டனர். 70-க்கும் மேலான வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன.

பங்களாதேஷும் திரிபுராவும் அருகருகில் அமைந்துள்ளன. திரிபுராவும் பங்களாதேஷும் 856 கிலோமீட்டருக்கு சர்வதேச எல்லையைப் பகிர்ந்துகொள்வது குறிப்பிடத்தக்கது. இந்தத் தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து கடந்த அக்டோபர் 26-ஆம் தேதி, திரிபுராவின் பானிசாகர் நகரில் விஸ்வ இந்து பரிஷத்தைச் சேர்ந்தவர்களால் பேரணியொன்று நடத்தப்பட்டது. அப்போது மசூதியொன்று தாக்கப்பட்டதுடன், இஸ்லாமியர் கள் சிலரின் கடைகளும் வீடுகளும் சேதப் படுத்தப்பட்டன.

Advertisment

இந்தத் தாக்குதல் சம்பவத்துக்கு எதிராக சமூக ஊடகங்களில் பல்வேறு பதிவுகள் பகிரப்பட்டன. அப்போது மிகைப்படுத்தப்பட்ட, தவறான பதிவுகள் பகிரப்பட்டதாகவும், அவை சமூக ஒற்றுமையைப் பாதிப்பதாகவும், வன்முறையைத் தூண்டுவதாகவும் கூறி திரிபுரா காவல்துறை, 102 பேரின் மேல் உபா சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது. இதில் 68 பேர் ட்விட்டர் கணக்கு வைத்திருந்தவர்கள், 32 பேர் முகநூல் கணக்கு வைத்திருந்தவர்கள். 2 பேர் யூட்யூப் கணக்கு வைத்திருந்தவர்கள்.

dd

திரிபுரா போலீஸ் தரப்பில், "சில தனி நபர்கள் மற்றும் அமைப்புகள், மசூதி எரிக்கப்பட்டதாகவும், கண்டனத்துக்குரிய செய்திகளையும் அறிக்கைகளையும், புகைப்படங் களையும் வீடியோக்களையும் பதிவிட்டு, இரு வேறு மதத்தினரிடையே பகைமையை வளர்க்க முயன்றதே நடவடிக்கைகளுக்கு காரணம்''’எனச் சொல்லப்பட்டது. அன்சாரி, முகேஷ் இருவர் மேலும் உபா வழக்குப் பதிவு செய்யப்பட்டதே, இவ்விவகாரம் தேசிய அளவில் கவனம்பெறக் காரணமானது. இவர்கள் இருவரும் திரிபுராவில் இஸ்லாமியர் தாக்கப்பட்ட விவகாரத்தில் என்.சி. ஹெச்.ஆர்.ஓ. சார்பாக சுயேட்சையான உண்மை கண்டறியும் குழுவில் இடம்பெற்றவர்கள். உரிய அனுமதியின்றி உண்மை கண்டறிய குழு அமைத்து பாதிக்கப்பட்ட வர்களின் வாக்குமூலங்களைப் பெற்றதில் எரிச்சலான மாநில அரசு, இருவரையும் உபாவில் கைது செய்தது. திரிபுரா அரசின் கைது நடவடிக்கைக்கு பல்வேறு எதிர்ப்புக் குரல்கள் எழுந்துள்ளன.

Advertisment

அகர்தலா போலீஸ், ட்விட்டருக்கு கடிதம் எழுதி, ட்விட்டரில் செய்தி பதிவிட்ட 68 பேரின் கணக்குகளையும் தற்காலிகமாக முடக்கியதோடு, அவர்களது டவிட்டர் கணக்கு விவரங்கள், தொலைபேசி எண்கள், ஐ.பி. அட்ரஸ் உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்களையும் கேட்டுப் பெற்றிருக்கிறது.

திரிபுரா காவல்துறையின் நடவடிக்கை குறித்து விமர்சிக்கும் திரிபுரா காங்கிரஸ் தலைவர் பிரஜித் சின்கா, "பானிசாகர் மசூதியும், சிறுபான்மை சமூகத்தினரும், விஸ்வஹிந்து பரிஷத் உறுப்பினர்களால் தாக்கப்பட்டிருக்கின்றனர்… அவர்களை முதலில் கைதுசெய்வதை விட்டுவிட்டு வழக்கறிஞர்கள் மீதும், என்ன நடந்ததென பார்வையிட வந்தவர்கள்மீதும் வழக்குப் பதிவுசெய்வது தவறான நடவடிக்கை''’என விமர்சித்துள்ளார்.

jj

சி.பி.ஐ.(எம்) கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்.பி. ஜிதேந்திர சௌத்ரி இன்னும் நேரடியாக, “"சங் பரிவார் ஆட்கள் வன்முறையில் இறங்கியது உண்மை. திரிபுராவில் வகுப்புவாத வன்முறை நடைபெற்றது. அதற்கு உணர்வுள்ள நபர்கள் பிரதிவினை புரிவது இயல்பானது. அதற்காக உபாவில் வழக்குப் பதிவு செய்வது முழுக்க மடத்தனமானது''’என்கிறார்.

விவகாரம் பெரிதாக மாற ஆரம்பித்துள்ள நிலையில் திரிபுராவின் சட்டம் ஒழுங்கு ஐ.ஜி. அரிந்தம்நாத், "வழக்குப் பதிவு செய்யப்பட்டவர்கள் தவறாக எதுவும் சொல்லவில்லை யென்றாலோ, அவர்களுக்கு வன்முறையைத் தூண்டும் எண்ணமில்லை என்றாலோ அவர்கள் போலீசாரிடம் சென்று தங்கள் நிலையைத் தெளிவுபடுத்தலாம்''’என்கிறார்.

இந்நிலையில், உபா சட்டத்தின்கீழ் பத்திரிகையாளர்கள் மேல் வழக்குப் பதிவு செய்யப்பட்டதற்கு எதிராக எடிட்டர்ஸ் கில்டு அமைப்பு, "வகுப்புவாதக் கலவர நிகழ்வுகளைச் செய்தியாக்கியதற்கு எதிராக இதுபோன்ற கடுமையான சட்டத்தின்கீழ் நசுக்க அரசு முனையக்கூடாது. இந்த நடவடிக்கை பெரிதும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. பெரும்பான்மையினரின் வகுப்பு வாதத்தை கட்டுப்படுத்துவதில் மாநில அரசு அடைந்த தோல்வியை மறைக்க, வழக்குகளைப் பயன் படுத்தக்கூடாது''’என விமர்சித் துள்ளது.

கடந்த செப்டம்பர் மாதத்தில் தான் திரிபுராவில் பா.ஜ.க.வினர், எதிர்க்கட்சியான சி.பி.ஐ.(எம்) கட்சி யின் மாநில தலைமை அலுவல கத்தை தீவைத்து எரித்தனர். அகர்தலா, பிஷால்கார்க், கத்தாலியா போன்ற இடங்களிலும் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகங்கள் தாக்கப்பட்டதுடன் தீவைத்தும் எரிக்கப்பட்டன.

அதன் அவப்பெயர் மறை வதற்கு முன்பாக, மற்றொரு விவ காரத்தில் திரிபுரா மாநில அரசு சிக்கியுள்ளது. பங்களாதேஷில் இந்துக்கள் தாக்கப்பட்டதும் "இந்தியா -பங்களாதேஷ் பிணைப் பைப் பிரிக்க சதி' என்று விமர்சனம் செய்த திரிபுரா முதல்வர் பிப்லப் தேப், திரிபுராவில் இஸ்லாமி யர் தாக்கப்பட்டபோது அது யாருடைய சதியென வாய் திறக்க வில்லை.