பூனே தமிழ்ச்சங்கம், இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர், "தாதா சாகேப் பால்கே விருது' பெற்றதற்காக, ஒரு பாராட்டு விழா நடத்தியது. இதில், அவரை வாழ்த்திப் பேச நான் அழைக்கப்பட்டேன்.
இந்த விழாவில்தான் கர்னல் பாலாவின் அறிமுகத்தை நான் பெற்றேன். ""என் மனைவி உங்களுடைய எழுத்தின் இரசிகை'' என்றார் பாலா. விழா முடிந்ததும் ""எங்கள் கல்வி நிறுவனத்தில் வந்து பேசவேண்டும்''’ என்ற கர்னலிடம், “""ஆங்கிலத்தில் சரளமாகப் பேச வராது''’’ என்று கழற்றிக்கொள்ளத் தான் பார்த்தேன். அவர் விடவில்லை. இவரது பாலாஜி கல்வி நிறுவனம் என்னை மிரட்டிவிட்டது. ஒரு தமிழர் இந்தப் பூனே நகரில் வந்து என்னமாய்க் கோலாச்சுகிறார் என்று வியந்துபோனேன்.
கல்லூரி விடுதியிலேயே தானும் தூங்கி, மாணவர் நலனிலும் நிறுவனத்தின் நலனிலும் அவர் காட்டிய அக்கறை நான் எங்குமே கேள்விப்படாத ஒன்று. கனிவையும் கண்டிப்பையும் எந்த சதவிகிதத்தில் கலந்து மாணவர்களிடம் காட்டவேண்டும் என்கிற ஆற்றல் கர்னலுக்கு மட்டுமே கைவந்த கலை. இதேபோல் உழைப்பும் அக்கறையும் திறமையும் சரிவரக் கலக்கப்பட்டால் மாநில எல்லைகளைக் கடந்து ஒரு மனிதன் உச்சம் தொடமுடியும் என்பதற்கு கர்னல் பாலா ஒரு மிகச்சிறந்த உதாரணம்.
ஓர் உயர் இராணுவ அதிகாரியின் அன்பு, எனக்குப் புதிது. அதில் நானும் சகோதரர் ரவிதமிழ்வாணனும் நன்கு திளைத்தோம்.
""என் மனைவி சொன்னாள் என்பதற்காக, உங்களது ஒருபக்க கட்டுரைகளைப் படித்தேன். “உங்கள் எழுத்தை தமிழக மாணவர்களிடம் கொண்டுபோய்ச் சேர்க்க வேண்டும். இது என் தணியாத தாகம்'' என்றார். இதற்காக அவர் மேற்கொண்ட முயற்சிகளைச் சொல்லி மாளாது.
‘"தமிழக மாணவர்கள் இங்கு வந்து படிக்க ஏனோ தயக்கம் காட்டுகிறார்கள்' என்கிற ஆதங்கம் அவருக்கு இருந்தது. என்னிடம் சொல்லவும் செய்தார். “""அவர்களுக்கு எவ்வளவு முன்னுரிமை வேண்டுமானாலும் தருவேன்'' என்றார். அவரது வள்ளல் குணம், நான் பலரிடம் காணாத ஒன்று. யாருக்கு எப்படி உதவலாம் என்கிற தேடலிலேயே எப்போதும் இருப்பார்.
‘"குருவி எங்கு பறந்தாலும் கூட்டில்தான் அதன் நினைப்பு'’ என்று ஒரு பழமொழி உண்டு. கர்னலுக்கு இது மிகப் பொருந்தும். தமிழகத்திற்கும் தமிழர்களுக் கும் இவர் செய்திருக்கிற உதவிகள் பட்டியலில் அடங்காதவை.
தமிழகப் பத்திரிகைகள், தமிழக அரசியல் ஆகியவற்றின் மீது அவருக்குத் தணியாத காதல் இருந்தது. "பெத்துவிட்டு அத்துப் போட்டுவிடுவது'’ என்பார்கள். கர்னல் இப்படி இல்லை. எது ஒன்றில் ஈடுபட்டாலும், அதில் தொடர் ஆர்வம் காட்டுவார். இது நான் அவரிடம் கற்றுக்கொண்ட பல பாடங்களில் தலையாயது.
உடல், அவரைப் பலகாலம் வருத்தியபடி இருந்தது. ஆனாலும் மலர்ந்த முகத்துடன் தொடர்ந்து தன் கடமைகளைச் செய்தபடி இருந்தார். சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் நானும் ரவியும் அவரைப் போய்ப் பார்த்தபோது, ""எனக்கு ஒண்ணுமில்லை. அவங்களுக்கு (மனைவிக்கு) முடியலை. அவங்க நல்லாயிடணும். இதுதான் என் அக்கறை''’என்றார். நெகிழ்ந்துபோனோம். மேன்மக்கள் மேன்மக்களே என்று தோன்றியது.
பாலா சார் ஒரு தனிப்பிறவி. இனி இப்படி ஒரு மனிதரை என் வாழ்நாளில் கடந்து வருவேனா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.