தமிழகத்தின் ஊராட்சிகளுக்கு கடந்த இரண்டு வருடமாக மத்திய அரசின் நிதி நிறுத்தப்பட்டுவிட்டதால், கிட்டத்தட்ட ஊராட்சிகள் செயல்பட முடியாமல் முடங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. கிராமப்புற மக்களின் அத்தியாவசியப் பணிகளை மேற்கொள்ள முடியாத நிலைக் குத் தள்ளப்பட்டுள்ளதால் தமிழகத்தி லுள்ள 12,530 ஊராட்சிகளின் தலைவர்கள், ஆக-31 அன்று 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்டையில் முற்றுகைப் போராட்டத்தை அறிவித்தனர்.
அரசியல் கலப்பில்லாமல் கிராமப்புறங்களிலுள்ள மக்கள் தங்களின் தலைவர்களை தாங்களே தேர்ந்தெடுத்து அவர்கள் மூலமாக தங்களின் வாழ் வாதாரக் கட்டமைப்புகளை மேற் கொள்கிற வகையில் மறைந்த பிரதமர் ராஜீவ்காந்தி கொண்டுவந்ததுதான் பஞ்சாயத்துராஜ் திட்டம். மத்தியில் ஆட்சி மாறினாலும், பஞ்சாயத்து ராஜ் திட்டத்தின்கீழ் தேசத்தின் ஊராட்சிகளுக்கு முறையான நிதியை இதுவரை பழுதில்லாமல் அனுப்பிவந்திருக்கிறார்கள்.
அ.தி.மு.க. ஆட்சி மாறி தி.மு.க. ஆட்சிக்கு வந்தது முதல் கடந்த இரண்டு வருடமாக பஞ்சாயத்துராஜ் திட்டத்தின் அடிப்படையில் அனுப்புகிற நிதியை சிறுகச் சிறுக நிறுத்தி வந்த ஒன்றிய அரசு, தற்போது முற்றிலுமாக நிறுத்திவிட்டதால் கிராமப்புற ஊராட்சிகள் போதிய நிதியின்றி தள்ளாட ஆரம்பித்திருக்கின்றன.
"மக்கள் தொகை யின் அடிப்படையில் வருடத்திற்கு 25 முதல் 35 லட்சம் வரையிலான நிதி ஒதுக்கீடு செய்து அத் தொகையினை மத்திய அரசே நேரடியாக அனைத்து ஊராட்சி களின் தலைவர்களின் கணக்கில் வரவு வைத்துவிடும். அதேசமயம், மாநில அரசு வழக்கமாக அனுப்புகிற பொதுநிதியும் வந்துசேர, ஊராட்சித் தலைவர்கள், அதன்மூலம் தங்களின் கிராமப்புற மக்களின் ஜீவாதாரக் கட்டமைப்பிற்காக வாய்க்கால் அமைத்தல், குடிதண்ணீர் வசதி மற்றும் பைப்லைன் அமைத்தல், குளம், பொதுக் கிணறுகளை தூர்வாருதல், மழைக்காலத்திற்கு முன்னதாகவே நீரைச் சேமிக்கிற வகையில் மடைகளை செப்பனிட்டு சீராக வைத்தல், சாலைவசதிகள் உள்ளிட்ட வேலைகளைச் செய்திருக்கிறார்கள். மாநில அரசு தருகிற பொதுநிதியின் மூலம், பிளம்பிங், ஆபரேட்டர் பணியாளர் செலவு, தெருவிளக்கு அமைத்தல் போன்றவைகளை மேற் கொண்டுள்ளனர்.
2021-ன்போது எடப்பாடி ஆட்சி முடிந்து தி.மு.க. ஆட்சிக்கு வந்தபோது ஒன்றிய அரசு பஞ்சாயத்து ராஜ் திட்ட நிதியை படிப்படியாகக் குறைத்து, ஒரு காலகட்டத்தில் முற்றிலுமாக நிறுத்திவிட்டது. தற்போது வருடத்திற்கு 2.75 கோடி மட்டுமே மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்கிறது. அதனைக் கொண்டு 221 ஊராட்சிகளுக்கு எப்படி பங்கீடு செய்வது? அதில் ஊராட்சிகளால் எந்த வகையான பணிகளை மேற்கொள்ளமுடியும்?'' என்கிறார் தென்காசி மாவட்ட பஞ்சாயத்துக்களின் நிர்வாக லெவலில் இருக்கிற மக்கள் தலைவர் ஒருவர்.
"பிரதமரின் வீடு கட்டும் திட்டம், பசுமை வீட்டுத் திட்டங்கள் போன்றவை இரண்டு வருடமாகவே ஊராட்சி களுக்கு அனுமதிக்கப்படல. கடந்த ஆட்சியில் முன்பு அனு மதிக்கப்பட்ட பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் கொண்டு வரப்பட்டு பாதியில் நின்றுபோன வேலைகளை மட்டுமே தற்போது மேற்கொள்கிறோம். செங்கோட்டை யூனியனில் வருகிற 6 ஊராட்சிகளிலும் இதுதான் நிலைமை''’என்கிறார் சீவநல்லூர் ஊராட்சித் தலைவியான முத்துமாரி.
"எங்கள் பஞ்சாயத்திற்குட்பட்ட பெரியகுளம் சீர்கெட்டுப் போயிருக்கு. தூர்வாரப்படல. குளத்தின் பெரிய மடையின் மதகுகள் சேதமாகியிருக்கு. வரப்போற மழைக் குள்ள இவைகளை சீர் செய்யவேண்டும். இல்லைன்னா எங்க பஞ்சாயத்திற்குட்பட்ட கிராமங்களிலுள்ள ஐந்தாயிரம் மக்களுடைய விவசாயமும் பாதிக்கப்படும். தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும்''’என கவலையுடன் சொன்னார் பெரும்பத்தூர் ஊராட்சியின் தலைவரான நெல்சன்.
"பத்தாயிரம் ஜனத்தொகை கொண்ட எங்க பஞ்சாயத்து கிராமங்களுக்கு ரொம்ப சிரமத்தின் பேர்ல தமிழக அரசு அனுப்புகிற வழக்கமான நிதியைக் கொண்டு பேவர் பிளாக் மட்டுமே பதிக்க முடிஞ்சது. குடிதண்ணீர் பைப்லைன் போட வேண்டியிருக்கு. ரோடும் போடவேண்டிய கட்டாயம். இதுபோன்ற கிராம மக்களின் அத்தியாவசியப் பணிக்கான பஞ்சாயத்துராஜ் திட்ட நிதி வரலை. ஒன்றிய அரசின் ஜல்ஜீவன் திட்ட நிதியும் வரலை. குடி தண்ணீருக்காகத் தவிக்கிற மக்களுக்குப் பதில் சொல்ல முடியலை''’என்கிறார் தென்காசி மாவட்ட ஊராட்சிகளின் கூட்டமைப்பின் பொ.செ.வும் பாம்புக்கோவில் சந்தை ஊராட்சித் தலைவருமான செய்யது இப்ராஹிம்.
தொன்காசி மாவட்ட ஊராட்சி களின் கூட்டமைப்புத் தலைவரான டி.கே.பாண்டியனோ, “"பஞ்சாயத்துராஜ் திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சித் தலைவர்களுக்கு ஒதுக்கப் படவேண்டிய பஞ்சாயத் ராஜ் நிதி வரல. ஒரே ஒரு முறை மட்டுமே தலைவர் கணக்கில் 15 லட்சம் வரவுவைக்கப் பட்டது. அதைக் கொண்டு எந்த வேலை யை மேற்கொள்ள முடியும். எதிர்க்கட்சி அரசு என்று கிராமப் பஞ்சாயத்துகளை வஞ்சித்து சதி செய்கிறது ஒன்றிய அரசு. எங்கள் கோட்டை முற்றுகைப் போராட் டம் தமிழக அரசை எதிர்த்தல்ல, ஒன்றிய அரசை எட்டவேண்டும் என்பதே எங்களின் நோக்கம்''’என்றார் அழுத்தமான தொனியில்.
ஆகஸ்ட் 31-ஆம் தேதி திட்ட மிட்டபடி முற்றுகைக்குக் கிளம்பிய 2,950 ஊராட்சித் தலைவர்களை காவல்துறை மறித்து, டி.கே.பாண்டியன் உள்ளிட்ட 6 பிரதிநிதிகளை மட்டும் ஊரக உள்ளாட் சித்துறை செயலாளர் செந்தில்குமார் ஐ.ஏ.எஸ்.ஸிடம் கொண்டுசென்றனர். அவர் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தி, ஒரு மாதத்துக்குள் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வுகாண்பதாக உறுதிகூறியுள்ளார்.