பீமா கொரோகான் வழக்கில் கூடுதலாக சகர் கோர்கே, ரமேஷ் கய்சோர், ஜோதி ஜக்தாப் கைது செய்யப்பட்டிருப்பதும் டெல்லி கலவர வழக்கில் உமர் காலித் கைதுசெய்யப்பட்டிருப்பதும் தேசமெங்கும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. அறிவிக்கப் படாத நெருக்கடி நிலையாகவே இதனைக் கருதவேண்டியுள்ளதாக இந்திய அறிவுஜீவிகளும் மனித உரிமை ஆர்வலர்களும் பார்க்கின்றனர்.
மகாராஷ்டிராவின் தீவிரவாத ஒழிப்புப் பிரிவு, கடந்த செப்டம்பர் 7-ஆம் தேதி சகர்கோர்கே, ரமேஷ் கய்சோர் இருவரையும் செப்டம்பர் 8-ஆம் தேதி ஜோதி ஜக்தாப்பையும் கைதுசெய்தது. இவர்கள் மூவரும் தேசிய புலனாய்வு முகமையிடம் (என்.ஐ.ஏ) ஒப்படைக்கப் படுவார்கள் எனத் தெரிவித்தது.
2018-ல் பீமா கோரேகான்- எல்கர் பரிஷத் வழக்கில் மத்தியில் ஆட்சியிலிருக்கும் ஆட்சியைக் கவிழ்க்கவும், பிரதமரைக் கொலைசெய்யவும் திட்டமிட்டதாகக் கூறி மிகக் குறைவான ஆதாரங்களுடன் கைது நடவடிக்கைகள் தொடங்கின. அப்போதே, முதல் தகவல் அறிக்கையில் இவர்கள் மூவரின் பெயர்களும் இடம்பெற்றிருந்தன. எனினும் அப்போது இவர்கள் கைதுசெய்யப்படவில்லை. எல்கர் பரிஷத் நிகழ்வில் எதிர்ப்புணர்வைத் தூண்டும் உரையை நிகழ்த்தியதாக இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
ஜூலை மாதத்தில் கோர்கே, கய்சோர் இவர்களோடு மேலும் சிலர் தேசியப் புலனாய்வு முகமையால் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் செப்டம்பரில் இம்மூவரும் கைதுசெய்யப் பட்டனர். கோர்கே, கய்சோர் இருவரும் கைது செய்யப்படும்போது, “ஏற்கெனவே கைதுசெய்யப் பட்டவர்களுக்கு எதிராக சாட்சிசொல்லும்படி என்.ஐ.ஏ.வால் அச்சுறுத்தப்பட்டோம். அதற்கிணங்காத நிலையில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது’’என குற்றம்சாட்டினர்.
இச்சதியில் தொடர்புடையவர்களாக புனே போலீசாரால் 23 பேர் குறிப்பிடப்பட்டனர். இதுவரை அதில் 15 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அவர்களின் பெயர் விவரம்: பாபு, கய்சோர், கோர்கே, ஜோதி ஜக்தாப், சுதிர் தவாலே, ஷோமா சென், மகேஷ் ரௌத், ரோனா வில்சன், சுரேந்திர காட்லிங், வரவர ராவ், சுதா பரத்வாஜ், அருண் பெராரியா, வெமன் கோன் சால்வ்ஸ், ஆனந்த் டெல்டும்டே, கவ்தம் நவ்லக்கா
பல்வேறு மனித உரிமை அமைப்புகள், பீமா கோராகான்- எல்கர் பரிஷத் வழக்கில் மத்திய அரசின் நடவடிக்கை இந்திய அறிவு ஜீவிகளை குற்றவாளிகளாக்கி அவர்களை மௌனமாக்குவதன் மூலம் தனது அரசுக்கு எதிரான எதிர்ப்பைக் கட்டுப் படுத்துவதாக இருக்கிறது என விமர்சித்துள்ளனர்.
இது ஒருபுறமிருக்க, பிப்ரவரி 2020-ல் டெல்லியின் வடகிழக்குப் பகுதியில் ஏற்பட்ட வகுப்புவாதக் கலவரத்தில் தொடர்புடையவர் எனக் குறிப்பிட்டு, ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் முன்னாள் மாணவரான உமர் காலித் செப்டம்பர் 13-ஆம் தேதி இரவு உபா சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டார்.
இதற்கிடையில் உமர் காலித்தின் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானது. ""டெல்லி போலீஸ் இந்தியத் தலைநகரான டெல்லியில் பெரிய அளவில் நடைபெற்ற வகுப்புவாத மோதலுக்கு காரணமானவர் களையும் அதை ஏற்படுத்தியவர்களையும் கைதுசெய்வதை விட்டுவிட்டு, மத்திய அரசையும் அதன் கொள்கைகளையும் விமர்சிப்பவர் களையும்- குறிப்பாக குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை விமர்சிப்பவர்களையும் கைதுசெய்து கொண்டிருக்கிறது.
குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் பங்குபெற்றவர்களைக் குறிவைத்து ஆதாரங்கள் ஏதுமின்றி கைதுகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. இந்த வீடியோவை நீங்கள் பார்த்துக்கொண்டிருந்தால் நான் டெல்லி போலீசாரால் கைதுசெய்யப் பட்டேன் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்'' என அந்த வீடியோவில் குறிப்பிட்டிருந்தார்.
காலித் பேசிய பழைய வீடியோவென்று தவறான நோக்கத்துடன் எடிட் செய்து பெருமளவில் பரவச்செய்யப்பட்டது. அந்த வீடியோவை ஆதாரமாகக் கொண்டே கலவரத்துக்கு வித்திட்டார் என்று கூறி கைதுசெய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் டெல்லி கலவர வழக்கில் துணைக் குற்றப்பத்திரிகை ஒன்றை உருவாக்கி அதில் சீதாராம் எச்சூரி, யோகேந்திர யாதவ், ஜயதி கோஷ், அபூர்வானந்த், டாகுமெண்டரி தயாரிப்பாளர் ராகுல் ராய், ஓசம மாணவர்கள் தேவன்கனா கலிதா, நடாஷா நர்வால், ஜாமியா பல்கலைக்கழக மாணவி குல்பிஷா ஃபாதிமா முதலானோர் பெயர்கள் இணைக்கப் பட்டுள்ளன.
ஏற்கெனவே 21 பேர் இந்த வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். முதல் குற்றப் பத்திரிகையில் உமர் காலித் பெயரும் சர்ஜீல் பெயரும் கிடையாது துணைக் குற்றப்பத்திரிகையிலே இவர்கள் பெயர்கள் இணைக்கப்பட்டுள்ளன. உமர் காலித், சர்ஜீல் கைதாகியுள்ள நிலையில் மற்றவர்களும் அடுத்தடுத்து கைதாகக்கூடும் என்ற அச்சத்தை மனித உரிமை ஆர்வலர்கள் வெளிப்படுத்துகின்றனர்.
அதேசமயம் டெல்லி கலவரத்தில் ஈடுபட்டவர்களின் புகைப்படங்களும், வீடியோக்களும் நிறைய கிடைத்துள்ளன. அதில் பா.ஜ.க. பின்னணியுடைய, சார்புடைய குண்டர்களும் ஈடுபட்டுள்ளது கலவரத்தின் போதே ஊடகங்களால் சுட்டிக்காட்டப் பட்டது. அவர்களில் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை.
ஆகவே இத்தகைய கைதுகள் மத்திய அரசின் கொள்கைகளை எதிர்ப்பவர்களின் குரல்களை நசுக்க திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் அச்சுறுத்தல் நடவடிக்கையாகவே பார்க்கமுடியும் என விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
ஆனால் ஜனநாயகக் குரல்களுக்கு எதிராக காதை மூடிக்கொண்டிருப்பவர்களிடம் நாம் எதைத் தெரிவித்துவிடமுடியும்?
- க.சுப்பிரமணியன்