கடந்த ஆறு மாதகாலமாகவே காஞ்சிபுரம் மேயருக்கு எதிர்ப்புகள் இருந்துவந்த நிலையில், கடந்த மாதம் மேயருக்கு எதிராக மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த மாதம் ஆளுங்கட்சியைச் சேர்ந்த 10 கவுன்சிலர்கள் நிலைக்குழு பதவியை ராஜினாமா செய்து தங்களின் எதிர்ப்பைக் காட்டினர்.
மாவட்டச் செயலாளரான சுந்தர், துறை அமைச்சரான கே.என்.நேருவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றும் தீர்வு ஏற்படாத நிலையில், மொத்தமுள்ள 51 கவுன்சிலர்களில் ஆளுங்கட்சி கவுன்சிலர்கள் உள்பட 33 கவுன்சிலர்கள் காஞ்சி புரம் மேயர் மகாலட்சுமி யுவராஜுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாநகராட்சி ஆணையரிடம் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டுவந்தனர். இந்த நிலையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை நிரூபிக்க ஜூன் 29-ஆம் தேதி திங்கட்கிழமை குறிக்கப் பட்டது.
இதுபற்றிய விரிவான விவரங்களை கடந்த ஜூலை 27-30 நக்கீரன் இதழில் "காஞ்சிபுரம் மேயர் பதவிக்கு ஆபத்து?'’என்ற தலைப்பில் வெளியிட்டி ருந்தோம். வாக்கெடுப்பில் 80%க்கு அதிகமாக எதிர்ப்பு வாக்குகள் பதிவானால்தான் மேயரை நீக்கமுடியும். அதுவே மேயர் மகாலட்சுமிக்கான ஒரே நம்பிக்கை என குறிப்பிட்டிருந்தோம்.
இந்த நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வரை விவகாரம் செல்ல, இதுபோல பதவிகள் பறிபோனால் அது கட்சிக்கு அவப் பெயர் ஏற்படுத்தும் என்பதால், நிலைமையைச் சீர்செய்ய அன்பகம் கலை காஞ்சிபுரத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார்,
காஞ்சிபுரத்திலுள்ள எம்.எம்.லெஹர்ஸ்சி ஹோட்டலில் அன்பகம் கலை மற்றும் மாவட்டச் செயலாளர் சுந்தர் ஆகியோர் முன்னிலையில், இரு தரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. சுமூக முடிவு எட்டப்பட்ட நிலையில், மேயர் ஆதரவாளரான டில்லிபாபு, பிரகாஷ் இருவரும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர்.
இம்முடிவு மேயர் தரப்பினரின் வயிற்றில் புளியைக் கரைத்துவந்த நிலையில், மேயர் தரப்பைச் சேர்ந்த ஆதரவு கவுன்சிலர்கள் 15 பேர் மூன்று நாட்களுக்கு முன்பே கொடைக்கானலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். ஜூலை 29-ஆம் தேதி காலை மேயருக்கு எதிரான, தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த கவுன்சிலர்கள் ஈ.சி.ஆர். பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டு விட்டனர்.
நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டு வருவதற்கு ஆதரவாக யாரும் வாக்களிக்காததால் காஞ்சிபுரம் மேயர் மகாலட்சுமி யுவராஜுக்கு எதிரான தீர்மானம் தோல்வியடைந்தது என்று காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையர் செந்தில்முருகன் அறிவித்தார். தற்போதைக்கு இன்னும் ஓராண்டு காலத்திற்கு மேயருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவர முடியாது. இதையடுத்து நிம்மதிப் பெருமூச்சை வெளிப்படுத்தியிருக்கிறார் மகாலட்சுமி யுவராஜ்.