பிரிஜ் பூஷன்சிங் நினைவிருக்கிறதா? இந்திய மல்யுத்த சம் மேளனத்தின் தலைவராக இருந்தபோது மல்யுத்த வீராங்கனைகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக அவர்மீது குற்றச் சாட்டுகள் எழுப்பப்பட்டன.
இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவ ராக இருந்த காலத்தில் பா.ஜ.க. எம்.பி. பிரிஜ் பூஷன்சிங், பெண் மல்யுத்த வீராங்கனைகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகக்கூறி, இந்தியாவுக்காக உலக அளவிலும், ஒலிம்பிக், ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும் பதக்கங்களை வென்ற ஷாக்ஷி மாலிக், பஜ்ரங் புனியா, வினேஷ் போகட் உள்ளிட்ட முன்னணி மல்யுத்த வீராங்கனை கள், வீரர்கள் உள்ளிட்ட பலரும், பிரிஜ் பூஷன் மீது ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்கக்கோரி கடந்த 2023, ஜனவரி முதலாகவே டெல்லியில் ஜந்தர்மந்தர் பகுதியில் போராட்டத்தில் இறங்கினர். இவர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர, ஒன்றிய விளையாட்டுத்துறை அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்திப்பார்த்தார். பின்னர், மேரி கோம் தலைமை யில் குழு ஒன்று அமைக்கப்பட்டு விசாரனை நடத்தப்பட்டது. இது தொடர்பாக பிரதமரையும், உள்துறை அமைச்சரையும் சந்தித்து புகாரளித்தனர். பின்னர், போராட்டம் தற்காலிகமாக விலக்கிக் கொள்ளப்பட்டது. அதனையடுத்து விசாரணைக் குழுவின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின்னும்கூட சில மாதங்களாக நடவடிக்கை எடுக்கப்படாத தால், மீண்டும் போராட்டத் துக்குள் தள்ளப்பட்டனர். கடந்த ஆண்டு மே மாதத்தில் புதிய நாடாளுமன்றக் கட்ட டம் திறப்பு விழாவின்போது அங்கே மல்யுத்த வீராங்கனை களும், வீரர்களும் முற்றுகைப் போராட்டம் நடத்தியபோது, அவர்களை போலீசார் இழுத்துச் சென்று கைது செய்தனர். அது நாடு முழுக்க அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்நிலையில், சமாதானப்படுத்தும்விதமாக, பிரிஜ் பூஷனை நீக்கிவிட்டு, புதிய தலை வரைத் தேர்ந்தெடுக்க தேர்தலை அறிவித்தனர். அதிலும்கூட பிரிஜ் பூஷன் ஆதரவாளரே வெற்றிபெற் றார். அதைத் தாங்கமுடியாத வேதனையில், மல்யுத்தத்திலிருந்தே விலகுவதாக ஷாக்ஷி மாலிக் கண்ணீ ருடன் அறிவித்தார். இதற்கிடையே டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில், "பாலியல் வன்கொடுமை வழக்கு குறித்து தீர விசாரித்த பின்னரே குற்றச்சாட்டை பதிவு செய்ய வேண்டும்'' என்று பிரிஜ்பூஷன் தரப்பில் கோரிக்கை வைத்ததோடு வழக்கின் உத்தரவு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், ஏப்ரல் 26, வெள்ளியன்று வெளியான தீர்ப்பில், பிரிஜ் பூஷன் தரப்பின் கோரிக்கையை ஏற்கவில்லையென்றும், வரும் மே 7ஆம் தேதி பிரிஜ் பூஷன் மீது குற்றச்சாட்டுக்களை பதிவுசெய்ய வேண்டுமென்றும் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. ஒன்றிய அரசிலும், உத்தரபிரதேச அரசிலும் செல்வாக்குமிக்க பிரிஜ் பூஷன் மீதான வழக்கில் இது ஒரு நல்ல தொடக்கமாகத் தெரிகிறது. குற்றச்சாட்டுக்கு தண்டனை வாங்கித்தர இன்னும் பெருந்தொலைவு செல்ல வேண்டியிருக்கும்!