திருச்சி பாராளுமன்றத் தொகுதி யில், 1951-52 வரை மருத்துவர் மதுரம் சுயேட்சையாக நின்று வெற்றி பெற்றார். 1957ல் காங்கிரஸ் சார்பில் அப்துல் சலாம் வென்றார். அதன்பின் 1962 முதல் 1977 வரை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வசமிருந்த இந்த தொகுதியில், ஆனந்த நம்பியார், கல்யாண சுந்தரம் ஆகியோர் தலா இரண்டு முறை எம்.பி.க்களாக இருந்தனர். முதல் முறையாக 1980ல் தி.மு.க.வின் என்.செல்வராஜ் வெற்றி பெற்றார். அதன்பிறகு 1984 முதல் 1991 வரை காங்கிரஸின் அடைக்கலராஜ் எம்.பி.யாக இருந்தார். 1996ல் த.மா.க. சார்பிலும் அடைக்கலராஜே எம்.பி.யாக வெற்றிபெற்றார்.

1998, 1999ல் பா.ஜ.க.வின் ரங்கராஜன் குமாரமங்கலம் வென்றார். 2004ல் ம.தி.மு.க. வின் எல்.கணேசன் எம்.பி.யானார். 2009 முதல் 2014 வரை அ.தி.மு.க. சார்பில் எம்.குமார் எம்.பி.யானார். 2019 தேர்தலில், காங்கிரஸ் சார்பில் திருநாவுக்கரசர், அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. வேட்பாளர் இளங்கோவன், நாம் தமிழர் சார்பில் வினோத், ம.நீ.ம. சார்பில் ஆனந்த ராஜா, அ.ம.மு.க. சார்பில் சாருபாலா தொண்டைமான் ஆகியோர் போட்டியிட்டதில், திருநாவுக்கரசர் 6 லட்சத்து 21ஆயிரத்து 285 வாக்குகளுடன் அமோக வெற்றி பெற்றார். 2008ல் திருச்சி பாராளுமன்றத் தொகுதி மறுசீரமைப்புக்கு பிறகு, ஸ்ரீரங்கம், திருச்சி (மேற்கு), திருச்சி (கிழக்கு), திருவெறும்பூர், கந்தர்வகோட்டை (தனி), புதுக்கோட்டை ஆகிய ஆறு சட்டமன்றத் தொகுதி களை உள்ளடக்கியதாக உள்ளது.

trichy

இத்தொகுதிக்கான வேட்பாளர் தேர்வில், தி.மு.க.வை பொறுத்த வரை இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டுமென்ற திட்டமிருப்பதாகவும், தற்போது தி.மு.க.வின் மூத்த அமைச்சர் களின் மகன்களுக்கு வாய்ப்பு கொடுக்கப் படலாமென்றும் கூறப்படுகிறது. அமைச்சர் கே.என்.நேருவின் மகன் அருண் நேருவிற்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அதேபோல் தி.மு.க.வின் கூட்டணியில் இருக்கும் கட்சிகள் இத்தொகுதியைக் கேட்கும்பட்சத்தில், அவர்களுக்கு கொடுப் பதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் தெரிகிறது. கடந்த முறை தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் திருநாவுக்கரசர் போட்டியிட்டு 67 சதவீத வாக்குகளை அள்ளினார். காங்கிரஸில் திருநாவுக்கரசருக்கு அடுத்தபடியாக வேறொருவருக்கு வாய்ப்பு வழங்கப்படுவதாக இருந்தால், தொழிலதிபர் ஜோசப் லூயிஸ்க்கு அந்த வாய்ப்பு கிடைக்கலாம்.

அ.தி.மு.க.வை பொறுத்தவரை ஓ.பி.எஸ். அணி, இ.பி.எஸ். அணி, அ.ம.மு.க. என மூன்று அணிகளாகப் பிரிந்துகிடக்கும் நிலையில், இ.பி.எஸ். அணி சார்பில் திருச்சிக்கு ஜோதிவாணன், மணல் கரிகாலன் தம்பி புதுகோட்டை கருப்பையா ஆகியோரில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கலா மென்று எதிர்பார்க்கப் படுகிறது.

அ.தி.மு.க. தலைமை விதித்திருக்கும் நிபந்தனை யான கட்சி நிதி 10 கோடி, தேர்தல் செலவுக்கான நிதி 10 கோடி என மொத்தம் 20 கோடி ரூபாயை அளிப்பதற்கு இவர்கள் இருவர் தான் முன்வந்திருப்பதாகக் கூறப்படுகிறது. எனவே போட்டியிடுவதற்கான வாய்ப்பு இருவரில் ஒருவருக்கு கிடைக்கும்.

ஏற்கெனவே திரு வெறும்பூர் தொகுதியில் மக்கள் நீதி மையம் சார் பில் போட்டியிட்ட தொழி லதிபர் முருகானந்தம், இந்த முறை அ.தி.மு.க., தி.மு.க., பி.ஜே.பி. ஆகிய கட்சிகளோடு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. அவர்கள் கேட்கும் பணத்தை செலவழிப்பதற்கும் தயாராக இருப்பதாகக் கூறப்படுகிறது.

பா.ஜ.க. சார்பில் திருச்சியில் போட்டியிடுவதற்கு திருச்சி மாவட்ட பா.ஜ.க. துணைத் தலைவர் ஆக்சினா ஜெய் கருணா வாய்ப்பு கேட்டு, மாநிலத் தலைமைக்கு பல கோடிகளைக் கொட்டியிருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்த பாராளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வினரை தோற்கடிக்க பெரும் முதலீடு செலவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இந்த தேர்தலில் பிரதான சக்தியாக பணமே இடம்பெறக்கூடும்.

இதுவரை நடந்த திருச்சி நாடாளுமன்றத் தேர்தல்களில் தி.மு.க. ஒருமுறை மட்டுமே வென்றுள்ளது. காங்கிரஸ் 4 முறையும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 4 முறையும், அ.தி.மு.க. இரண்டு முறையும் இந்த மக்களவைத் தொகுதியை தக்க வைத்துள்ளன.

இம்முறை திருச்சியிலுள்ள சட்டமன்றத் தொகுதி கள் அனைத்திலும் தி.மு.க. பலமுடன் இருப்பதால், பாராளு மன்றத் தேர்தலிலும் தி.மு.க. தன்னுடைய பலத்தை மீண்டும் நிரூபிக்கும் என்று எதிர்பார்க்கப்படு கிறது.

மோடி ஆட்சி யின் ஆதரவு அலையோ, ராமர் கோவில் காரணமாக கட்டமைக்கப்படும் அரசியலோ தமிழ்நாட்டில் பெரிதும் தாக்கத்தை ஏற்படுத்தப் போவதில்லை. அதேபோல திருச்சி நாடாளுமன்றத் தேர்தலிலும் பா.ஜ.க.வின் பத்தாண்டு கால ஆட்சி எவ்விதத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தாது என்று கூறப்படுகிறது.

Advertisment