நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொகுதி வரையறை வெளியிடப் பட்டதால், அனைத்துக் கட்சிகளும் தங்களுடைய வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் பணியை தொடங்கியுள்ளன. பெரிய கட்சிகளில் வேட்பாளர்கள் யார் என்பது உறுதி செய்யப்பட்டு, கடந்த இரண்டு மாத காலமாக தீவிர களப்பணியில் உள்ள ஒருசில கட்சிகள் தற்போது நேர்காணலை நடத்திவருகின்றன.
தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகளில் மேயர் யார் என்பதில் போட்டி நிலவ ஆரம்பித்துள்ளது. அதிலும் திருச்சியில் இரண்டு அமைச்சர்கள் இருப்பதால் யாருடைய கை ஓங்கி இருக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு தி.மு.க. தொண்டர்களிடம் எழுந்துள்ளது.
திருச்சி மாநகராட்சியைப் பொறுத்தவரை 65 வார்டுகள் அங்கீகரிக்கப்பட்ட வார்டுகளாக உள்ளன. இதில் தி.மு.க. நேரடியாக அதிகபட்சமாக 50 வார்டுகள் வரை போட்டியிட வாய்ப்பு உள்ளதாகவும், மீதமுள்ள வார்டுகள் கூட்டணியில் உள்ள உறுப்பினர்களுக்கு வழங்கப்படலாம். என முதற்கட்ட பேச்சுவார்த்தையில் ஓரளவுக்கு சுமுகமான நிலை ஏற்பட்டுள்ளது.
திருச்சி மாநகராட்சியைப் பொறுத்தவரை கே.என். நேருவின் மகன் அருணுக்கு வாய்ப்பு கொடுக்கப்படலாம் என்று கூறிவந்த நிலையில், அவரும் தன்னுடைய தந்தையின் அலுவலகத்திற்குப் பக்கத்திலேயே அலுவலகம் அமைத்து செயல்பட்டுவந்தார். தொண்டர்களிடம் எப்போதும் அனுசரித்து, தட்டிக்கொடுத்துச் செல்வதால், தொண்டர்கள் உற்சாகமாக பணியாற்ற களத்தில் குதித்தனர். ஆனால் மேலிடம் அவருக்கு ராஜ்யசபா சீட் கொடுக்கும் எண்ணத்தில் இருப்பதால் அவர் இந்த முறை மேயர் பதவிக்குப் போட்டியிட வாய்ப்பில்லை என்கிறார்கள்.
அந்த வாய்ப்பு கே.என்.நேருவின் ஆதரவில் முன்னாள் துணை மேயரும், மாநகரச் செயலாளருமான அன்பழகனுக்கு சென்றுள்ளது. கட்சியில் நீண்ட காலமாக அமைச்சர் நேருவோடு பயணித்து வருவதால், கட்சிக்குள் அமைச்சர் நேருவிற்கு விசுவாசமாக இருப்பார், ஆனால் கட்சியை சார்ந்த மற்ற நிர்வாகிகள், தொண்டர்களிடம் அந்தளவிற்கு இவர் அனுசரித்துச் செல்லமாட்டார் என்ற பேச்சு அடிபடுகிறது. இருப்பினும் இந்த முறை மேயர் வேட்பாளர் யார் என்ற பிரச்சினையில்லாமல் அன்பழகனின் ரூட் கிளியர்.
அதேசமயம் மற்றொரு அமைச்சரான அன்பில் மகேஷ் பொய்யாமொழி சார்பில் இரண்டு பேர் தற்போது பரிசீலனையில் உள்ளனர். மலைக்கோட்டை பகுதிச்செயலாளர் மதிவாணன் மற்றும் கே.என். சேகரன் ஆகியோர்தான் அவர்கள். ஆரம்பத்தில் அமைச்சர் கே.என்.நேருவிற்கு நெருக்கமாக இருந்த மதிவாணன், தன்னுடைய அக்கா மகன் அருண், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் உதவியாளராக மாறிய பின்னர் அன்பில் பக்கம் பயணிக்க ஆரம்பித்துள்ளார்.
அன்பழகன் கடந்தமுறை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட மனு அளித்தபோது, மாற்று வேட்பாளராக மதிவாணனைத்தான் அமைச்சர் நேரு அறிவித்தார். அன்பழகனைவிட சற்று கூடுதலாக செல்வாக்கு உள்ளவர் என்று கூறுகின்றன. அதேபோல் முன்னாள் எம்.எல்.ஏ. கே.என்.சேகரனுக்கும் வாய்ப்பு அதிகம். அதற்கு காரணம் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் ஆதரவும், சபரீசனின் ஆதரவும் இருப்பதுதான்.
பொங்கல் தொகுப்பு வழங்கு வதில் ஆளும்கட்சி பல்வேறு விமர்சனங் களைச் சந்தித்து வருகிறது. பல இடங்களில் அறிவிக் கப்பட்ட பொருட்கள் முழுமையாகக் கிடைக்க வில்லை. பொங்கல் பை வழங்கப்படவில்லை. கரும்பு வழங்கப்படவில்லை என்ற ஆதங்கங்களும் எழுந்துள்ளன. கரும்பு கொள்முதலில் அதிகாரிகள் நேரடியாகச் செல்லாமல், கட்சிக்காரர்கள் ஒரு விலை நிர்ணயம் செய்து அதில் ஒரு கரும்புக்கு 5 ரூபாய் வருமானம் பார்த்துவிட்டு, மிஞ்சியதை கரும்பு விவசாயி களுக்குக் கொடுத்துள்ளனர் என்ற முணு முணுப்புகள் எழுந்துள்ளன.
குடும்ப அட்டைதாரர்களுக்கு கடந்த ஆண்டு அ.தி.மு.க. அரசு 2500 ரூபாய் வழங்கியது. தி.மு.க. அரசிடமும் அதுபோல் எதிர்பார்ப்பு இருந்தது. இதைப் புரிந்துகொண்டு எதிர்க்கட்சிகள் அதற்கு தூபம்போட்டு வருகின்றன. குடும்பத் தலைவி களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று முதல்வர் தன்னுடைய தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டது குறித்து பெண்கள் புலம்ப ஆரம்பித்துள்ளனர்.
இதையெல்லாம் தாண்டி தேர்தலுக்கு தேதி குறித்தாலும், மக்கள் ஆர்வமாக வந்து வாக்களிப்பார்களா,…ஆளும்கட்சி எதிர்பார்க்கும் வெற்றி விகிதம் அமையுமா என்ற கவலை எழுந் துள்ளது. அதைச் செயல்படுத்த தி.மு.க. தலைமை என்ன வியூகம் வகுக்கப்போகிறது,… அதைத் தகர்க்க எதிர்க்கட்சி கள் என்ன செய்யப்போகின்றன என்பதைப் பொறுத் திருந்துதான் பார்க்க வேண்டும்.