வடிவேலு கம்பேக்!
"அரண்மனை 4' படம் எதிர் பார்த்ததை விட வசூலில் சக்கப்போடு போட்டதால், சுந்தர்.சி அடுத்ததாக பெரிய பொருட்செலவில் "கலகலப்பு 3' படத்தை தொடங்க திட்டமிட்டார். ஆனால் தற்போது அதற்கு முன்பாக சிறிய பட்ஜெட்டில் ஒரு படம் பண்ண முடி வெடுத்துள்ளார். இதில் அவரே ஹீரோவாக நடிக்க, முழுக்க முழுக்க நகைச்சுவை படமாக எடுக்கத் திட்டமிட்டுள்ளார். இதற்காக வடிவேலுவை இப்படத்தில் கமிட் செய்துள்ளார். இருவரின் காம்பினேஷனில் ஏற்கனவே வெளியான வின்னர், தலைநகரம், நகரம் மறுபக்கம் உள்ளிட்ட படங்கள் ரசிகர்களுக்கு காமெடி விருந்தாக அமைந்தது. அதனால் அதை இந்தப் படத்திலும் கொடுக்க வேண்டும் என பணியாற்றி வருகிறார். அதோடு இப்படத்தில் அவரது ரெகுலர் டச்சான குத்துப்பாடலும் இடம்பெறுகிறது. அதற்காக அவரது ஆஸ்தான கதாநாயகியாக மாறியுள்ள தமன்னா மற்றும் ராஷி கண்ணா ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்திவருகிறார். முதற்கட்ட படப்பிடிப்பை சமீபத்தில் தொடங்கியுள்ளார். இதில் வடிவேலுவும் கலந்து கொண்டுள்ளார்.
விறுவிறு தனுஷ்!
நடிகராக தனது கரியரை ஆரம்பித்த தனுஷ், தொடர்ந்து தயாரிப்பாளர், பாடகர், இயக்குநர் என அடுத்தடுத்து பயணித்து வருகிறார். பா. பாண்டிக்குப் பிறகு இரண்டாவதாக அவர் இயக்கிய "ராயன்' படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதையடுத்து மூன்றாவது படமாக ‘"நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்'’ படத்தை இயக்கி முடித்துள்ளார். இதில் அவரது சகோதரி மகன் பவிஷ் ஹீரோவாக நடிக்க, அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தை தொடர்ந்து மீண்டும் ஒரு படம் இயக்கவுள்ளார் தனுஷ். இதில் எஸ்.ஜே.சூர்யா, பிரகாஷ்ராஜ், நித்யா மேனன் உள்ளிட்ட பிரபலங்கள் நடிக்கவுள்ளனர். படப்பிடிப்பு அடுத்த மாதம் இறுதியில் அல்லது செப்டம்பர் தொடக்கத்தில் ஆரம்பிக்கப் படவுள்ளது. உடனடியாக படப்பிடிப்பை தொடங்குவதால், அதே வேகத்தில் மொத்தப் படப்பிடிப்பையும் முடிக்க தனுஷ் திட்டமிட்டுள்ளார். பின்பு அடுத்தடுத்து அவர் கமிட் செய்துள்ள இந்தி படம், மாரி செல்வராஜ் படம் என நடிக்கவுள்ளார். இப்போது இளையராஜா பயோ-பிக், சேகர் கம்முலாவின் குபேரா உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கமல் பேச்சுவார்த்தை!
"தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்'’ படத்தில் நடித்துள்ள விஜய், தற்போது அடுத்த படத்தின் பணிகளில் கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டார். இப்படத்தை முடித்த பின்பு முழு நேர அரசியல்வாதியாக மாறவுள்ள விஜய், இப்படத்தை கொஞ்சம் கூடுதல் கவனத்துடன் அணுகி வருகிறார். இப்படத்தை வினோத் இயக்கவுள்ளார். கமலை வைத்து வினோத் இயக்கவிருந்த கதைதான் தற்போது விஜய் நடிக்கவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் சொல்கின்றன. அரசியல் கதைக்களத்தை இப்படம் பேசுகிறது. அதனால் தன்னுடைய அரசியல் பிரவேசத்துக்கு சரியாக இருக்கும் என எண்ணிய விஜய், படத்தின் பணிகளை வேகப்படுத்த வினோத்திடம் சொல்லியுள்ளார். வினோத்தும் நடிகர் நடிகைகள் தேர்வு செய்வதில் பிஸியாக இருக்க, ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் மோகன்லாலை நடிக்க வைக்க முடிவு செய்து பேச்சுவார்த்தையும் நடத்தினார். ஆனால் அது சுமுகமாக முடிய வில்லை. இதனால் அந்த கதாபாத்திரத்திற்கு வேறொரு பெரிய நடிகரை தேடி வந்த வினோத், கமல் சரியாக இருப்பதாக எண்ணியுள்ளார். இதை விஜய்யிடம் கூற, அவரும் கமலுக்கு ஓ.கே. என்றால் எனக்கும் ஓ.கே.தான். மற்றபடி அவரை ஃபோர்ஸ் செய்யவேண்டாம் என கேட்டுக்கொண்டாராம்.
ரிது ஹேப்பி!
தெலுங்கில் நடித்து வந்த ரிதுவர்மா, துல்கர் சல்மான் நடித்த "கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படம் மூலம் தமிழுக்கு வந்தார். பின்பு "நித்தம் ஒரு வானம்', "மார்க் ஆண்டனி' என ஹிட் படங்களில் நடித்திருந் தார். ஆனால் விக்ரமுடன் அவர் நடித்த "துருவ நட்சத்திரம்' இன்னும் வெளியாகவில்லை. இந்த சூழலில் ஒரு வெப்சீரிஸில் லீட் ரோலில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் ரிதுவர்மா. இதை கிஷோர் ரெட்டி இயக்குகிறார். பிரபல முன்னணி ஓ.டி.டி. தளத்தில் இந்த சீரிஸ் வெளியாகவுள்ளது. இந்த சீரிஸ் தெலுங்கில் படமாக்கப்பட்டு, பின்னர் தமிழில் டப் செய்து வெளியிடும் ப்ளானும் படக்குழுவிற்கு இருக்கிறதாம்.
-கவிதாசன் ஜெ.