நாலாவது முறை!
கோட்டையைப் பிடிக்கும் ஆசையில் கோலிவுட்டில் இருந்து வெளியேறவுள்ள விஜய்க்கு ‘"தளபதி 69-தான்' கடைசி படம். வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘"தி கோட்'’ படத்தில் நடித்து வரும் விஜய், அடுத்ததாக இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். அரசியல் பின்னணி கொண்ட இந்த படத்தில் மக்களை ஈர்ப்பதற்காக, ஆளும் கட்சிகளைக் கேள்வி கேட்கும் வகையில் வசனங்களை வைக்கவும் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. விஜய்யின் கடைசி படம் என்பதால், நடிகர்கள் தேர்வு முதல் தொழில்நுட்ப கலைஞர்கள் வரை ஒவ்வொருவரையும் பார்த்துப் பார்த்து தேர்வு செய்கிறார்கள். பிரபல தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் ஒப்பந்தம் செய்யப்பட, ஹீரோயின் தேர்வில் கோலிவுட் முதல் பாலிவுட் வரை இருக்கும் டாப் நடிகைகளின் பெயர்களும் அடிபட்டிருக்கிறது. இறுதியாக, சமந்தாவையே புக் செய்திருக்கிறது படக்குழு. "கத்தி', "தெறி', ‘"மெர்சல்'’என ஒன்றாக நடித்த இந்த ரீல் ஜோடி தற்போது 4வது முறையாக "தளபதி 69'” படத்தில் இணையவுள்ளது குறிப்பிடத்தக்கது.
சிம்ரன் ஜோடி!
தொடர் தோல்வியால் துவண்டு கிடந்த சசிகுமாருக்குக் கடந்த வருடம் வெளியான ‘"அயோத்தி'’ படம் பெரும் ஹிட்டடிக்க, அதற்குப் பிறகு வெளியான படங்கள் சசிகுமாரை மீண்டும் பழைய நிலைமைக்குக் கொண்டுவந்தன. இந்த நிலையில் சூரியின் "கருடன்'’ படத்தில் சசிகுமார் நடித்த கதாபாத்திரம் பலரது கவனம் பெற, சசிகுமாரின் வீட்டை பட வாய்ப்புகள் தட்டத் தொடங்கியுள்ளது. பலரிடமும் கதை கேட்டு, ஒரு அறிமுக இயக்குநரை ஓ.கே. செய்திருக்கிறார் சசிகுமார். ஒரு எமோஷனலான நல்ல ஃபீல்குட் குடும்பக் கதை என்பதால், சசி குமார் கால்ஷீட் கொடுக்க, சூட்டோடு சூடாக சிம்ரனை சசிகுமாருக்கு ஜோடியாக நடிக்கப் பேசி முடித்திருக்கிறது படக்குழு. இந்த படத்தை ‘குட் நைட்’ படத்தைத் தயாரித்த மில்லியன் டாலர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.
விறுவிறு வினோத்!
"சதுரங்க வேட்டை', ‘"தீரன்'’ போன்ற படங்களின் மூலம் பெரும் பிரபலமான எச்.வினோத், அடுத்தபடியாக அஜித்தை வைத்து சமூக கருத்துள்ள மூன்று படங்களை இயக்கினார். அதில் இரு படங்கள் ஹிட்டடிக்க, "வலிமை'’படம் சில விமர்சனங்களுக்கு உள்ளானது. இருப்பினும் 3 படங்களுமே வசூலை வாரிக்குவிக்க, எச்.வினோத்திற்கு கோடம்பாக்கத்தில் டிமாண்ட் அதிகமானது. "துணிவு'’ படத்திற்கு பிறகு கமலை வைத்து எச்.வினோத் இயக்கவிருந்த படம் ட்ராப் ஆன நிலையில், உடனே சுதாரித்துக்கொண்ட விஜய், தனது கடைசி படமான "தளபதி 69' படத்தின் இயக்குநராக புக் செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து தனுஷுடன் ஒரு படம், மீண்டும் அஜித்துடன் ஒரு படம் என அடுத்தடுத்து எச்.வினோத் கமிட்டாகியுள்ளார். ‘அமரன்’ படத்தில் நடித்து முடித்துள்ள சிவகார்த்திகேயன் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் சிவகார்த்திகேயன் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்து, கதை கேட்டிருக் கிறார். அவர் சொன்ன ஒன்லைன் பிடித்துப்போக, ஃபேஷன் ஸ்டுடியோ தயாரிப்பில் ஒரு படம் இயக்க எச்.வினோத் புக் செய்யப்பட்டிருக்கிறார்.
பகத் ஃபாசிலோடு பேச்சு!
ஏ.ஆர்.முருகதாஸ், சல்மான்கானை வைத்து பாலிவுட்டில் "சிக்கந்தர்'’என்ற படத்தை இயக்கி வருகிறார். கதாநாயகிகளாக ராஷ்மிகா மந்தனா, கரீனா கபூர் நடிக்க, மும்பையைச் சுற்றியுள்ள பகுதியில் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. பொதுவாகவே ஏ.ஆர்.முருகதாஸின் படங்களில் வில்லன் கதாபாத்திரம் ஸ்ட்ராங்காக இருக்கும். அந்த வகையில் "சிக்கந்தர்'’படத்திலும் வலுவான வில்லன் கதாபாத்திரம் இருப்பதால், அதற்கு ஏற்றவாறு ஒரு நடிகரை ஏ.ஆர்.முருகதாஸ் தேடி வருகிறார். இந்த நிலையில் மலையாள நடிகர் ஃபகத் ஃபாசில் நடித்தால் சரியாக இருக்கும் என்று எண்ணிய படக்குழு, அவரிடம் பேச்சுவார்த்தை நடத்திவருகிறது.
-அருண்பிரகாஷ்