அதர்வா ஜோடி!
"பிரேமலு' படம் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர் மலையாள நடிகை மமிதா பைஜு. தமிழில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் கடந்த மார்ச்சில் வெளியான "ரெபல்' படம் மூலம் அறிமுகமானார். ஆனால் அந்த படம் அவரை வெகுவாக ரசிகர்களிடம் கொண்டு போய் சேர்க்கவில்லை. இதையடுத்து விஷ்ணுவிஷால் #ராம்குமார் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தில் கதாநாயகியாக நடிக்க கமிட்டானதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் தமிழில் தற்போது இரண்டு படங்களில் அவர் ஒப்பந்தமாகியுள்ளார். பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். இப்படத்தை சுதா கொங்கராவிடம் உதவி இயக்குநராக இருந்த கீர்த்தீஸ்வரன் இயக்க, மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கிறது. அதர்வா நடிக்கும் புதிய படத்திலும் அவருக்கு ஜோடியாக மமிதா பைஜு. நடிக்கிறார். இப்படத்தை அறிமுக இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்க லைகா தயாரிக்கிறது.
த்ரிஷா சாமி!
"மூக்குத்தி அம்மன்' மற்றும் "வீட்ல விசேஷம்' ஆகிய படங்களில் இணை இயக்குநராக பணியாற்றியிருந்தார் ஆர்.ஜே.பாலாஜி. இதையடுத்து ஹீரோவாக தொடர்ந்து பயணித்த ஆர்.ஜே. பாலாஜி, தற்போது மீண்டும் இயக்கம் பக்கம் திரும்பி, மூக்குத்தி அம்மன் இரண்டாம் பாகத்தை எடுக்க முயற்சித்து வருகிறார். ஆனால் அம்மன் கதாபாத்திரத்தில் நயன்தாரா நடிக்கவில்லை. அவருக்கு பதிலாக வேறொரு முன்னணி நடிகையை நடிக்கவைக்க யோசித்த ஆர்.ஜே.பாலாஜி தற்போது பீக்கில் இருக்கும் த்ரிஷாவை அணுகியுள்ளார். த்ரிஷாவும் சாமி கதாபாத்திரத்தில் நடித்ததில்லை என்பதால் க்ரீன் சிக்னல் கொடுத்துள்ளார். இந்த படம் மூக்குத்தி அம்மன் என்ற தலைப்பில் இல்லாமல் புது தலைப்பில் உருவாகிறது. "மூக்குத்தி அம்மன்' மற்றும் "வீட்ல விசேஷம்' படத்தில் இணை இயக்குநராக பணியாற்றிய என்.ஜே.சரவணன் இந்தப் படத்தை இயக்கவுள்ளார்.
பாசிட்டிவ் மேகா!
"பேட்ட' படத்தின் மூலம் அறிமுகமான மேகா ஆகாஷ், தொடர்ந்து தனுஷின் "என்னை நோக்கி பாயும் தோட்டா', விஜய் சேதுபதியின் "யாதும் ஊரே யாவரும் கேளிர்' உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். சமீபமாக அவர் நடித்து வெளியான "சபாநாயகன்', "வடக்குப்பட்டி ராமசாமி' படங்கள் ஓரளவு வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து அவர் நடிப்பில் "மழை பிடிக்காத மனிதன்' வெளியாகவுள்ளது. இதில் விஜய்ஆண்டனி ஹீரோவாக நடிக்க, விஜய் மில்டன் இயக்கியுள்ளார். இப்படம் குறித்து பேசிய மேகா ஆகாஷ், ""எல்லா படங்களுமே எனக்கு ஸ்பெஷல்தான். ஆனால், இந்தப் படத்தில் நடிக்கும்போதே பாசிட்டிவாக இருந்தது. விஜய்ஆண்டனி போன்ற திறமையான நடிகருடன் சேர்ந்து நடித்தது நல்ல அனுபவம்'' என்றார்.
பாடகி அமலாபால்!
ஹீரோயினாக தனது கேரியரை ஆரம்பித்த அமலாபால், பின்பு லீட் ரோ-ல் நடித்து வந்தார். 2022ஆம் ஆண்டு அவர் நடிப்பில் வெளியான "கடாவர்' படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் உருவெடுத்தார். இப்படி அடுத்தடுத்து புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வந்த அமலாபால், தற்போது பாடகியாகவும் அவதாரம் எடுத்துள்ளார். "லெவல் கிராஸ்' என்ற தலைப்பில் கதாநாயாகியாக நடித்துள்ள அவர், ‘"என்டே பின்னிலே ரூபம்...'’ என்ற பாடலை பாடியுள்ளார். 9 மாத கர்ப்பிணியாக இருக்கும் அமலா பால், தொடர்ந்து புது முயற்சி எடுப்பது, புரொமோஷன் பணிகளிலும் தவறாமல் கலந்துகொள்வது என சினிமாவில் மும்முரமாக பயணித்து வருகிறார்.
மலேசியாவில் சூரி!
நகைச்சுவை நடிகராக இருந்து "விடுதலை' படத்தின் வெற்றிமூலம் கதை நாயகனாக மாற்றம் கண்ட சூரியின் மற்றுமொரு குறிப்பிடத்தக்க படம் "கருடன்'. 7 நாட்களில் 7.2 மில்-யனுக்கும் அதிகமான பார்வைகளுடன் யூடியூப்பில் டிரெண்டிங்கில் உள்ள "கருடன்' படத்தை, தெற்காசிய நாடுகளில் வெளியிடுவதற்கான உரிமையை 3 டாட் நிறுவனம் பெற்றுள்ளது. இப்படத்தின் மலேசிய வெளியீட்டுக்காக சமீபத்தில் மலேசியாவில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றை மேற்கொண்டார் சூரி. நகைச்சுவை நடிகர் என்பதி-ருந்து மெல்ல மெல்ல தன் சிறகுகளை அகலமாக விரிக்கத் தொடங்கியிருக்கிறார் சூரி.