கடும் உழைப்பு!
கதாநாயகியைத் தாண்டி கதையின் நாயகியாக நடிக்க அதிக கவனம் செலுத்திவருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். அந்த வகையில் கதையின் நாயகியாக அவர் நடித்த படங்கள் விமர்சன ரீதியாகக் கூட வரவேற்பை பெறவில்லை. இருப்பினும் கைவசம் 3 தமிழ் படங்கள், 2 மலையாளப் படங்கள். இப்போது புதிதாக கதையின் நாயகியாக ஒரு படம் நடித்துவருகிறார். "வளையம்'’ என்ற தலைப்பில் சயின்ஸ் ஃபிக்சன் + ஆக்ஷன் கலந்த த்ரில்லர் ஜானரில் படம் உருவாகிறது. ஆக்சஸ் ஃபிலிம் பேக்டரி தயாரிக்கும் இப்படத்தை மனோபாரதி இயக்குகிறார். சென்னையில் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தை வெற்றிப் படமாக்க கடுமையாக உழைத்துவருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
கை மாறிய கங்குலி!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கங்குலியின் பயோபிக், தற்போது வேகமெடுத்துள்ளது. 2019ஆம் ஆண்டு இதற்கான அறிவிப்பு வெளியான நிலையில் கங்குலி கதாபாத்திரத்தில் நடிக்க ஹிருத்திக் ரோஷன், சித்தார்த் மல்ஹோத்ரா, ரன்பீர் கபூர் உள்ளிட்ட யாருமே க்ரீன் சிக்னல் கொடுக்கவில்லை. கடந்த ஆண்டு ஆயுஷ்மான் குரானா நடிக்கவுள்ளதாகவும், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இப்படத்தை இயக்கவுள்ளதாகவும் சொல்லப்பட்டது. இந்த சூழலில், இப்படம் சௌந்தர்யா ரஜினிகாந்துக்கு கை மாறியுள்ளது. ரஜினியும் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கவுள்ளார். பாலிவுட் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரு மான சஜித் நாடியத்வாலா இப்படத்தை தயாரிக்கிறார்.
கேங்ஸ்டர் கார்த்தி!
கார்த்தி தற்போது நலன் குமரசாமி இயக்கத்தில், ‘"வா வாத்தியாரே'’ மற்றும் பிரேம்குமார் இயக்கத்தில் ‘"மெய்யழகன்'’ ஆகிய இரண்டு படங்களில் நடித்து முடித்துள்ளார். அடுத்து பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் "சர்தார் 2'வில் நடிக்கவுள்ளார். அதை முடித்துவிட்டு, "டாணாக்காரன்' படத்தை இயக்கிய தமிழ் இயக்த்தில் நடிக்கிறார். கேங்ஸ்டர் பின்னணியில் உருவாகும் இப்படத்தை எஸ்.ஆர் பிரபுவின் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.
பரபர படப்பிடிப்பு!
நடிப்பு மட்டுமல்லாது இயக்குநராகவும் வலம்வருபவர் அர்ஜுன். "பட்டத்து யானை' மூலம் அறிமுகமான தனது மகள் ஐஸ்வர்யாவை தன்னுடைய இயக்கத்தில் "பிரேமா பராஹா' படம் மூலமாக கன்னட திரையுலகில் அறிமுகம் செய்தார். தமிழிலும் இப்படம் படமாக்கப்பட்டு "சொல்லி விடவா' என்ற தலைப்பில் வெளியானது. இதையடுத்து முதன்மை கதாபாத்திரத்தில் அவரை வைத்து ஒரு படம் தொடங்கினார். தெலுங்கு, கன்னடம் மற்றும் தமிழில் படமாக்கத் திட்ட மிட்டிருந்தார். அதில் கதாநாயகனாக விஷ்வக்சென்னை புக் செய்தார். பின்பு சில காரணங்களால் அவர் விலக, நிரஞ்சன் சுதீந்திராவை கமிட் செய்து, படப்பிடிப்பு சில நாட்கள் தொடங்கி பின்பு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் படப்பிடிப்பு மீண்டும் சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. அடுத்ததாக ஹைதராபாத் மற்றும் பெங்களூருவில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் சத்யராஜ், ஐஸ்வர்யாவின் தந்தை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அர்ஜுனும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
எஸ்.ஜே.சூர்யா ஓ.கே!
"ரெமோ', "சுல்தான்' உள்ளிட்ட படங்களை இயக்கிய பாக்யராஜ் கண்ணன், எஸ்.ஜே. சூர்யாவை சந்தித்து கதை சொல்ல... எஸ்.ஜே. சூர்யாவும் நடிப்பதாக ஓ.கே. சொல்லியுள்ளார். தற்போது, தான் நடித்துவரும் "இந்தியன் 2', "கேம் சேஞ்சர்', ‘"எல்.ஐ.சி', ’விக்ரமின் 62வது படம் அனைத்தையும் முடித்துவிட்டு இப்படத்தில் நடிப்பதாக ஒப்புக்கொண் டுள்ளாராம்.
-கவிதாசன் ஜெ.