ஐந்தாவது முறையாக!
அஜித் நடிக்கும் "விடாமுயற்சி' படத்தின் படப்பிடிப்பு கடந்த மாத இறுதியில் தொடங்க படக்குழு திட்டமிட்டிருந்தது. ஆனால் சில காரணங்களால் தொடங்கப்படாமல் இருந்த நிலையில் வருகிற 8ஆம் தேதி படப்பிடிப்பு தொடங்க உள்ளது. அதற்கான முழு முயற்சியில் தற்போது ஈடுபட்டு வருகிறார் இயக்குநர் மகிழ் திருமேனி. அதே சமயம் படத்தின் கதாநாயகியையும் கமிட் செய்துள்ளார். 5வது முறையாக அஜித்துக்கு ஜோடியாகிறார் த்ரிஷா. முன்னதாக "அஜித் 62' படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவிருந்த நிலையில் கதாநாயகியாக த்ரிஷாவிடம் பேச்சுவார்த்தை நடந்தது. விஜய்யின் 'லியோ' படத்துக்கு ஒப்புக்கொண்டதால் கால்ஷீட் பிரச்சனை காரணமாக அஜித் படத்துக்கு நோ சொல்ல வேண்டிய சூழல் த்ரிஷாவுக்கு வந்தது. ஆனால் விக்னேஷ் சிவன் இப்படத்தில் இருந்து வெளியேற படம் ஆரம்பிக்க தாமதம் ஆனது. இந்த தாமதமான நேரத்தில் லியோ படப்பிடிப்பில் கலந்துகொண்ட த்ரிஷாவிடம் மீண்டும் போய் அணுகியுள்ளார் புதிதாக கமிட்டான மகிழ் திருமேனி. ஏற்கெனவே இப்பட வாய்ப்பை தவறவிட்ட சங்கடத்தில் இருந்த த்ரிஷா திரும்பி வந்த வாய்ப்பை தவறவிடவில்லை. நடிப்பதாக ஒப்புக்கொண்டுள்ளார். இப்படத்திற்காக கால்ஷீட்டை அட்ஜஸ்ட் பண்ணிக் கொடுத்துள்ளார் த்ரிஷா.
ரூட்டை மாற்றிய தமன்னா!
சுந்தர்.சி, தற்போது "அரண்மனை 4' படத்தை இயக்கியும், நடித்தும் வருகிறார். லைகா தயாரிக்கும், இப்படத்தில் கதாநாயகிகளாக ராஷி கண்ணா, தமன்னா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் கேரளாவில் உள்ள பாலக்காட்டு பகுதி களில் நடந்து முடிந்துள்ளது. விரைவில் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. ராஷி கண்ணா சுந்தர் சிக்கு ஜோடியாக நடிக்கிறார். சந்தோஷ் பிரதாபுக்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார். தமன்னாவின் கதா பாத்திரம் முக்கிய கதாபாத்திரம் எனவும், பேய் கதா பாத்திரம் எனவும் சொல்லப்படுகிறது. இதேபோல் ரஜினியின் ஜெயிலர் படத்தில் நடித்து வரும் தமன்னா, அதிலும் ஹீரோவுக்கு ஜோடியாக இல்லாமல் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 3 வருட இடைவெளிக்கு பிறகு தமிழில் நடிக்க தொடங்கிய தமன்னா, கதாநாயகியாக கம்-பேக் கொடுப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் வேறு ரூட்டை கையில் எடுத்துள்ளார்.
வெப் சீரிஸ் என்ட்ரி!
ஹீரோ மற்றும் காமெடியன் என இரண்டு கதா பாத்திரங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார் யோகி பாபு. இப்போது ரஜினியின் "ஜெயிலர்', ஷாருக்கானின் "ஜவான்' உள்ளிட்ட பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்திலும் "மெடிக்கல் மிரக்கில்', "பூமர் அங்கிள்' உள்ளிட்ட பல படங்களில் முதன்மை கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் முதன் முறையாக வெப் சீரிஸில் கால் பதித்துள்ளார் யோகி பாபு. இதில் ஹீரோ வாக நடிக்கிறார். வேல்ஸ் ஃபிலிம் சார்பாக ஐசரி கணேஷ் இத்தொடரை தயாரிக்க, மொழி, அபியும் நானும் பட இயக்குநர் ராதா மோகன் இயக்குகிறார். இத்தொடரின் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
ஓ.கே. சொன்ன ஜெயம் ரவி!
இயக்குநர் அந்தோணி பாக்யராஜ் இயக்கும் "சைரன்' படத்திலும், இயக்குநர் அஹமத் இயக்கும் "இறைவன்' படத்திலும் நடித்து முடித்துள்ளார் ஜெயம் ரவி. இப்போது ஏகப்பட்ட படங்களில் நடிக்கக் கமிட்டாகியுள்ளார். ஐசரி கணேஷ் தயாரிப்பில் ரூ.100 கோடி பட்ஜெட்டில் பான் இந்தியா படத்தில் நடிக்கவுள்ளார். மேலும் ரெட் ஜெயண்ட் தயாரிப்பில் கிருத்திகா உதயநிதி இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். அதோடு இயக்குநர் பாண்டிராஜிடம் கதை கேட்டு ஓகே சொல்லியுள்ளார். இந்நிலையில் மேலும் ஒரு இயக்குநரிடம் கதையைக் கேட்டு ஓகே சொல்லியுள்ளார் ஜெயம் ரவி. "அடங்கமறு' படத்தை இயக்கிய கார்த்திக் தங்கவேலிடம் கதை கேட்டுள்ளார். கதையைக் கேட்டு பிடித்துப் போகவே நடிக்க சம்மதம் தெரிவித்து விட்டார். முழு ஸ்க்ரிப்ட் ரெடியானதும் அடுத்தகட்ட பணிகள் தொடங்கவுள்ளது. கார்த்திக் தங்கவேல், ஏற்கனவே விஷாலிடம் கதை சொல்லி நீண்ட காலமாக அவரது கால்ஷீட்டிற்கு காத்துக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- கவிதாசன் ஜெ.