"தல' படத்தில் சிரஞ்சீவி!
தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி நடிப்பில் வெளியான "வால்டர் வீரய்யா' வெளியாகி ஓடிக்கொண்டிருக் கும் நிலையில்... தற்போது "வேதாளம்' படத்தின் தெலுங்கு ரீ-மேக்கில் நடித்து வருகிறார். மெஹர்ரமேஷ் இயக்கும் இப்படத்தில் கீர்த்திசுரேஷ் தங்கச்சி கதாபாத்திரத்திலும் தமன்னா கதாநாயகி கதா பாத்திரத்திலும் நடிக்கின் றனர். இப்படம் வருகிற ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகிறது. தொடர்ந்து ரீமேக் படங்களில் ஆர்வம் காட்டி வரும் சிரஞ்சீவி, விஜய்யின் "கத்தி', மோகன் லாலி−ன் "லூசிஃபர்' படத்தைத் தொடர்ந்து மீண்டும் ஒரு ரீமேக் படம் எடுக்க முடிவெடுத்துள்ளார். அஜித் நடிப்பில் சிவா இயக்கத்தில் வெளியான "விஸ்வாசம்' சிரஞ்சீவிக்கு மிகவும் பிடித்த படமாம். அதனால் "வேதாளம்' படத்தை தொடர்ந்து "விஸ்வாசம்' படத்தின் ரீமேக் உரிமையையும் சிரஞ்சீவி வாங்கியுள்ளார். இப்படத்தில் சிரஞ்சீவி நாயகனாக நடிக்க, "கைதி நம்பர் 150' படத்தை எடுத்த வி.வி. விநாயக் இயக்கவுள்ளதாகவும் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் டோ−லிவுட் வட்டாரத்தில் பேசப் படுகிறது.
7 மொழிகளில் மணிரத்னம்!
"இந்தியன் 2' படத்தில் நடித்துவரும் கமல்ஹாசன், அடுத்து மணிரத்னம் இயக்கத் தில் நடிக்கவுள்ளாராம். 35 ஆண்டு களுக்கு பிறகு மீண்டும் இவர்கள் இணைந்துள்ளதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. அதை பூர்த்தி செய்யும் வகையில் படத்தை உருவாக்க மணிரத்னம் திட்டமிட்டுள்ளார். பெரும் பொருட்செலவில் பான் இந்தியா படமாக உருவாக்கத் திட்டமிட்டுள்ள மணிரத்னம் மலையாளம், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட 7 மொழிகளில் டாப் ஹீரோக்களை நடிக்க வைக்க முடிவெடுத்துள்ளார். முதற்கட்டமாக ஷாருக்கானிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. மற்ற மொழிகளிலும் முன்னணி நடிகர்களை ஒப்பந்தம் செய்யவிருக்கிறார். "பொன்னியின் செல்வன் 2' வெளியீட்டுக்குப் பிறகு கமல் படத்தை மணிரத்னம் இயக்குவார் என்றும், அதற்குள் "இந்தியன் 2'வை கமல் முடித்துவிடுவார் எனவும், ஏப்ரலுக்குப் பிறகு படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கார்த்தி க்ரீன் சிக்னல்!
"பசங்க', "சுந்தரபாண்டியன்', "நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' உள்ளிட்ட படங்களில் ஒளிப்பதிவாளராகவும், "96' படம் மூலம் இயக்குநராகவும் அவதாரம் எடுத்தவர் பிரேம்குமார். விஜய் சேதுபதியின் வெற்றிப்பட லி−ஸ்டிலும், திரிஷாவுக்கு அவரது கரியரில் முக்கியமான படமாகவும் அமைந்த "96' படத்தை தெலுங்கில் ரீமேக் செய்தார் பிரேம்குமார். இதையடுத்து அவர் இயக்கும் அடுத்த படம் பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. சமீபத்தில் கார்த்தியிடம் ஒரு கதையை கூறியுள்ளார். கதையைக் கேட்ட கார்த்தி க்ரீன் சிக்னல் காட்ட, உடனே படத்தின் ஆரம்பகட்ட பணிகளைத் தொடங்கிவிட்டார் பிரேம்குமார். இப்படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கிறது. கார்த்தி தற்போது ராஜூமுருகன் இயக்கும் "ஜப்பான்' படத்தில் நடித்து வருகிறார். அடுத்து நலன் குமாரசாமி இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவுள்ளார். "ஜப்பான்' படத்தை முடித்த பிறகு தனது அடுத்த பட அறிவிப்பை கார்த்தி வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
நம்பிக்கையுடன் ரம்யா!
ரம்யா பாண்டியன், "ஜோக்கர்' படம் மூலம் பிரபலமாகியிருந்தாலும், அடுத்தடுத்து அவர் நடிப்பில் வெளியான "ஆண் தேவதை', 'இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்' படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதனால் கதையைத் தேர்வு செய்வதில் அதிகம் கவனம் செலுத்திவரும் ரம்யா பாண்டியன் இனிமேல் அழுத்தமான கதாபாத்திரங்கள் கொண்ட கதைகளுக்கே முக்கியத்துவம் கொடுப்பாராம். அப்படி ஒரு கதாபாத்திரத்தில்தான் கணேஷ் விநாயகன் இயக்கும் பெயரிடாத படத்தில் நடிக்க ஒப்பந்த மாகியுள்ளார். மலைவாழ் மக்களின் நிலம் தொடர்பான உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவாகும் இப்படத்தில், 12 வயது சிறுமிக்கு தாயாக நடிக்கவுள்ளார். இந்த கதாபாத்திரம் தனக்கு நல்ல பெயரை வாங்கித்தரும் என்று நம்புகிறார். ஆரவ் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில், காளி வெங்கட் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் 9ஆம் தேதி தொடங்கவுள்ளது.
-கவிதாசன் ஜெ.