மீண்டும் சுனைனா!

"காதலில் விழுந் தேன்' மூலம் தமிழுக்கு என்ட்ரி கொடுத்த சுனைனாவிற்கு தொடர்ச்சியாக ஹீரோயின் வாய்ப்பு கிடைக்காததால், டாப் நடிகர்களின் படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். கடந்த ஆண்டு வெளியான "ரெஜினா' படத்தில் மீண்டும் லீட் ரோலில் நடித்தவருக்கு அந்தப் படம் பெரிதாக கைகொடுக்கவில்லை. இதனால் வெப் சீரிஸ் பக்கம் ஆர்வம் காட்டினார். அவர் நடித்த "இன்ஸ்பெக்டர் ரிஷி' வெப் சீரிஸ் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து தற்போது தனுஷ் நடிக்கும் "குபேரா' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

Advertisment

tt

அம்மனாக அனுஷ்கா!

சில ஆண்டுகளாக நடிப்பிலிருந்து விலகியிருந்த அனுஷ்கா, கடந்த ஆண்டு தெலுங்கில் வெளியான ‘"மிஸ் ஷெட்டி, மிஸ்டர் பொலிஷெட்டி'’ படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். இப்படம் தமிழிலும் டப் செய்யப்பட்டு வெளியான நிலையில் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதனால் கவனமாய் காய் நகர்த்திய அனுஷ்கா, புது நகர்வாக மலையாளத்தில் ஆர்வம் காட்டினார். அந்த வகையில் முதல்முறையாக ஒரு மலையாள படத்திலும், தெலுங்கிலும் ஒரு படத்தில் நடித்துவருகிறார். மேலும் அம்மனாக தற்போது ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.

இந்தி இசை!

இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ், தமிழைத் தாண்டி இந்தியிலும் அவ்வப்போது இசையமைத்து வருகிறார். அந்தவகையில் தற்போது கங்கனா ரணாவத் இயக்கி நடிக்கும் "எமர்ஜென்சி' படத்திற்கு இசையமைத்து வருகிறார். ஏற்கனவே "சூரரைப் போற்று' இந்தி ரீமேக்கான "சர்ஃபிரா' படத்திற்கு இசையத்திருந்தார். சமீபத்தில் வெளியான இப்படம் படுதோல்வியடைந்தது. ஆனால் ஜி.வி பிரகாஷ் இசை அப்படத்தில் நடித்த அக்ஷய் குமாருக்கு ரொம்ப பிடித்துவிட்டதால், தனது படமான ‘"ஸ்கைபோர்ஸ்'’ படத்தில் இசையமைப்பாளராக கமிட் செய்துள்ளார். இப்படத்திற்கு பெரிய தொகை சம்பளமாக பேசப்பட்டுள்ளது. இதையடுத்து இந்தி படங்களிலும் தொடர்ச்சியாக கவனம் செலுத்த முடிவெடுத்துள்ளார் ஜி.வி பிரகாஷ்.

சூர்யா நெக்ஸ்ட்?

Advertisment

"கங்குவா' படத்தை அடுத்து கார்த்திக் சுப்புராஜ் படத்தில் நடித்துவருகிறார் சூர்யா. ஏற்கனவே சுதா கொங்கரா இயக்கத்தில் கமிட்டான படம் சிவகார்த்திகேயன் கைக்கு போய்விட்டது. வெற்றிமாறனின் "வாடிவாசல்' படம் இப்போதைக்கு தொடங்க வாய்ப்பில்லை. மேலும் இந்தியில் பெரும் பொருட்செலவில் எடுக்க திட்டமிடப்பட்ட கர்ணா படம் கைவிடப்பட்டதாக சொல்லப்படுகிறது. மேலும் சில தெலுங்கு இயக்குநர்களுடன் கதை கேட்டார். அதுவும் அடுத்த கட்டத்திற்கு செல்லவில்லை. இதனிடையே அட்லீ இயக்கத்தில் ஒரு படம் நடிக்க பேச்சுவார்த்தை நடந்துவருகிறது. இதனால் விரைவில் சூர்யா தனது அடுத்த படம் குறித்த அப்டேட்டை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாரிசுப் பட்டாளம்!

விஜய்யின் மகன் ஜேசன்சஞ்சய், லைகா தயாரிப்பில் படம் இயக்க கமிட்டாகியிருந்தார். படம் குறித்த எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகாமல் இருந்த நிலையில்... இப்போது அவரது இயக்கத்தில் விக்ரமின் மகனான துருவ் விக்ரம், ஷங்கரின் மகளான அதிதி ஷங்கர், ஏ.ஆர் ரஹ்மானின் மகனான ஏ.ஆர்.அமீன் ஆகியோர் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கிரிக்கெட் கதைக்களத்தை கொண்டு படம் தயாராவதாகவும், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் படத்தை வெளியிடும் பிளானில் படக்குழு இருக்கிறதெனவும் கோலிவுட் வட்டாரத்தினர் தெரிவித்தனர்.

-கவிதாசன் ஜெ.