திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள சிக்கந்தர் பள்ளிவாசல் தர்காவில் கடந்த டிசம்பர் 26 அன்று கந்தூரி நடத்த ஆடு, சேவல்களுடன் சென்றவர்கள், தடுத்து நிறுத்தப்பட்டதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. மலைமேல் உயிர்ப்பலி கொடுக்கக்கூடாது என்று போலீசார் தடை விதித்ததையடுத்து, ஜமாத்தார்கள் மூலம் தர்ணா போராட்டமும் நடத்தப்பட்டது. திருப்பரங் குன்றத்தைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் மலைப் படிக்கட்டு முன்பு அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

tt

திருமங்கலம் வருவாய் கோட்டாட்சியர் கணேசன், திருப்பரங்குன்றம் தாசில்தார் கவிதா, காவல்துறை உதவி ஆணையர்கள் சீதாராமன், குருசாமி சண்முகம், திருப்பரங்குன்றம் காவல் ஆய்வாளர் மதுரை வீரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். சமரசம் ஏற்படாததால், 50-க்கும் மேற்பட்டோர் திருப்பரங்குன்றம் மலைக்குச் செல்லும் வழியில் போலீஸாரைக் கண்டித்து தர்ணா போராட் டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து ஆடு, சேவல்கள் கொண்டுவந்தோர் உட்பட 10 பேரை போலீசார் கைது செய்து தனியார் மகாலில் தங்க வைத்து விடுவித்தனர்.

மாவட்ட ஆட்சியர் சங்கீதாவிடம் தர்காவை சேர்ந்த ஜமாத்தினர் நேரடியாக முறை யிட்டு மனு அளித்தனர். வக்புவாரிய தலைவரும் எம்.பி.யுமான நவாஸ்கனி கூறுகையில், "மக்கள் காலம்காலமாக நடத்திவரும் ஆடு, கோழி நேர்த் திக்கடன் விருந்து வழக்கமான ஒன்று தான். திடீரென காவல்துறை தடுப்பது குறித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டுசெல்வேன்''’என்றார்.

Advertisment

திருப்பரங்குன்ற சிக்கந்தர் பாதுஷா தர்காவின் ஜமாத் தலைவர் ஆரிப்கான் நம்மிடம், ”"ஆட்சிய ரிடம் தர்கா சம்பந்தமான அனைத்து ஆவணங்களையும் ஆதாரத்துடன் காண்பித்து விளக்கியுள்ளோம். 450 வருடங்களாக கந்தூரி விழாவில் ஆடு, கோழி பலியிட்டு அங்குவரும் மக்க ளுக்கு விருந்து கொடுத்து வருகிறோம். மாற்றுமத சகோதரர்களும் நேர்த் திக்கடன் செலுத்திவருகிறார்கள். சமீபமாக இந்துமுன்னணியைச் சேர்ந்தவர்கள் வருடா வருடம் தர்காவிற்குச் சொந்தமான இடத்தில் கார்த்திகை தீபம் ஏற்றுவோம் என்று பிரச்சனை செய்து மத மோதலை ஏற்படுத்தும்விதமாக பதட்டத்தை ஏற்படுத்தி வந்தனர். தற்போது அவர்களின் தூண்டுதலில், வழக்கமாக நேர்த்திக்கடனை செலுத்தவந்த பக்தர்களை திருப்பரங்குன்ற காவல் ஆய்வாளர் தடுத்துநிறுத்தி ஆடு, கோழி பலியிட அனுமதியில்லை என்றார். அதற்கான உத்தரவு காப்பி இருக்கிறதா? இருந்தால் காண்பியுங் கள் என்றதற்கு, "அதெல்லாம் உங்க ளிடம் "காண்பிக்க முடியாது' என்றார். மாவட்ட ஆட்சியர் சங்கீதாவும் இருதரப்பிலும் விசாரணை செய்கிறோம் என்கிறார். போலீஸ் அரசு கட்டுப்பாட்டில் உள்ளது. மற் றொரு தரப்பு யார்? நாங்கள் கலெக் டரை பார்த்துவந்த சில நிமிடங்களில் தர்காவிற்கு பின்புறமுள்ள காசிவிஸ்வ நாதன் கோயில் வளாகத்தில் பன்னிக்குட்டிகளை வளர்க்க அனுமதிவேண்டி பா.ஜ.க.வை சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார் தலைமை யில் மனு கொடுத்துள்ளனர். வடநாட்டில் உள்ளதுபோன்று முஸ்லிகளுக்கும், இந்துக்களுக்கும் இடையே பதட்டத்தை ஏற்படுத்தும்விதமாக செயல்படுகிறார்கள். இதை தி.மு.க. அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பது எங்களுக் கெல்லாம் வேதனையாக இருக்கிறது''’என்றார்.

tt

பா.ஜ.க. வழக்கறிஞர் முத்துக்குமாரிடம் பேசினோம். "நம் புராணங்களில் ”நரியை பரியாக்கிய லீலை’, ”பிட்டுக்கு மண் சுமந்த லீலை” போன்று ”பன்றிக்கு பால் கொடுத்த லீலையும் நடந்திருக்கு. 12 பன்றிக்குட்டிகள் பாலில்லாமல் துடித்ததைக் கண்டு சிவபெருமான் கருணைகொண்டு தாய்ப்பன்றியாக மாறி பால்கொடுத்தார். வரும் 29ம்தேதி 12 பன்றிக்குட்டிகளை காசிவிஸ்வநாத கோயிலுக்கு காணிக்கையாகக் கொடுக்கப்போகிறோம் கோயிலுக்குப் போகும் வழியாக தர்கா இருப்பதால் முஸ்லிம்கள் எங்களின் வழிபாட்டிற்கு தடையாக இருப்பார்கள் என்ற அச்சமிருப்பதால் பாதுகாப்பு கொடுக்கவேண்டும் என்று ஆட்சியரிடமும், காவல்துறை கமிஷனரிடமும் மனு கொடுத்துளோம்''’என்று முடித்துக்கொண்டார்.

Advertisment

இந்த பன்றிக்குட்டி அறிவிப்பால் அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவரும் வழக்கறிஞருமான பசும்பொன் பாண்டியன் ஆவேசமாகி, "திருப்பரங்குன்ற மலை காலம்காலமாக இந்து- முஸ்லிம் ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக இருந்துவருகிறது. ஆனால் பா.ஜ.க., இந்து முன்னணியைச் சேர்ந்தவர்கள், திடீரென ஆடு, கோழி நேர்த்திக்கடனை செய்யக்கூடாது என்று, கோர்ட் உத்தரவோ, அரசு உத்தரவோ இல்லாமல் தடுப்பது எந்தவிதத்திலும் நியாயமில்லை. ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகள் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் வருவதால் இந்துத்துவா ஆர்.எஸ்.எஸ்.ஸுக்கு இணக்கமாகச் செயல்பட பா.ஜ.க. அழுத்தம் கொடுக்கிறதோ என்ற சந்தேகம் நாளுக்கு நாள் வலுப்படத் தொடங்கியிருக்கு. அதை முளையிலேயே கிள்ளியெறிய வேண்டும். இல்லையென்றால் அதிகாரிகளின் துணையோடு அவர்கள் தமிழகத்தை கலவர பூமியாக ஆக்கிவிடுவார்கள்''’என்றார்.