ff

(9) கடல் தின்ற கண்டம்!

ல்லாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மனித நாகரிகம் கடற்கோளால் அழிந்ததாக ஆராய்ச்சியாளர்களால் நம்பப்படுகிறது.

நாகப்பட்டினத்திலிருந்து 58 கிலோமீட்டர் தூரத்தில் கடலுக்கடியில் 11000 வருடம் பழமையான கோட்டைச்சுவர்கள் இருப்பதைக் கண்டறிந்தார்கள். இது சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டிருக்கும் பூம்புகார் நகரமாக இருக்கலாம் என்பது ஆராய்ச்சியாளர்கள் கருத்து. மணி மேகலையில் பூம்புகார் நகரம் கடற்கோளால் அழிந் தது பற்றி விரிவாகவே குறிக்கப்பட்டிருக்கிறது.

Advertisment

தற்போதைய கன்னியாகுமரிக்கு தெற்கே இந்தியா -ஆஸ்திரேலியா -மடகாஸ்கர் ஆகிய மூன்று நாடுகளையும் இணைத்த ஒரு மாபெரும் நிலப்பகுதி கடலுக்கடியில் இருப்ப தாகவும், இங்குதான் மனித இனம் தோன்றிய தாகவும் பல்வேறு ஆராய்ச்சியாளர்களால் நம்பப் படுகிற பகுதி குமரிக்கண்டம்.

பிற்காலத்தில் கடற்கோள்களால் இந்தப் பகுதி கடலுக்கடியில் சென்று விட்டதாக சங்க இலக்கிய ஆதாரங்களுடன் ஒரு சாரார் வாதாடுகின்றனர். இலக்கியச் சான்றுகளை வரலாற்று ஆவணமாக எடுத்துக்கொள்ள முடியாது என இதை மறுப்பவரும் உண்டு. உண்மையில் கடலுக்கடியில் அப்படி ஒரு பகுதி இருந்ததா? தென்புலத்தார் என்று வள்ளுவர் குறிப்பிடுவது குமரிக்கண்டத்தில் வாழ்ந்து மறைந்த நம் முன்னோர்களையா? ஏறு தழுவுதலுக்கும் குமரிக்கண்டத்திற்கும் என்ன தொடர்பு?

விரிவாகப் பார்க்கலாம்

Advertisment

1864-ஆம் ஆண்டு இங்கிலாந்தைச் சேர்ந்த உயிரியல் மற்றும் புவியியல் ஆராய்ச்சியாளரான பிலிப் ஸ்க்லேட்டர் என்பவர், தமிழ்நாட்டின் மேற்குத்தொடர்ச்சி மலைகளில் லெமூர் என்னும் குரங்குகளின் புதை படிமத்தினைக் கண்டறிந்தார். இது அவருக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி யது. ஏனெனில், இந்த லெமூர் குரங்குகள் தற்போதைய ஆப்பிரிக்காவிலும், மடகாஸ்கரிலும் மட்டுமே வாழக்கூடியது. இந்த விலங்கு, கடல் கடந்து எப்படி தமிழ்நாட்டிற்கு வந்ததென்பது விடைதெரியா கேள்வியாகிறது. அது மட்டுமல் லாமல், ஆப்பரிக்காவில் இருக்கும் சிங்கம், யானை, சிறுத்தை போன்ற விலங்குகளின் உருவஅமைப்பு தமிழ்நாட்டு விலங்குகளின் உருவத்தோடு ஒத்துப்போவதையும் கண்டறிகிறார்.

மடகாஸ்கர், ஆஸ்திரேலியா, தமிழ்நாடு மூன்றையும் இணைக்கும்படியான ஒரு மாபெரும் நிலப்பகுதி இருந்திருக்கலாம் என முடிவு செய்து, அந்த கண்டத்திற்கு லெமூரியா எனவும் பெயர் வைத்து ஒரு கோட்பாட்டை வகுத்தார்.

1868-ஆம் ஆண்டு ஜெர்மனியைச் சேர்ந்த உயிரியல் ஆராய்ச்சியாளர் ஹெர்னஸ்ட் ஹெக்கேல், பட்ங் ஐண்ள்ற்ர்ழ்ஹ் ர்ச் ஈழ்ங்ஹற்ண்ர்ய் என்ற புத்தகத்தை வெளியிடுகிறார். அதில் லெமூரியா கண்டத்தை ‘மனித இனத்தின் தொட்டில். இங்கு மனித இனம் உருவாகி இப்போது உலகம் முழுவதும் பரவியிருப்பதாக வலுவான ஆதாரங்களுடன் நிரூபிக்கிறார்.

அதற்குப் பின் 1903-ஆம் ஆண்டு சூரியநாரா யண சாஸ்திரியார் எழுதிய தமிழ்மொழியின் வரலாறு என்ற புத்தகத்தில்தான் லெமூரியா நிலப்பரப்பிற்கு முதலில் குமரிநாடு என்று வைத்து அழைக்கிறார். சங்க இலக்கியங்களில் தமிழ்நாட் டின் தெற்கே ஒரு பெரும்நிலப்பரப்பு இருந்ததாக வும், அதை பாண்டியர்கள் ஆட்சி செய்ததாகவும் குறிப்புகள் உண்டு. பின் கடற்கோள்களால் அது மூழ்க, மெதுவாக வடக்கே இடம்பெயர்ந்து தற்போதைய தமிழ்நாட்டிற்கு குடிபெயர்ந்தார்கள் எனவும் கூறப்பட்டிருக்கிறது.

சங்கப்புலவர் நக்கீரர் உரை எழுதிய ’இறையனார் அகப்பொருள்’ என்ற சங்க கால நூல் இதை இன்னும் விரிவாகப் பேசுகிறது. அதில், குமரிக்கண்டத்தில் தென்மதுரை என்ற பாண்டிய ரின் தலைநகரில் முதல் தமிழ்ச்சங்கம் 4400 ஆண்டு களுக்கு முன் இருந்ததாகவும், சிவன், முருகன், அகத்தியர், குபேரன் உட்பட 549 புலவர்கள் இருந்ததாகவும் குறிப்பிடப்படுகிறது. தென்மதுரை சிறிது சிறிதாக கடற்கோளால் மூழ்கத் தொடங்கிய பிறகு பாண்டியர்கள் வடக்கு நோக்கி நகர்ந்து கபாடபுரம் என்ற இடத்தை தலைநகராக்கி ஆட்சி செய்தனர். கபாடபுரத்தில் 3700 ஆண்டுகள் இரண் டாம் தமிழ்ச்சங்கம் செயல்பட்டதாகவும், 54 புலவர்கள் இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டிருக் கிறது. பிற்காலத்தில் கபாடபுரமும் கடற்கோளில் மூழ்கியதால், அங்கிருந்து வடக்கே நகர்ந்த பாண்டியர்கள், தற்போதைய தூத்துக்குடியில் கொற்கை என்ற பகுதியை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தார்கள். அதற்குப்பின் தற்போதைய மதுரையை தலைநகராக்கிக் குடிபெயர்ந்தார்கள். அங்கே 1850 வருடங்கள் மூன்றாம் தமிழ்ச்சங்கம் செயல்பட்டது. முதல் இரண்டு தமிழ்ச் சங்கங்களின் நூல்கள் நமக்குக் கிடைக்கப்பெறவில்லை. இன்று நம்மிடம் இருப்பது மூன்றாம் தமிழ்ச்சங்கத்தின் பாடல்கள் மட்டுமே!

dd

"வடவேங்கட தென் குமரி ஆயிடை தமிழ் கூறு நல்லுலகம்'’என்று குமரிக்கண்டத்தின் நிலப் பரப்பைப் பற்றி தொல்காப்பியர் எழுதியிருக்கிறார். குமரிக்கண்டத்தில் நெடும் மலைகள் இருந்த தாகவும், பஃருளி என்ற ஆறு இருந்ததாகவும் சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்படுகின்றது. கலித்தொகை, நன்னூல், கந்தபுராணம் போன்ற சங்க இலக்கியங்களிலும் குமரிக்கண்டத்தைப் பற்றிய குறிப்புகள் உண்டு.

சமீபத்தில் இந்தியப் பெருங்கடலில் கடலுக்கடியில் இரண்டு பெரும் மலைத்தொடர்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலைகளின் தொடர்ச்சி கடலுக்கடி யிலும் பரவிக்கிடக்கிறது. அந்த மலைகளின் தொடக்கமாக ஒரு பெருமலை இருந்த தாகவும், அதை மேருமலை என்றும் அழைக்கிறார் கள். மேரு மலையிலிருந்து குமரியாறு, பஃறுளி ஆறு என்ற இரண்டு ஆறுகள் ஓடுகிறது. தெற்கே இருந்த குமரி ஆறுக்கும், வடக்கே இருந்த பஃறுளி ஆற்றிற் கும் 700 கவட்டை தூரம் என்று அடியார்க்கு நல்லார் குறிப்பிடுகின்றார். ஆனால் ஒரு கவட்டை என்பது எவ்வளவு நீளம் என்ற அளவீடு நமக்குத் தெரியவில்லை. இன்று இந்தியப் பெருங்கடலில் இருக்கும் மாலத்தீவுகள் போன்ற தீவுகள் எல்லாம், கடலுக்கடியில் இருக்கும் மலைகளின் உச்சிப்பகுதிகளே! மேருமலையின் உச்சியில் ஆதியோகியாகிய சிவன் அமர்ந்து 49 நாடுகளை ஆட்சி செய்கிறார். ஏழுதெங்க நாடு, ஏழு மதுரை நாடு, ஏழு குணக்கரை நாடு, ஏழு பின் பாலை நாடு, ஏழு முன்பாலை நாடு, ஏழுகுன்ற நாடு, ஏழு குறும்பனை நாடு என 49 நாடுகள் குமரிக்கண்டத்தில் பிரிக்கப்பட்டிருந்தன.

மனிதஇனம் உருவாகும்போது அவர்கள் ஒரு குழுவாகவே இருந்தார்கள், பிறகு உலகம் முழு வதும் பரவிப் பிரிந்தார்கள் என்பது எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்து. பிரளயத்தின் காரணமாக மனித இனம் வேறுவேறு நிலப்பகுதிகளுக்கு இடம் பெயர்ந்து குடியேறி இருக்கலாம்.

ஐந்துக்கும் மேற் பட்ட கடற்கோள்களால் குமரிக்கண்டம் நீரில் மூழ்கியதாக சங்ககாலக் குறிப்புகள் கூறுகிறது. இங்கே மட்டுமல்லாமல், உலகின் பல்வேறு கலாச் சாரங்களிலும் பிரளயம் வந்து உலகம் மூழ்கியதாக கதைகள் சொல்லப்பட்டு வருவதை நாம் அறிவோம். பிரளயம் வந்து உலகம் மூழ்கும்போது நோவா கப்பல் கட்டிச் சென்ற பிரசித்தி பெற்ற கதையை எழுதியிருக்கிறார்கள். இதையே, மச்ச அவதாரத்தில் வைவஸ்தமனு கடல் மேலெழும் போது கப்பல் கட்டித் தப்பித்ததாகக் கூறுகிறார்கள்.

யுகக்கோட்பாடுகள் பற்றியும், தமிழர்களின் திணைகளைப் பற்றியும் கடந்த தொடர்களில் பார்த்தோம். யுகக் கோட்பாட்டில் இருக்கும் காலக் கணிப்பும், கடற்கோள்கள் வந்ததாக அறிவியல் அறிஞர்களால் கூறப்படும் காலக்கணிப்பும் அதிகபட்சமாக ஒத்துப்போகிறது. ஒவ்வொரு யுகம் முடியும்போதும் பிரளயம் வரும் என்று எழுதி வைத்திருக்கிறார்கள். தமிழ்ச் சங்கங்களின் காலகட்டத்தை வைத்துப் பார்க்கும்போது 10,000 வருடங்களுக்கு முன் உலகின் கடைசி பனிக் காலத் தில் பெருவாரியான பனிமலைகள் உருகியதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். அதில் 140 மீட்டர் முதல் 500 மீட்டர் வரை கடல் நீர்மட்டம் உயர்ந்த தாக கண்டறிந்துள்ளார்கள். குமரி நாடு என்று இலக்கியங்களில் சொல்லப்படும் பகுதி, இந்த கடல் நீர்மட்ட உயர்வில் மெல்ல மெல்ல மூழ்கியிருக்க லாம் என்பது கணிப்பு... அடுத்த கடற்கோளாக சுமார் 5000 வருடங்களுக்கு முன் இந்தியப் பெருங் கடலில் 29 கிலோமீட்டர் சுற்றளவுள்ள ஒரு விண் கல் விழுந்ததால், பெரும் கடல் அலைகள் ஏற்பட்டு மடகாஸ்கர், ஆஸ்திரேலியா, தமிழ்நாட்டுப் பகுதிகள் கடலில் மூழ்கியதாக அறியப்பட்டுள்ளது.

தூத்துக்குடி தாமிரபரணி ஆற்றங்கரையை ஒட்டிய கொற்கை துறைமுகத்தில் 3000 ஆண்டுகள் பழமையான கல்நங்கூரம் கிடைக்கப்பெற்றிருக்கிறது. கபாடபுரத்தில் இருந்து பாண்டியர்கள் கொற் கைக்கு இடம்பெயர்ந்தார்கள் என்பதற்கு இந்த நங்கூரம் முக்கிய ஆதாரம். வெளிநாட்டு மாலுமி கள் கொற்கையைப் பற்றி பல குறிப்புகள் எழுதியிருக்கிறார்கள்.

எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட கண்டங்களின் நகர்வு பற்றிய கோட்பாட்டில் தென்னிந்தியப் பகுதிகள் ஆப்பிரிக்காவில் இருந்து பிரிந்தது என்பது நிரூபிக்கப்பட்டிருப்பதால், குமரிக்கண்டம் என்பது ஒரு பெரும் நிலப்பரப்பாக இருந்ததா என்பதை அறிவியல் ஆதாரங்களுடன் கூற முடியவில்லை... ஆனால் மாலத்தீவுகள் முதற்கொண்டு 800 கி.மீ பரந்து விரிந்த மலைத்தொடர்கள் குமரிக்கண்டமாக இருந்திருக்க வாய்ப்புகள் உண்டு. இந்தியப் பெருங்கடலில் சில பகுதிகள் 200 அடி ஆழமும், சில பகுதிகள் 2000 அடி ஆழம் வரையும் இருப்பதாகத் தெரிகிறது. குமரிநாடு சிறு நிலப்பரப்பாகக் கூட இருந்திருக்கலாம்.

குமரிக்கண்ட கோட்பாட்டை கடலின் நீள, அகலம் மட்டும் வைத்துப் பார்த்தால் அடிபட்டுப் போகும். அதை ஆழம்வைத்து கணித்துப் பார்த்தால் புதிர்கள் விளங்கும்’என்று கடல்சார்ந்த ஆராய்ச்சியாளர் ஒரிஸா பாலு கூறுகிறார்.

ஆஸ்திரேலியா, மடகாஸ்கர், தமிழ்நாடு மூன்று நிலத்திற்கும் ஜல்லிக்கட்டு உட்பட சில ஒற்றுமைகள் தெரிகிறது.

அவை என்னவென்று பார்ப்போம்...

(ஆட்டம் தொடரும்)