(8) ஆநிரை கவர்தல்!
"தமிழ்ச் சிந்தனையாளர் பேரவை' என்ற வலையொளியை நடத்தும் மொழிப் பகுப்பாய்வாளர் பாண்டியன் அவர்களின் சில காணொளிகளைக் கண்டேன். அதில் சிலவற்றில் எனக்கு மாறுபட்ட கருத்துக்கள் இருந்தாலும், மகாபாரதத்தை அவர் மொழிப் பகுப்பாய்வின் வழியாக ஆய்வுசெய்து வெளியிட்ட தரவுகள் வியப்பைத் தருவதாக இருந்தது.
ஆதிகாலத்தில் மேற்குத்தொடர்ச்சி மலைகளில் வாழ்ந்த இனக் கூட்டத்தை குறவர்கள் என்று அழைத்தனர். குறவர்களில் இருந்து ஒரு பகுதியினர் மலையி−லிலிருந்து இறங்கி காடுகளில் குடிபெயர்கின்றனர்.
காட்டை எரித்து விவசாயம் செய்கின்றனர். விவசாயம் செய்யும் பாண்டித்துவம் பெற்றதால் அவர்கள் பாண்டியர்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.
பாண்டியர்களின் விவசாய பூமியை கையகப்படுத்த நினைக்கும் குறவர்கள், சூதின் வழியாக அவர்களைத் தோற்கடிக்க, அதற்குப்பின் போர்ச்சூழல் உருவாகிறது. முல்லை நிலத்தில் மாடுகள் மேய்க்கும் மாயோன், பாண்டியர்களுக்கு ஆதரவைத் தருகிறான். ஏனெனில் மாடுகளுக்கு வயலும், வயல் சார்ந்த பகுதிகளும் பயன்படும். ஆடுகள் மேய்ப்பவர்கள், குறவர்களுக்கு ஆதரவளிக்கின்றனர். ஏனெனில், ஆடுகளுக்கு மலையும், மலைசார்ந்த காடுகளும் பயன்படும். எல்லா நிலப்பகுதியை ஆண்ட மன்னர்களும் இருபுறமாகப் பிரிந்து பெரும் போரை தொடங்குகின்றனர். அதுவே மகாபாரதம். பிற்காலத்தில் குறவர்களை, கௌரவர் என்றும், பாண்டியர்களை, பாண்டவர் என்றும் வட மாநிலத்தவர் மாற்றி அழைத்தனர். போர் நடந்தது தென்னாட்டு நிலப் பகுதியில். -இது மொழிப் பகுப்பாய்வில் தரும் விளக்கம்.
மகாபாரதத்தில் பெரும்பாலான பெயர்கள் தமிழில் இருப்பது, தமிழ்நாட்டில் மட்டுமே திரளபதி அம்மனுக்கு வழிபாடுகள் செய்வது, மகாபாரத பாத்திரங்களை வைத்து பல ஊர்களில் சொல்லப்படும் கதைகள், இப்படி எல்லா சாத்தியக் கூறுகளையும் வைத்துப் பார்க்கும்போது, அதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவே தோன்றுகிறது. மகாபாரதத்தில் பாண்டியர்கள் போரில் வெற்றி பெற்று விவசாயத்தை தொடங்கி வைத்த நிகழ்வை நினைவு கூரும் விதமாகவே, தமிழர்கள் தைப்பொங்கலை கொண்டாடுவதாக அவர் வைக்கும் கூற்றும் மாறுபட்ட கோணமே!
மாடுகளிடம் தொடங்கி மகாபாரதத்தில் வந்து நிற்கிறோம். மகாபாரதத்திற்கும் மாடுகளுக்கும் என்ன சம்பந்தம்? ஒன்றுக்கொன்று ஏதோ ஒரு வகையில் உட்சரடாக தொடர்பு கொண்டிருக்கிறது…
(மகாபாரதத்தில் விராட பர்வத்தில் ஆநிரை கவர்தல் போர்முறை காணக் கிடைக்கிறது. ஆநிரை கவர்தல், தமிழர்கள் கலாச்சாரத்தில் மிக முக்கியமான பகுதி)
மாடுகள் நம் வாழ்வோடு எந்த அளவிற்கு கலந்தவை என்பதற்கு ஆநிரை கவர்தலைக் கொண்டு தொல்காப்பியர் வகுத்த புறத்திணைகள் பெரும் சான்று. ஆநிரை கவர்தலைப் பற்றி நமது இலக்கியங்களில் பல்வேறு குறிப்புகள் உண்டு.
சரி! ஆநிரை கவர்தல் என்றால் என்ன?
முல்லை நிலத்தில் மாடுகள்தான் மனிதனின் முதல் சொத்தாக இருந்தது என்று ஏற்கனவே பார்த்தோம். ஒரு நிலப்பகுதியின் மாடுகளை வேறொரு நிலப்பகுதியிலிருந்து வந்து களவாடிச் செல்லுதலும், போர் புரிந்து அதை மீட்டு வருதலுமே ஆநிரை கவர்தல்...
ஆநிரை கவரச் செல்வோர் வெட்சிப் பூவையும், ஆநிரையை மீட்கப் போவோர் கரந்தைப் பூவையும், பகைவர் நாட்டின் மீது படை எடுப்போர் வஞ்சிப் பூவையும், அரணைக் காப்போர் நொச்சிப் பூவையும், அரணை முற்றுகை இடுவோர் உழிஞைப் பூவையும், பொதுவெளியில் போரிடும் இருநாட்டாரும் தும்பைப் பூவையும், போரில் வெற்றி எய்தியோர் வாகைப் பூவையும் சூடுவர். இப்படியாக ஏழு படிநிலைகளாக போர்முறைகள் இருந்தது.
மிகவும் நேர்மையான முறை யிலேயே போர்புரிந்தனர். காலை சூரிய உதயத்தின்போது, முரசறைந்து போர் தொடங்குவர். சூரியன் மறையும் வரை மட்டுமே போர் நடைபெற்றது. பின் முரசறைந்து போரை நிறுத்துவர். எத்துனை நாள் போராயினும் இதுவே வழக்கம். பகைவர் ஆயுதத்தை இழந்தபோதும், போரில் தோற்றோடும் போதும் அவரைத் தாக்காத அறநெறி இருந்தது. அவர்களுக்கு தகுந்த வாய்ப்பளிக்க மறுநாள் போர் செய்தனர். ஓடி ஒளிந் தாரைக் கொல்லாமல் அவர்கள் வரும்வரை காத்திருந்து போர் புரியும் வீரம் இருந்தது. இறந்தோருக்கு இரங்கும் குணம் இருந்தது.
போரில் விழுப்புண்பட்ட மறவன், மீண்டும் உயிர் வாழ விரும்பாமல் தன் புண்ணைத் தானே வேலால் கிழித்துக்கொண்டு உயிர் நீப்பதும் உண்டு. போரில் தனது அரசன் இறந்ததைக் கண்டு தாமும் உடன் இறப்பதற்காகச் சில மறவர்கள் உயிர்விட்டதும் உண்டு.
"என்னுடைய காதலன் பசுக்களுக்கான கொட்டகையைப் பாதுகாக்கும்போது அக் கொட்டகை எவ்வாறு தீப்பற்றி எரியும்? அவ்வாறு எரிந்தால் தலைவன் எதிரிகளின் குருதியைக் கொண்டு தீயை அணைப்பான். அல்லது தன் குருதியைக் கொண்டு தீயை அணைப்பான்'’-தன் தலைவனின் வீரத்தைப் பற்றி இப்படி ஒரு சங்க கால தலைவி கூறுகிறாள்.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி வட்டத்தில் புலிமான் கோம்பை எனும் சிற்றூர் வைகை ஆற்றின் தென்கரையில் அமைந் துள்ளது. இங்கு தமிழ் பல்கலைக்கழக கல்வெட்டியல் மற்றும் தொல்லி−யல் துறையினர் மேற்கொண்ட கள ஆய்வில் சுமார் இரண் டாயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்ககால தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட மூன்று நடுகற்கள் கிடைத்துள்ளன.
அதில் கூடல் ஊரில் நடந்த ஆநிரை மீட்புக்கான போரில் உயிர்நீத்த பேடுதீயன் அந்தவன் என்பவனுக்காக எடுக்கப்பட்ட ஒரு நடுகல் மிக முக்கிய வரலாற்று ஆவணம்.
மேற்சொன்னவை அனைத்தும், நமது முன்னோர்கள் வாழ்ந்த வரலாறு. அதை நாம் அறிய வேண்டியது அவசியம் என்பதா லேயே இந்தப் பதிவு. இவை மாடுகள் நமது வாழ்வில் எந்த அளவுக்கு முக்கியத்துவம் பெற்றிருந்தன என்பதற்கும் முக்கியச் சான்று. ஏறு தழுவுதலை அறிவதற்கு சேகரித்த தகவல்கள் வழியாக, பல்லாயிரம் வருடம் பின்னோக்கி நகர்ந்து... நகர்ந்து கடலுக்கடியில் வாழ்ந்த மனித நாகரிகமும் கண்ணெதிரே புலப்பட்டது.
(ஆட்டம் தொடரும்...)