11. மாடு இல்லா வீடு பாழ்!
தமிழ்நாடு -மடகாஸ்கர் இரண்டுக் கும் இடையே இருந்த, இருக்கிற சில ஒற்றுமை களை கடந்த அத்தி யாயத்தில் பார்த்தோம்.
குறிப்பாக ஏறு தழுவுதல், மாடுகளுக்கான மதிப்பு, ஜல்லிக்கட்டில் காளையை அடக்கும் வீரனையே திருமணம் செய்ய விரும்பும் இளம்பெண்கள்... என பல ஒற்றுமைகளைப் பற்றிப் பார்த்தோம்.
இதற்கான சாத்தியக்கூறுகள் கடற் பரப்பால் நேர்ந்ததல்ல... தமிழ்நாடு- மடகாஸ்கர்- ஆஸ்திரேலியா நாடுகளுக்கு இடையே லெமூரியா கண்டம் என்கிற பெரும் நிலப் பரப்பு இருந்ததையும், அது கடற்கோள் இயற்கைச் சீற்றத்தால் கடலில் மூழ்கியிருப்பது பற்றி ஆராய்ச்சியாளர் களின் கருத்துக்களையும் சொல்லியிருந்தோம்.
கல் தோன்றி மண் தோன்றா காலத்தே வாளோடு முன் தோன் றிய மூத்தகுடி’ என்று பெயர் பெற்ற இனம் - மொழி ஆற்றல், விவ சாயம், கால்நடை வளர்ப்பு, உணவு அறி வியல், மூலிகை மருத்து வம், ஆன்மீகம், ஆய கலைகள், இன்னும் இன்னும் பல அரிய கண்டுபிடிப்புகளை உலகுக்கு அளித்த இனம் - பொற் கால ஆட்சிகளில் வளமையும், செல்வமும், செழிப்பும் தழைத்தோங்க வாழ்ந்த இனம் - இமயம் முதல் தென்குமரி எனப்படும் மடகாஸ்கர் வரை, பாலைத் துறைமுகம் எனப்படும் ஈராக் முதல் தென் பாலைத் துறைமுகம் பப்புகினியா வரை அகண்ட நிலப்பரப்பில் வாழ்ந்த இனம் - அந்த இனத்தின் வீரம் சார்ந்த விளையாட்டான ஏறு தழுவுதல் என்பது தமிழர்கள் தொன் மையான குடி என்பதற்கான வலிமையான ஆதாரம். உதாரணத்திற்கு...
இந்தியாவின் தொன்மையான நாகரிகமாக அறியப்பட்ட சிந்து சமவெளி நாகரிகத்தில் வாழ்ந்த இனம் யார்? என்ற குழப்பத்தில் ஆராய்ச்சியாளர்கள் இருந்த சமயத்தில், சிந்து வெளியில் கண்டறியப்பட்ட எலும்புகளின் டி.என்.ஏவும், தமிழகத்தின் இருளர் இன மக்களின் டி.என்.ஏ.வும் ஒத்துப்போவதைக் கண்டறிந்தார்கள். நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள மயிலாடுதுறையில் 2007ல் சிந்துவெளி எழுத்துக்கள் பொறித்த கற்கோடரி ஒன்று கிடைத்துள்ளது. தமிழ்நாட்டின் காவிரிக் கழிமுகப் பகுதியில் சமீபத்தில் நடத்தப்பட்ட தொல்லியல் துறையின் அகழ் வாய்வின்போது பத்துக்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப் பட்டன. இந்த முதுமக்கள் தாழிகளில் காணப்பட்ட சில குறியீடுகள், ஹரப்பா, மொஹஞ்சதாரோ ஆகிய இடங்களில் கண்டெடுக்கப்பட்ட சிந்து சமவெளி நாகரிகக் குறியீடுகளைப் போன்றே இருப்பதாக, பழங்கால எழுத்துக்களை ஆய்வு செய்துவரும் ஆராய்ச்சியாளர் ஐராவதம் மகா தேவன் தெரிவித்திருக்கிறார் இதிலிருந்து சிந்து வெளி மக்களும், தமிழரும் ஒரே மொழியையோ அல்லது ஒரே தாய்மொழியிலிருந்து பிரிந்த கிளை மொழிகளையோ பேசியதாக தெரிகிறது. அதே போல் சிந்து சமவெளி அகழ்வாராய்ச்சியின் போது ஏறு தழுவுதல் பொறிக்கப்பட்ட நாணயம் கிடைக்கப் பெற்றிருக்கிறது. அந்த நாணயத்தில் இருக்கும் மாட்டின் திமிலின் அமைப்பு தமிழகத்து மாடுகளுடன் ஒத்துப் போவதும், சிந்து சமவெளி நாகரிகம் தமிழர்களின் கிளைக் கலாச்சாரமாக இருக்க வாய்ப்பிருப்பதையும் ஊர்ஜிதப்படுத்துகிறது.
மாடுகள், தமிழர்களின் வாழ்வுடனும், சமூகத்துடனும் எந்த அளவுக்கு தவிர்க்க முடியாத சக்தி என்பதற்கு, மாடு பற்றிய பேச்சு வழக்கு எனப்படும் பழமொழிகள் மூலம் அறிய முடியும். அதில் மிக முக்கியமான பழமொழி....
மாடு இல்லா வீடு பாழ் - என்பதாகும்.
மாடுகளை மையப்படுத்தி பல விழாக்கள் எடுக்கப்படுவது மாட்டிற்கும் நமக்குமான சரித்திர உறவை கோடிட்டுக் காட்டுகிறது.
அதிர ஓடினால்- முதிர விளையும்’.... அதாவது அறுவடை நடத்தி முடித்த வயல்களில் மாடுகளை ஓடவிட்டு, அவை தன் குளம்படிகளால் மண்ணைப் புரட்டிவிடும்போது, அடுத்த விளைச்சல் நன்றாக இருக்கும்... என்பதாலேயே இப்படிச் சொன்னார்கள். அறுவடை முடிந்த நிலங்களில் மாடுகளை ஓடவிடும்போது, அவற்றை உற்சாகப்படுத்தவும், வேகப்படுத்தவும் மாடுகளுடன் விவசாயிகளும் விரட்டி ஓடி விளையாடுவார் களாம். இப்படியாகத்தான் தொடங்கியிருக்க வேண்டும் மாடுகளுடனான மனித விளையாட்டு.
மஞ்சுவிரட்டு, ஜல்லிக்கட்டு, மாடு ஓட்டம், மாடு மறித்தல், பட்டிப் பொங்கல், கன்று காணிக்கை, சலங்கை எருது ஆட்டம், மாட்டு வண்டிப் பந்தயம், தம்பிரான் மாடு, மாட்டு வாகடம் போன்ற மாடு சார்ந்த விளையாட்டுக்கள் பாரம் பரியமாக நடத்தப்படும் மண் இது.
ஏறு தழுவுதலின் தொன்மையைக் கண்டறிய வெளி மஞ்சு விரட்டுகளில் இறங்கினோம். தென் மாவட்டங்களில் குறிப்பாக சிவ கங்கை மாவட்டத்தின் சுற்றுவட் டாரப் பகுதிகளில் மஞ்சு விரட்டுகள் பிரசித்தி பெற்றவை.. கண்டுப்பட்டி, சிராவயல், அரலிப்பாறை போன்ற ஊர்களில் நடைபெறும் விரட்டுகளில் லட்சக்கணக்கான மக்கள் கூடுகின்ற னர். அறுவடை முடிந்ததும் தெய்வத் திற்கு விழா எடுத்து விளைந்த நெல்லைப் படைக்கின்றனர். அந்த ஊரின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருக்கும் எல்லா வீடுகளிலும் விருந்து படைக்கின்றனர். மஞ்சு விரட்டுக்கு வரும் அத்தனை பேருக்கும் உணவு சமைக் கிறார்கள். யார் வீட்டு வாசலில் அதிக இலை இருக்கிறது என்று அவர்களுக்குள் போட்டியே நடக்கின்றது.
தமிழ்நாட்டின் பல பகுதிகளிலிருந்து மாடுகளைக் கொண்டுவந்து, ஒரு திறந்த வெளி திடலில் அவிழ்க்கிறார்கள். மாடு பிடிவீரர்கள் காளைகளை விரட்டிப் பிடிக்கின்றனர்.
விரட்டுகளில் அவிழ்க்கப்படும் காளைகளுக்கும், வாடியில் அவிழ்க்கப்படும் காளைகளுக்கும் தன்மை வேறுபடுகிறது. விரட்டு மாடுகள் இன்னும் மூர்க்கமானவை. அவற்றைப் பிடிப்பதற்கு மாடு பிடிவீரனுக்கு பெரும் ஆற்றல் தேவைப்படு கிறது. காளையுடன் நேருக்கு நேர் நின்று பிடிக்கிறான். எத்தனை கிலோமீட்டர்கள் ஓடினாலும் விரட்டிப் பிடிக்கிறான். காளையின் சக்திக்கும், வீரனின் சக்திக்குமான பலப்பரிட்சை தான் நடக்கிறது. இது தான் ஆயிரக்கணக்கான வருடங்களாக தமிழகத்தில் தொடர்ந்து வந்த ஏறு தழுவுதல். காலையில் மஞ்சு விரட்டு முடிந்ததும், கோவில் மாடுகளையும், வீட்டுத் தொழு வத்தில் வளர்த்த மாடுகளை அதே திடலில் இருக்கும் ஊர்த் தொழுவத்தில் வாடிக்கட்டைகளை ஊன்றி அவிழ்ப்பார்கள். அப்படி ஊர்த்தொழுவத்தில் மாடுகளை அவிழ்க்கும் வழக்கமே சில நூற்றாண்டுகளுக்கு முன் ஜல்லிக்கட்டாக மருவியது.
பல ஊர்களில் சமீப காலமாக வடமஞ்சு நடத்துகிறார் கள். ஒரு காளையின் கழுத்துக் கயிற்றுடன் திடலின் மையப் பகுதியில் உரல் வைத்து ஒரு நீளமான கயிற்றைக் கட்டு கிறார்கள். காளை வட்டமாக சுற்றி வரும்படியாக அமைக்கப் பட்டிருக்கும். ஒன்பது வீரர்கள் விளையாடுகிறார்கள். 25 நிமிடங்கள் வழங்கப்படுகிறது. அதற்குள் மாடு பிடிபடுகிறதா, இல்லை வெற்றி பெறுகிறதா என்பது விளையாட்டு. வடத்தில் விளையாடும் மாட்டின் குணம் முற்றிலும் வேறுபடுகிறது. வடத்தில் விளையாடும் மாட்டைப் பிடிக்கும் முறைகளும் வேறுபடுகிறது. மாட்டைத் தொடர்ந்து வட்டமிட்டுக் கொண்டே இருக்கிறார்கள். மாட்டின் கால்களில் பாய்ந்து அதன் ஓட்டத்தை நிறுத்துகிறார்கள். பிறகு திமிலேறுகிறார்கள். ஆதி காலங்களில் ஏறு தழுவுதலுக்காக வீரர்களை தயார்படுத்தவும், காளைகளைத் தயார்ப்படுத்தவும் வடம் நடத்தப்பட்டு, பின்னர் அதுவும் ஒழுங்கு முறை விதிகளுடன் விளையாட்டாகவே உருவாகி விட்டது.
இதில் வியப்பூட்டும் தகவல் என்னவென்றால், வடத்தில் விளையாடும் மாடு, வாடியில் விளையாடாது. வாடியில் விளையாடும் மாடு விரட்டில் விளையாடாது. ஒவ்வொரு மாட்டின் குணங்களும் ஒவ்வொரு மாதிரி. எந்த மாடு எந்த வாடியில் பாயும் என்பதை யாருமே கணிக்க முடியாது... அதுவே ஏறு தழுவுதலை சுவாரஸ்யப்படுத்துகிறது என்று எண்ணுகிறேன்.
மாட்டுக்கு வீடு கட்டிய தமிழன் பற்றி வரும் அத்தியாயத்தில் பார்ப்போம்.
(ஆட்டம் தொடரும்)