ஏழை எளிய மக்கள் பல ஆண்டுகளாக வசிக்கும் இடத்திற்கு பட்டா கேட்டு மனு கொடுத்தால், அதிகாரிகள் அவர்களை அலைய விடுவதுதான் தொடர் கதையாகி வருகிறது. அதே நேரத்தில் பரம்பரை நிலம், வீடு வைத்துள்ளவர் களுக்கு அரசுப் பதிவேட்டில் ஒன்றிய நெடுஞ் சாலை எனவுள்ள இடத்தையும், விவசாய நிலத்திற்கு செல்லும் வழியையும் சேர்த்து பட்டா வழங்கியதால் 50 ஏக்கருக்கு மேல் விவசாய நிலங்கள் கரம்பாக மாறுவதைப் பார்த்து விவசாயிகள் வேதனையடைந்து வருகிறார்கள்.
இதுகுறித்து மயிலாடுதுறை மாவட்டம் வடரங்கம் கிராமத்தைச் சேர்ந்த அருணம்பிள்ளை என்ற விவசாயி, "எங்களுக்கு 15 ஏக்கருக்கு மேல் நிலம் உள்ளது. அதேபோல் விவசாயிகள் மூர்த்தி, புகழேந்தி, பாண்டி, அஞ்சாதநெஞ்சன், ஐயப்பன், துரைமுருகன் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டவர் களுக்கும் மொத்தமாக 50 ஏக்கருக்கு மேல் விளை நிலம் உள்ளது. இவர்கள் அனைவரும் சிறு குறு விவசாயிகள். இந்த நிலங்களுக்கு வடரங்கம் மெயின் ரோட்டின் ஓரமாக ஒன்றிய நெடுஞ்சாலை எனவுள்ள இடத்தில், அப்பா, தாத்தா காலத்தி லிருந்து மாட்டு வண்டிப்பாதை இருந்தது. விவ சாயத்துக்கு இவ்வழியைத்தான் பயன்படுத்தினார் கள். ஆனால் கடந்த 10 ஆண்டுகளுக்குமுன் இங்கு பணியாற்றிய வி.ஏ.ஓ., ஆர்.ஐ., வட்டாட்சியர் உள்ளிட்டவர்கள் கூட்டு சேர்ந்து நெடுஞ்சாலை என்றிருந்த இந்த இடத்தில் உள்நோக்கத்தோடு பட்டா வழங்கிவிட்டனர்.
பட்டா காரணமாக 12 அடி விவசாய சாலை 3 அடியாக சுருங்கிவிட்டது. விவசாயப் பணிகளுக் கான இயந்திரங்களை கொண்டுசெல்ல முடிய வில்லை. இடுபொருட்களை எடுத்துச் செல்வதும் சிரமமாக உள்ளது. பட்டா வாங்கியவர்களுக்கு இதே கிராமத்தில் பூர்வீக நிலம், வீடுகள் உள்ளது. அதேவேளை, இதே கிராமத்தில் இடமில்லாத ஏழைகளுக்கு பட்டா வழங்கவில்லை. ஒன்றிய சாலை என்றுள்ள இடத்தில் பட்டா வழங்கக் கூடாதென்ற விதி உள்ளது. ஆனால் சில அதிகாரி கள் ஆதாயத்திற்காக வழியை சேர்த்து பட்டா வழங்கியதால் விவசாயம் செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளோம். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களுக்கான சாலையை மீட்டுத்தர வேண்டும் என சீர்காழி வட்டாட்சியர், கோட்டாட்சியர், முதல் வரின் தனிப்பிரிவுக்கு மனு அளித்தும் எந்த நட வடிக்கையும் இல்லை. மன வேதனையோடு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத் தேன். ஆவணங்களைப் பார்த்த நீதிபதி, விவசாய நிலத்திற்கு செல்ல ஏற்கெனவே இருந்த வழியை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்க சீர்காழி கோட்டாட்சியருக்கு கடந்த ஆண்டு ஜூலை 25ஆம் தேதி உத்தரவிட்டார். ஆனால் உரிய நட வடிக்கை எடுக்காமல், கோட்டாட்சியர் உத்தரவில் வட்டாட்சியர் கடந்த ஆண்டு அக்டோபர் 15ஆம் தேதி, ஒன்றிய சாலையை நத்தம் என மாற்றி ஆன்லைன் பட்டாவாக மாற்றியுள்ளனர். இதனால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர உள்ளேன்'' என்கிறார்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் வட்டச் செயலாளர் கஜேந்திரன், "கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு இந்த வயல்களுக்கு மாட்டு வண்டி செல்லும் பாதை இருந்தது. அப்பகுதியிலுள்ள அருந்ததியர் சமூக மக்களின் சுடுகாட்டுக்கும் இவ்வழியாகத்தான் செல்வார்கள். இப்படி இருந்த வழி, தற்போது சில அதிகாரிகள் செய்த தவறால் குறுகிவிட்டது. இப்பகுதியில் 50 ஏக்கருக்கு மேல் விளைநிலங்கள் பாதிக்கப்படுவதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.
வடரங்கம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி அஞ்சாதநெஞ்சன், "இந்த பகுதியிலுள்ள வயல்களுக்கு செல்லமுடியாத வகையில் வழியை ஆக்கிரமித் துள்ளனர். இதனால் சம்பா, குறுவை சாகுபடி செய்ய முடியாமல் தற்போது 50 ஏக்கருக்கு மேல் விளை நிலங்கள் கரம்பாகக் கிடக்கிறது. அது மட்டுமல்லா மல் நீர் வழியை ஆக்கிரமித்து கார், சரக்கு வாகனங் களை நிறுத்தியுள்ளனர். அவற்றை அகற்றி, சாலை வசதி ஏற்படுத்தி கொடுத்தாலே போதுமானதாக இருக்கும்'' என்கிறார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்ளிடம் ஒன்றிய செயலாளர் கேசவன், "இதே ஒன்றிய பகுதிக்குட்பட்ட ஆச்சாள்புரம் கிராமத்தில் அடித்தட்டு ஏழை மக்களுக்கு பட்டா கேட்டால் ஒன்றிய சாலை என பட்டா வழங்க மறுக்கிறார்கள். ஆனால் இங்கு ஒன்றிய சாலையில் பட்டா வழங்கியுள்ளனர். எனவே சம் பந்தப்பட்ட அதிகாரிகளை கண்டித்து போராட்டத் தில் ஈடுபடவுள்ளோம்'' எனக் கூறினார்.
சீர்காழி கோட்டாட்சியர் சுரேஷை நேரில் சந்தித்து பேசினோம். இதுகுறித்து வட்டாட்சிய ரிடம் கூறி நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியுள்ள தாகக் கூறினார். வட்டாட்சியர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றதும், சம்பந்தப்பட்ட வி.ஏ.ஓ. வை தொடர்புகொண்டவர், "இதுகுறித்து என்ன நிலைமை என்று அறிக்கையை உடனே கொடுங்கள்'' என உத்தரவிட்டு, வி.ஏ.ஓ.விடம் விளக்கத்தை அனுப்புங்கள் என்று முடித்துக்கொண்டார்.
வி.ஏ.ஓ. பதிவேடு ஆவணத்தை பார்த்துவிட்டு, "ஒன்றிய சாலை என்றுதான் உள்ளது. எப்படி பட்டா கொடுத்தார்கள் என்று தெரியவில்லை. தற்போது உள்ள நிலையை அதிகாரிகளுக்கு தெரிவித்து விடுகிறேன்" என்றார். விவசாயிகளின் வேதனை தீருமா?
-காளிதாஸ்