அரியலூர், கடலூர்ஆகிய இரு மாவட்டங் களையும் இணைத் துச் செல்கிறது வரலாற்றுப் புகழ் வாய்ந்த வெள்ளாறு. ஆற்றின் ஒரு கரையில் அரியலூர் மாவட்டப் பகுதியில் உள்ள முள்ளுக் குறிச்சி, கெத்தேரி, ஆதனக் குறிச்சி, இடையக்குறிச்சி, முதுகுளம், கோட்டைக்காடு, ஆலத்தியூர், சிலம்பூர், அய்யூர், ஆண்டிமடம் வரையிலும் வெள் ளாற்றின் மறு கரையான கடலூர் மாவட்ட எல்லையில் உள்ள பெண் ணாடம், சவுந்தர சோழபுரம், சம்பேரி, எறையூர், திருமலை அகரம், அரியராவி, பூவனூர், தொளார், மேலூர், மருதத்தூர் உட்பட நூற்றுக்கணக்கான கிராம மக்களின் அன்றாட வாழ்க்கை, ஒரு பாலத்தின் இணைப்புச் சாலை முடியாததால் கேள்விக்குறியாகி உள்ளது.
ஆற்றின் எதிரெதிர் கரையோர கிராமங் களில் உள்ள பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள், தொழிலாளர்கள், விவசாய விளைபொருள்கள் பரிமாற்றம் என அவர்களின் வாழ்வாதாரச் செயல்பாட்டுக்கு தோதான பாலம் இல்லாததால் மழைக்காலங்களில் ஆற்றைக் கடப்பதற்கு பெரும் சிரமப்பட்டு வந்தார்கள். ஆற்றின் குறுக்கே கோட்டைக்காடு, சவுந்தர சோழபுரம் ஆகிய இரு ஊர் களுக்கு இடையே உயர்மட்ட மேம்பாலம் கட்டித்தரக் கோரி அரசிடம் பல்வேறு அரசியல் கட்சிகள், பொதுநல அமைப்புகள், அப்போதைய தி.மு.க. முன்னோடிகள் எனப் பலரும் தொடர் போராட்டங்களை நடத்தினார்கள்.
அதன் விளைவாக, 2016-ஆம் ஆண்டில் ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் வெள்ளாற்றின் குறுக்கே பாலம் கட்டுவதற்கு ரூ.11.5 கோடி நிதி ஒதுக்கியபோதும், பாலத்தின் கட்டுமானப்பணிகள் தொடங்கப்படவேயில்லை. 2017ஆம் ஆண்டில் செந்துறை வடக்கு ஒன்றிய தி.மு.க. முன்னாள் செயலாளர் ஞானமூர்த்தி தலைமையில், தி.மு.க.வினரும், பொதுமக்களும் கலந்துகொண்ட பெருந்திரளான வெகுஜனப் போராட்டத்துக்குப் பிறகு மீண்டும் பணிகள் தொடங்கப்பட்டு, நத்தை வேகத்தில் 2020ஆம் ஆண்டில் பாலம் அமைக்கும் பணி மட்டும் முடிக்கப்பட்டது. அப்படியும், இணைப்புச்சாலை போடும் பணி முடிக்கப்படாமல் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கான்கிரீட் துண்டாக பாலம் மட்டும் அம்போவென நிற்கிறது. இரு கரையோர கிராம மக்களும் பாலத்தைப் பார்த்து ஏக்கப்பெருமூச்சு விடுகிறார்கள்.
இதுகுறித்து சம்பேரியைச் சேர்ந்த முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினர் எஸ்.கே.தனவேல் நம்மிடம், "ஆற்றின் இரு பகுதிகளிலும் உள்ள மக்கள் போக்குவரத்துக்கு மிகவும் சிரமப்பட்டார்கள். ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலங்களில் அவசர அத்தியாவசியப் பணிகளுக்காக ஆற்றைக் கடக்க முயற்சித்த பலர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள் ளார்கள். பல போராட்டங்களுக்குப் பிறகுதான் பால வேலை முடிந்தது. ஆனால், கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்பது போல பாலத்தின் இணைப்புச் சாலை வேலை முடியாததால் பாலம் ஆற்றுக்குள் முடங்கிப்போய் கிடக்கிறது. விரைவில் இணைப்புச் சாலைப் பணிகளை முடிக்கவில்லையேல் பெரும் போராட்டங்களை நடத்த வேண்டி இருக்கும் என்பது பல கிராம மக்களின் மனநிலையாக இருக்கிறது''’என்கிறார்.
சமூக ஆர்வலர் ஆறுமுகம் கூறுகையில்... “"இரு மாவட்ட மக்களும் பாலம் கட்டப்பட்டுள்ள கோட்டைக்காடு பகுதி வழி யாகத்தான் ஆற்றைக் கடந்து சென்றுவர வேண்டும். மழைக் காலங்களில் சுமார் இருபத்தி ஐந்து கிலோமீட்டர் ஆற்றைச் சுற்றிக்கொண்டு செல்ல வேண்டிய நிலை. பால வேலை தொடங்கப்பட்டதும் மக்கள் பெரும் நிம்மதி அடைந்தார்கள். இனி மழைக்காலத்தில் எந்தப் போக்குவரத்துச் சிரமங்களும், உயிரிழப்புகளும் இருக்காது என்ற அவர்களது மகிழ்ச்சி, இணைப்புச்சாலை வேலை முற்றுப் பெறாததால் நிறைவேற வில்லை. கட்டப்பட்டுள்ள பாலத்தின் அருகில் ஒவ்வொரு ஆண்டும் கிராம மக்களே மண் சாலை அமைத்துத் தற்காலிகப் போக்குவரத்தை ஏற்படுத்திக் கொள்வார்கள். அந்த மண்சாலை, மழைக்காலங்களில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும். மழைக்காலம் முடிந்ததும் மீண்டும் மண் சாலை அமைப்பார் கள். அரியலூர் மாவட்டப் பகுதியில் உள்ள பத்துக்கும் மேற்பட்ட சிமென்ட் ஆலைகளில் ஷிப்ட் முறையில் வேலைக்குச் செல்பவர்கள் சரியான நேரத்துக்கு ஆலைக்குச் செல்ல முடியாமல் மிகவும் சிரமப்படுகிறார்கள். தமிழக அரசு சாலை வேலையை விரைவாக முடித்து பாலத்தைத் திறந்துவிட வேண்டும்''’என்றார்.
நாம் விசாரித்த வரையில் நிதிப் பற்றாக்குறை காரணமாக கடந்த அ.தி. மு.க. ஆட்சியில் சாலைப்பணி நின்ற தாகவும், நெடுஞ்சாலைத் துறையால் 'திருத்திய திட்ட மதிப்பீட்டுத் தொகை வரைவு' தயாரிக்கப்பட்டும் அதற்கு நிதி நிர்வாக அனுமதி இன்னும் வழங்கப் படவில்லை என்றும் கூறப்படுகிறது. பெரும் தொகை கொடுத்து யானை வாங்கி விட்டு மிகச்சிறு தொகைக்கு அங்குசம் வாங்க யோசிப்பது போல உள்ளது இந்த இணைப்புச்சாலை விவகாரம்.
தமிழக முதல்வர் ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் நெடுங் காலமாக தீராமல் இருக்கும் பதினைந்து பிரச்னைகளை முதலில் தீர்த்து வைக்க வேண்டும் என்று அறிவித்திருக்கிறார். போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் ஆகிய இருவரின் தொகுதிகளுக்கும் உட்பட்ட பகுதியில் தான் இப்பாலம் உள்ளது. அமைச்சர் கள் இருவரும் ஒன்றிணைந்து, கட்டி முடிக்கப்பட்ட பாலத்தின் இணைப்புச் சாலைப் பணிகளை முடித்து, போக்கு வரத்துப் பிரச்னையைத் தீர்ப்பார்கள் என்ற பெரும் நம்பிக்கையில் உள்ளார் கள் வெள்ளாற்றங்கரை மக்கள்.