1962-ல் தூத்துக்குடியின் பிரபல டாக்டர் மரகதவேல், அவர் மனைவி, மகள் என மூவரும் நள்ளிரவில், பனங்கருக்கு மட்டையால் ஈவு இரக்கமில்லாமல் ஒரு கும்பலால் கதறக் கதற அடித்துக் கொல்லப்பட்டார்கள். டாக்டரின் மகன் பீரோவின் பின்னால் மறைந்துகொண்டதால் தப்பினான். வீட்டிலிருந்த விலைமதிப்பான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. அந்த சம்பவம் தூத்துக்குடியை மட்டுமல்லாமல் தமிழகத்தையே உலுக்கியது. குற்றம், போலீசாரால் சரிவர நிரூபிக்கப்படாததால் குற்றம்சாட்டப் பட்டோர் விடுவிக்கப்பட்டனர். அதன்பின் ரவுடிகளின் கொட்டம் அதிகரித்தது.

கொம்பன், ஆண்டி, ஞானி, கொப்பரை குட்டப்பன், பரமசிவம், ராயப்பன் என்று ரவுடிகள் குழு உருவானது. சாராயத் தொழில் உச்சத்திலிருந்த நேரத்தில், கொம்பன் கோஷ்டிக்கு எதிராக கொப்பரை கோஷ்டி ஒன்று கிளம்பியது. இதில் கொம்பன் கோஷ்டி பிராந்தி வகைகளை சேல்ஸ் செய்ய, கொப்பரை கோஷ்டியோ சாராய வியாபாரத்தை ஜாம் ஜாம் என நடத்தியிருக்கிறது. தொழில் போட்டி காரணமாக இரண்டு கோஷ்டிகளும் அவ்வப்போது மோதிக்கொண்டனர்.

ravvi

Advertisment

அப்போதைய காலகட்டத்தில் தூத்துக்குடியின் டூரிங் டாக்கீஸ்களில் முறுக்கு வியாபாரம் செய்ய வந்த சங்கர் என்பவனும் அவனது சகாக்களும் கொப்பரை கோஷ்டியில் இணைய... சங்கரின் பெயர் ஒயின்ஸ் சங்கராக... கொம்பனுக்கு எதிராக ஒயின்ஸ் சங்கர் ஏவப்பட்டான். தூத்துக்குடிக்கு அருகிலுள்ள புதியம்புத்தூரிலிருந்த ஆறுமுகம் என்பவரின் மகனான நீராவி முருகன், கஷ்டமான சூழலில் பசி போக்குவதற்காக சிலரோடு சேர்ந்து திருட்டுகளில் ஈடுபட்டிருக்கிறான். அப்படியே ஒயின்ஸ் சங்கர் சகவாசம் கிடைக்க, கொப்பரையின் சாராய கோஷ்டியில் இணைந்திருக்கிறான். சாராயத் தொழிலில் கொம்பன் கோஷ்டியை ஒழித்துக்கட்ட நீராவி முருகனை கொப்பரை கோஷ்டி பயன்படுத்திக்கொண்டது. அதனைப் புரிந்து கொண்ட கொம்பன் கோஷ்டி, ஒயின்ஸ் சங்கரைக் காலி செய்தது.

ஒயின்ஸ் சங்கர் கொலையானதால் நீராவி முருகன் சங்கரின் இடத்துக்கு உயர்ந்தான். காலப்போக்கில், இரண்டு கோஷ்டிகளுமே ஆட்கள் பற்றாக்குறையால் ஒடுங்கிவிட்டன. இதனால் வேறுவழி தேடிய நீராவி முருகன், தூத்துக்குடி நகராட்சிக்குட் பட்ட சுகாதார வளாகம், சைக்கிள் ஸ்டாண்ட் போன்றவற்றை தன்னுடைய தாட்டியமான ஆட்களைக் கொண்டு மிரட்டி, வேறு எவரையும் ஏலம் எடுக்கவிடாமல் தடுத்து, அடிமாட்டு ஏலத்தில் குத்தகைக்கு எடுத்து பல ஆண்டுகளாக லாபம் ஈட்டிவரும் அசோக் என்பவரின் அல்லக்கையாக இணைந்தான்.

இந்நிலையில், 2011-ல் தி.மு.க. ஆட்சியி லிருந்த நேரத்தில், அசோக் கோஷ்டியின் ஆதிக்க ஏலத்தால், நகராட்சிக்குக் கிடைக்க வேண்டிய வருமானம் கிடைக்காமல் போனதையறிந்த தி.மு.க.வின் மாவட்ட துணை செயலாளரான ஏ.சி.அருணா, தன்னுடைய பவரால் அசோக் தரப்பை ஏலம் கேட்கவிடாமல் செய்கிறார். வேறொரு நல்ல குரூப்புக்கு ஏலத்தை மாற்றுகிறார். இதனால் வருமானம் பாதிக்கப்பட்ட அசோக், ஏ.சி. அருணா மீது வன்மத்தோடு இருக்கிறான். இந்நிலையில், ஏ.சி.அருணாவிற்கும் வேறு சிலருக்குமிடையே இருந்த பகை நெருப்பில், அருணாவை காலி செய்யும் கூலிப்படையாக மாறிய நீராவி முருகன், ஆட்டுக்கால் முருகன் என்பவனோடு சேர்ந்தது ஏ.சி. அருணாவைக் கொலை செய்துவிட்டு தலைமறைவானான்.

இதனிடையே, ஆட்டம் போட்டுக் கொண்டிருந்த அசோக் தரப்புகளை 2015-ல் தூத்துக்குடி ஏ.எஸ்.பி.யாக இருந்த அருண் சக்திகுமார் தன்னுடைய அதிரடி நடவடிக்கை யால் மாவு கட்டுப் போட வைத்திருக்கிறார். அதனால் அசோக் தரப்பு நகரைக் காலி செய்துவிட்டு வெளியேற, நீராவி முருகன் தன்னோடு ஹரிகிருஷ்ணன் உள்ளிட்ட சிலரைச் சேர்த்துக்கொண்டு வழக்கம்போல் திருட்டுகளில் ஈடுபட்டுள்ளான். இந்த ரூட்டில் கோவில்பட்டி, வள்ளியூர், ஈரோடு, நாமக்கல், சென்னை என்று கொள்ளையடித்துவிட்டு போலீசுக்குப் போக்கு காட்டியிருக்கிறான்.

இந்தச் சூழலில் கடந்த பிப்ரவரி 15 அன்று, திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் டாக்டர் வீட்டில் பம்பர் கொள்ளையடித்ததால் எஸ்.ஐ. இசக்கி ராஜாவின் போலீஸ் படையின் தீவிர தேடுதலுக்குள்ளா னான் நீராவி முருகன். அவர்களுக்குப் போக்குக் காட்டி யவன், தன்னுடைய ஜாகையை ஒவ்வொருநாளும் ஒவ்வொரு இடத்திற்கு மாற்றியிருக்கிறான். இதையறிந்த இசக்கிராஜா டீமும் சளைக்காமல் அவனைப் பின்தொடர்ந்திருக்கிறது. கடைசியாக தென்பக்கம் வந்த நீராவி முருகன், தன்னுடைய 5001 எண் பதிவு கொண்ட இன்னோவா காரில் வள்ளியூரின் பக்கமுள்ள தனியார் கல்லூரி, பணகுடி, நாங்குநேரி, களக்காடு என்று அடிக் கடி இடம் மாறியிருக்கிறான். நாங்குநேரி சுற்றுப்பக்கம் போக்குக் காட்டிக்கொண்டிருந்த நீராவி முருகனை டவர் மூலம் வாட்ச் பண்ணி நாங்குநேரிப் பக்கமுள்ள கலுங்கடிச் சாலையில் வழிமறித்து வளைத்து, கடம் போடுவாழ்வு வழியாக மீனவன்குளம் யூகலிப்டஸ் காட்டுப்பகுதிக்குள் கொண்டு வந்திருக்கிறது எஸ்.ஐ. இசக்கிராஜா டீம். அதன்பிறகே என்கவுன்ட்டர் நடந் திருக்கிறது என்கிற தகவலும் கசிகிறது. வறுமையின் நிறமும், வன்முறையின் நிறமும் சிகப்பு தான்!