இங்கே மத அரசியல் எடுபடாது என்பதால் சாதிரீதியான கணக்குகளைப் போடுகிறது பா.ஜ.க. மேலிடம். தமிழக பா.ஜ.க.வுக்கான தலைமைக் கனவில் தேவர் சமுதாயத்தை சேர்ந்த கருப்பு முருகானந்தம், கவுண்டர் சமுதாயத்தை சேர்ந்த வானதி சீனிவாசன், யாதவ சமுதாயத்தைச் சேர்ந்த மதுரை சீனிவாசன், பிராமண சமுதாயத்தின் கே.டி.ராகவன் என பலரும் இருந்தபோது, தேசிய பட்டியல் இன ஆணையத்தின் துணைத் தலைவரான நாமக்கல் முருகனை தமிழக பா.ஜ.க. தலைவர் ஆக்கியது மேலிடம். தி.மு.க, அ.தி.மு.க என பல கட்சிகளைச் சேர்ந்த பிரபலங்களையும் பா.ஜ.க.வுக்கு கொண்டு வந்தார் முருகன்.
அதேநேரத்தில், ஏற்கனவே கட்சி மாறி பா.ஜ.க.வுக்கு வந்து, பதவிக்கான எதிர்பார்ப்பில் இருந்தவர்கள் அதிருப்தியடைந்தனர். அதில் முதல் விக்கெட், வேதாரண்யம் முன்னாள் எம்.எல்.ஏ.வான வேதரத்தினம், திரும்பவும் தாய்க்கழகமான தி.மு.கவுக்கு திரும்பினார். வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த அவர், கடந்த நான்கு வருடங்களாக தமிழக பா.ஜ.க.வின் மாநில பொதுச்செயலாளர் கனவிலிருந்த அவர் சீ...சீ... இந்தப் பழம் புளிக்கும் என தி.மு.க.விலேயே சேர்ந்துவிட்டார்.
குடியரசு துணைதலைவர் வெங்கையா நாயுடுவின் ஆதரவாளரான அதே சமூகத்தை சேர்ந்த, அ.தி.மு.க. ஆற்காடு சட்டமன்ற உறுப்பினராக இருந்த வி.கே.ஆர். சீனிவாசனின் அதிருப்தியை அறிந்து, அவரை முதல்வர் பழனிசாமியே அ.தி.மு.க. பக்கம் கொண்டுவந்ததையும், அதுபோல இன்னும் பல பழைய அ.தி.மு.க.வினரை பா.ஜ.க.விலிருந்து திரும்பக் கொண்டுவர கட்சியினருக்கு அசைன்மெண்ட் தந்திருப்பதையும் கடந்த இதழில் வெளியிட்டிருந்தோம். இந்த லிஸ்ட்டில், பா.ஜ.க. சென்ற அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரனும் உண்டு என்பதையும் தெரிவித்திருந்தோம்.
இந்நிலையில்தான், கறுப்பர் கூட்டத்தின் கந்தர் சஷ்டி யூ.டியூப் விமர்சனத்தை தி.மு.கவுக்கு எதிரான அரசியல் ஆயுதமாகக் கையில் எடுத்திருக்கும் பா.ஜ.க. ஆகஸ்ட் 9ல் மாநிலம் முழுவதும் 65ஆயிரம் கிளைகளில் வேல் பூஜைக்கு திட்ட மிட்டது. அதன் பொறுப்பு, நயினார் நாகேந்திரனிடம் தரப் பட்டிருந்தது. கொரோனாவைக் காரணம் காட்டி, நயினார் ஒதுங்கியது தமிழக பா.ஜ.க தலைவர் முருகனை அதிர வைத்துள்ளது.
நிர்மலா சீதாராமனின் ஆதரவு பெற்று, டெல்லி வரை செல்வாக்குள்ள கே.டி.ராகவனும், சமத்துவ மக்கள் கட்சியிலிருந்து வந்தவரான கரு.நாகராஜனும்தான் தமிழக பா.ஜ.கவில் பொறுப்பாளர்களை நியமிப்பதில் முக்கிய பங்காற்றுகிறார்கள் என பதவி கிடைக்காதவர்கள் அதிருப்தியில் உள்ளனர். தலைவர் பதவியை எதிர்பார்த்திருந்த நயினாரும் இதே கடுப்பில் தான் உள்ளார். தமிழக நிலவரம் அறியாத நிர்மலா சீதாராமன், தனது ஆதரவாளர் கே.டி.ராகவன் மூலம் மாநில பா.ஜ.க. கூடாரத்தை காலிசெய்து வருவதாக மோடி, அமித்ஷா, ஜே.பி.நட்டா, ஆகியோருக்கு புகார்கள் சென்றதால், மேலிட பொறுப்பாளர் மூலம் பிரச்சினையைத் தீர்க்க தீவிரமாகி உள்ளது டெல்லி.
-அரவிந்த்