"ஹலோ தலைவரே, தேசியக் கட்சியான பா.ஜ.க.வில் இப்ப பரபரப்பா ஒரு விவாதம் நடந்துக்கிட்டு இருக்குது.''”

"இப்ப இருக்கும் மாநில நிர்வாகி, ஆறுமாத காலம் லண்டன் போவதால், ஆல்டர்னேட் பத்தி அவங்க விவாதிப்பதைச் சொல்றியா?''”

rang

"சரியா கணிச்சிட்டீங்க தலைவரே, அண்மையில் டெல்லி சென்ற தமிழக பா.ஜ.க. நிர்வாகி, நடந்துமுடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வை விடவும் பா.ஜ.க. தமிழ்நாட்டில் அதிக ஓட்டுக்களை வாங்கியிருக்கிறது என்று ஒரு கணக்கை தயார்செய்து கொண்டுபோய், அமித்ஷா உள்ளிட்டவர்களிடம் கொடுத்துவிட்டு வந்திருக் கிறாராம். அதைப்பார்த்த அவர்கள் உதடு பிதுக்கியிருக்கிறார்கள். அந்த நிர்வாகி படிப்புக்காக லண்டன் செல்வதால், அவருக்கு பதில், தமிழக பா.ஜ.க. தலைவராக நயினார் நாகேந்திரனை நியமிக்கவேண்டும் என்றும், அப்போதுதான் அ.தி.மு.க.வுடன் பா.ஜ.க. கூட்டணி அமைக்க முடியும் என்றும் அக் கட்சியின் தேசியத் தலைமை கருதுகிறதாம். கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த ஈஷா மைய ஜக்கிவாசுதேவும், அ.தி.மு.க. மாஜி மந்திரி வேலு மணியும் பா.ஜ.க. எம்.எல்.ஏ.வான வானதி சீனிவாசன், தமிழக பா.ஜ.க. தலைவராக வேண்டும் என்று ஆசைப்படுகிறார் களாம். அதற்காக பலர் வழியாகவும் டெல்லிக்குத் தூது விடுகிறார்களாம். ஆனால் நிதி அமைச்சர் சீதா ராமனின் விருப்பம் வேறு மாதிரியாக இருக்கிறதாம்.''”

Advertisment

"வேறு மாதிரி என் றால்?''”

"அதாவது, வானதி எல்லாம் சரிப்படாது. அவரால் தமிழக பா.ஜ.க.வில் இருக்கும் கோஷ்டி அரசியலை எதிர்கொள்ள முடியாது. அதனால், சர்ச்சையில் சிக்கிய நபர் என்றாலும் பரவாயில்லை, சீனியாரிட்டி மற்றும் சின்சியாரிட்டியில் கே.டி.ராகவன் கெட்டி. அதனால், அவரை அந்த நாற்காலியில் அமர்த்தலாம் என்று நிர்மலா சீதாராமன் சொல்கிறாராம். அவர் கருத்தையே பிரதமர் மோடியும் ஆதரிக்கிறாராம். ஆனால், இதற் கெல்லாம் மாறாக, கோவாவில் வேத பாடசாலை நடத்தும் பா.ஜ.க. மேலிடத்துடன் தொடர்புடைய ஒரு தம்பதியினரோ, அந்த மாநில நிர்வாகியே, அந்தப் பதவியில் தொடரட்டும் என்றும், எந்த நாட்டுக்கு அவர் சென்றாலும் அங்கிருந்தே கட்சிப் பரிபாலனத்தை அவரால் நடத்தமுடியும் என்றும் சொல்லிவருகிறார் களாம். இவர்களோடு சிருங்கேரி மடமும் இதே கருத்தைச் சொல்லிவருகிறதாம். எனி னும், மேற்படி நபரின் லட் சணம் எங்க ளுக்குத் தெரியுமே என்று பா.ஜ.க.வின் தேசியத் தலைமை சொல்கிறதாம். அதனால், தமிழகத்துக்கு தலைவர் மாற்றம் உறுதி என்கின்றனர் கமலாலயத் தரப்பினர்.''”

"நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. பெற்ற படுதோல்வி குறித்து, இரண்டாம் கட்ட ஆலோசனைக் கூட்டங்களை எடப்பாடி நடத்திவருகிறாரே?''”

Advertisment

"ஆமாங்க தலைவரே, தேர்தல் தோல்வி குறித்து அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் தொகுதி வாரியாக இரண்டாம்கட்ட ஆலோசனையை நடத்திவருகிறார் எடப்பாடி. முதற்கட்ட ஆலோசனையில் கலந்துகொண்ட நிர்வாகிகளிடம், "நீங்கள் எது குறித்தும் மனம் திறந்து பேசலாம்'’என எடப்பாடி சொன்னதால், மா.செ.க்கள் மற்றும் மாஜி மந்திரிகள் பற்றிய குறைகளை எல்லாம் அவர்கள் ஏகத்துக்கும் அடுக்கினார்களாம். அதேபோல், வேட்பாளர் தேர்வில் கட்சித் தலைமை சீரியஸ் காட் டாததால்தான் படு தோல்வியைச் சந்தித் தோம் என்று, எடப்பாடி யின் தலைமை மீதே மறைமுக குற்றச்சாட்டு களையும் வைத்திருக் கிறார்கள். இதே மன நிலை மாவட்ட நிர்வாகி களிடம் இரண்டாம்கட்ட ஆலோசனையிலும் வெளிப்படக்கூடாது என்று முடிவெடுத்த எடப்பாடி, "எதனால் வெற்றி வாய்ப்பை இழந்தோம் என்பதைப் பற்றி மட்டும் பேசுங்கள். தனி நபர் விமர்சனங்கள் வேண்டாம்'’ என்று கே.பி.முனுசாமி, ஜெயக்குமார் ஆகியோர் மூலம் முன்கூட்டியே கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தி யிருக்கிறார். இருந்தும் விமர்சனங்கள் வெடித்துக் கொண்டுதான் இருக்கிறதாம்.''”

"2026 சட்டமன்றத் தேர்தல் குறித்தும் கட்சியின் சீனியர்களிடம் எடப்பாடி சீரியசாக விவாதித்திருக்கிறாரே?''”

ss

"உண்மைதாங்க தலைவரே, அண்மையில் அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் சிலரிடம் பல்வேறு விசயங்கள் குறித்து மனம் திறந்து விவாதித் திருக்கிறார் எடப்பாடி. அப்போது, "2026 தேர்தல் என்பது எனது தலைமைக்கு வைக்கப்படும் முக்கிய பரிட்சை. இதில் நான் வெற்றிபெற்றே ஆகவேண்டும். மீண்டும் நாம் ஆட்சியைக் கைப்பற்றினால்தான் தொண் டர்கள் நம்முடன் இருப்பார்கள். இல்லையெனில், அவர்களைத் தக்கவைப்பது கஷ்டம்' என்று சொல்லியிருக்கிறார். கட்சியின் சீனியர்களோ, ’"2026 தேர்தல் என்பது நிச்சயம் அ.தி.மு.க.வுக்கு வாழ்வா? சாவா? என்று தீர்மானிக்கிற மாதிரிதான் இருக்கும். அதே சமயம் கூட்டணி பலம் இல்லாமல் நாம் தி.மு.க.வை வீழ்த்தி, ஆட்சியைக் கைப்பற்ற முடியாது. எனவே, அ.தி.மு.க. தலைமையில் வலுவான கூட்டணியை நாம் அமைத்தாக வேண்டும். அதற்காக நாம் சில விசயங்களை காம்ப்ரமைஸ் பண்ணினால்கூட தவறில்லை. அதாவது கூட்டணி ஆட்சியை அமைக்கும் சூழல் வந்தாலும் நாம் அதை ஏற்கவேண்டும்'’ என்று சொல்லியிருக்கிறார்கள். இதற்கு எடப்பாடி மறுப்பு தெரிவிக்கவில்லையாம். எனவே கூட்டணி ஆட்சி என்று அறிவித்தாவது, தமிழக அரசியல் கட்சிகளை தங்கள் பக்கம் இழுக்க அ.தி.மு.க. தயாராகிறது என்பது தெளிவாகிறது.''”

"சரிப்பா, செல்வப்பெருந்தகைக்கு எதிராக நெல்லை பகுதி காங்கிரஸ் தொண்டர்களே கொந்தளிச்சிருக்காங்களே?''”

"ஆமாங்க தலைவரே, மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் 25ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி, தாமிரபரணி ஆற்றில், அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி கடந்த 23ஆம் தேதி நடந்தது. பல்வேறு அரசியல் கட்சியினரும் வந்து மலர்உதூவி அஞ்சலி செலுத்தினார்கள். இதில் கலந்துகொள்ள வந்த தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, கூடவே காங்கிரஸ் எம்.எல்.ஏ. ரூபி மனோகர னையும் தன்னுடன் அழைத்துச்சென்றிருக்கிறார். அவரைக் கண்ட சொந்தக் கட்சியினரே கொந்தளித்தார்கள். மேலும், செல்வப்பெருந்தகை யின் காதுபடவே, ’"இதெல்லாம் நல்லதுக்கில்லை'’ என்ற ரீதியில் கொதிப்பை வெளிப்படுத்தினார்கள். இதுகுறித்து அவர்களிடமே நாம் விசாரித்த போது, "நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார், தான் படுகொலை செய்யப்படு வதற்கு முன், மரண வாக்குமூலம் போல் எழுதிவைத்த கடிதத்தில், தன் உயிருக்கு சிலரால் ஆபத்து என்று குறிப்பிட்டிருந்தார். அவர் குறிப்பிட்டிருந்த பெயர்களில் ரூபி மனோகரன் பெயரும் இருக்கிறது. அப்படியிருக்க, அவரை ஏன் செல்வப்பெருந்தகை இந்த அளவுக்கு அரவணைக்கிறார்? இனியும் இதேபோல் அவர் செய்தால், கட்சிக்காரர்களாகிய நாங்கள் கூண்டோடு கட்சியில் இருந்து விலகுவோம்' என்றார்கள் காட்டமாக.''”

"மகாராஷ்டிர மாநில கவர்னராக சி.பி.ராதாகிருஷ்ணனை பா.ஜ.க. மேலிடம் நியமித்திருக்குதே?''”

"ஆமாங்க தலைவரே, இந்தியா முழுவதும் 6 மாநிலங்களுக்குப் புதிய கவர்னர்களும், 3 மாநிலங்களுக்கு கவர்னர்களை மாற்றியும், பா.ஜ.க. மேலிடத் தீர்மானத்தின் படி, உத்தரவிட்டுள்ளார் ஜனாதிபதி திரௌபதி முர்மு. அந்த வகையில், ஜார்கண்ட் மாநில கவர்னராகவும், தெலுங்கானா மற்றும் புதுச்சேரியின் பொறுப்பு கவர்னராகவும் இருந்து வந்த, தமிழக பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரான சி.பி.ராதாகிருஷ்ணனை மகாராஷ்டிர கவர்னராக நியமித்துள்ளனர். சி.பி.ஆர். மீது பிரதமர் மோடிக்கு இருந்த நம்பிக்கையால்தான், இந்த நியமனம் என்கிறார்கள். சி.பி.ஆர். கவர்னராக இருந்த ஜார்கண்டை ஒப்பிடும்போது மகாராஷ்டிராவில் அரசியல் அக்கப்போர்கள் அதிகம். இதனை சி.பி.ஆர். எப்படி சமாளிக்கப் போகிறார்? என தமிழக பா.ஜ.க. நிர்வாகிகளே சந்தேகத்தைக் கிளப்பிவருகின்றனர். இருப்பினும், சி.பி.ஆர். பொறுப்பேற்கும் வைபவத்தில் கலந்துகொள்ள, அவர்களில் பலரும் மும்பைக்கு ப்ளைட் டிக்கெட் புக் பண்ணியிருக்கிறார்கள்.''”

ss

"பா.ம.க. தரப்பிலும் பரபரப்பு தெரியுதே?''”

"பா.ம.க. தலைவர் அன்புமணியின் எம்.பி. பதவிக்காலம் அடுத்த ஜூனில் முடிவடைய இருக்கிறது. அதனால், மீண்டும் நடாளுமன்றத் துக்குள் நுழைய, அ.தி.மு.க.வின் தயவு தேவை என்று பா.ம.க. தலைவர் அன்புமணி கணக்குப் போடுகிறாராம். அதனால் அ.தி.மு.க.வுடன் விரைவில் பா.ம.க. கூட்டணி அமையவேண்டும் என்று அவர் துடிக்கிறாராம். இதற்காகவே தி.மு.க. அரசுக்கு எதிராக, வன்னியர் சமூக ஒதுக்கீட்டுப் போராட்டத்தை பா.ம.க. தரப்பு தீவிரமாகக் கையில் எடுக்கிறது. வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி, வன்னியர் சமூகத்துக்கான 10.5 உள் ஒதுக்கீட்டை வலியுறுத்தித் தொடர்போராட் டத்தை அக்கட்சி மீண்டும் ஆரம்பிக்கிறது. 20-ல் சாலை மறியல் போராட்டமும், அதையடுத்து சிறை நிரப்பும் போராட்டமும், இதைத் தொடர்ந்து மாநிலம் தழுவிய பிரமாண்ட மாநாட்டையும் நடத்த இருக்கிறார்கள். இப்படி 2026 சட்டமன்றத் தேர்தல்வரை போராட்ட அரசியலைக் கையிலெடுக்கவேண்டும் என்று பாமக திட்டம் வைத்திருக் கிறதாம்.''”

"தமிழக அதிகாரி ஒருவரை சென்னை விமானநிலையத்தில் அதிரடியாக இன்கம்டாக்ஸ் அதிகாரிகள் மடக்கி யிருக்கிறார்களே?''”

"உண்மைதாங்க தலைவரே, கடந்த 25ஆம் தேதி சென் னையிலிருந்து டெல்லி செல்வதற்காக சென் னை ஏர்போர்ட்டுக்கு வந்திருந்தார் தமிழக தொழிலாளர் நல உதவி ஆணையர் ரமேஷ்குமார். அவரை திடீரென சுற்றிவளைத்த வரு மானவரித்துறை அதிகாரிகள், அவரி டம் தீவிர விசாரணை நடத்தினார்கள். அதோடு, அவரிட மிருந்த 37.50 லட்ச ரூபாயைப் பறிமுதல் செய்திருக்கிறார்கள். இதன்பிறகு அவரை வருமான வரித் துறையினர் விடுவித்து விட்டனர். இதைப் பார்த்த பலரும், தமிழக அதிகாரியை ஒன்றிய அரசு அதி காரிகள் எதற்காக மடக்கி விசாரிக்க வேண்டும்? ஏன் பணத்தைப் பறிமுதல் செய்துவிட்டு அனுப்ப வேண்டும்? அந்தப் பணம் கணக்கில் காட்டப்படாத பணமா? அப்படியானால் அது யாருடைய பணம்?’ என்றெல்லாம் குழம்பிப் போனார்கள். இதற்கான விடை தெரியவே இல்லை. இந்த நிலையில், அந்த சம்பவத்தையே வருமான வரித்துறையினர் மூடி மறைக்கும் முயற்சியில் இருக்கிறார்களாம். என்ன நடக்கிறது? என்பது டெல்லிக்கே வெளிச்சம்.''”

"ஆம்ஸ்ட்ராங் படுகொலை விவகாரத்தில் மேலும் சிலரை போலீஸின் சந்தேகப் பார்வை துரத்துகிறதாமே?''”

"ஆம்ஸ்ட்ராங் படுகொலைச் சம்பவத்தில் இப்போது சந்தேக வளையத்தில் பிரதானமாக இருப்பது தூத்துக்குடியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவராம். இவர் காவல்துறை எஸ்.பி. லாவண்யாவின் கணவர். இந்த ராதாகிருஷ்ணன் மீது 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் இருக்கிறதாம். அ.தி.மு.க.வில் இருந்து பா.ஜ.க.வுக்கு வந்தவராம் ராதாகிருஷ்ணன். இவரைத் தாண்டி இன்னும் சிலரையும் காவல்துறை தனது சந்தேகப் பார்வையில் வைத்துத் துரத்துகிறது. இந்தப் பட்டியலில் உள்ள சம்பவ செந்தில், நேபாளத்துக்குத் தப்பிச் சென்றுவிட்டாராம். கண்காணிப்பில் இருந்த சீசிங் ராஜா என்பவரும் தலைமறைவாகிவிட்டாராம். இந்தப் படுகொலை விவகாரத்தில் 5 வழக்கறிஞர்களுக்கு தொடர்பு இருப்பதைக் கண்டறிந்திருக்கிறார்கள். இவர்களை ஆபரேட் செய்தவர் சம்பவ செந்திலாம். சென்னை வழக்கறிஞர்கள் சங்கத் தேர்தலில் வழக்கறிஞர் ஒருவரைத் தோற்கடிக்க, ஆம்ஸ்ட்ராங் கடுமையாக வேலை பார்த்தாராம். இந்த விரோதமும் படுகொலைக்குக் காரணமாக இருக்கலாமோ என்கிற கோணத்திலும் போலீஸ் டீம் சந்தேகிக் கிறதாம்.''”

"கள்ளச்சாராய வியாபாரிகள் தொடர்பான வங்கிக் கணக்குகள் அதிரடியாய் முடக்கப்பட்டி ருக்கிறதே?''”

"கள்ளக்குறிச்சியில் மெத்தனால் கலந்த விஷ சாராயத்தைக் குடித்து 67 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே அதிரவைத்தது. இதைத் தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் சாராயம், கஞ்சா மற்றும் போதைப்பொருட்களை விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க்,தனது பகுதிக்கு உட்பட்ட மாவட்டங்களில் உள்ள கள்ளச்சாராய வியாபாரிகள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் வங்கிக் கணக்குகளை முடக்க உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் 71 பேர், விழுப்புரம் மாவட்டத்தில் 98 பேர், கள்ளக்குறிச்சியில் 13 பேர், திருப்பத்தூர் மாவட்டத்தில் 41 பேர், திருவள்ளூர் மாவட்டத்தில் 12 பேர், வேலூர் மாவட்டத்தில் 33 பேர், திருவண்ணாமலை மாவட்டத்தில் 77 பேர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 44 பேர் என கிட்டத்தட்ட 400 பேரின் வங்கி கணக்குகளை முடக்கியிருக்கிறார்கள்.''”

"சரிப்பா, லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி ஒருவரைப் பற்றி தமிழக லஞ்ச ஒழிப்புத்துறைக்கே புகார் போயிருக்கே?''”

"திருவாரூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை இன்ஸ்பெக்டராக இருக்கிறார் அனிதா ஆரோக்கியமேரி. இவரைப் பற்றி அரசுத்துறை அதிகாரிகளே புகார்களைக் கூறி வருகிறார்கள். என்ன விவகாரம் என்று அவர்கள் தரப்பில் நாம் விசாரித்தபோது, ‘இந்த ஆரோக்கிய மேரி, சாதாரண ஆள் இல்லை. மாவட்டத்தில் இருக்கும் எந்த அதிகாரி லஞ்சம் வாங்கறாங்கன்னு விசாரிப்பாங்க. அவங்களுக்குக் கிடைச்ச தகவலின் படி, சம்பந்தப்பட்ட அதிகாரிகளைத் தொடர்புகொண்டு, ’உங்க மேல இப்படியெல்லாம் புகார்கள் வந்திருக்கு'ன்னு பேரம் பேசுவார். குறிப்பாக, வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், நெடுஞ்சாலை துறை பொறியாளர் அலுவலகம், பொதுப்பணித்துறை அலுவலகம் ஆகியவற்றில் இருக்கும் அதிகாரிகளை மிரட்டி, மாத மாமூலும் வசூலிக்கிறார். இவரைப் பார்த்தாலே அதிகாரிகள் மிரள்றாங்க’ என்கிறார்கள் எரிச்சலாக. தற்போது இவர்மீது சென்னையிலுள்ள லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநரகத்தில் புகார்கள் குவிகிறதாம்.''”

"கோவையின் புதிய மேயர் பற்றி விறுவிறுப்பாகப் பேசப்படுகிறதே?''”

ss

"கோவை மாநகராட்சி மேயர் கல்பனா, கவுன்சிலர்களின் அதிருப்தியால் பதவி விலகியதைத் தொடர்ந்து, தற்போது அடுத்த மேயரைத் தேர்ந்தெடுக்கும் மும்முரத்தில் இருக்கிறது மாநகர தி.மு.க. இந்த நிலையில் அடுத்த மேயராக சாந்தி முருகன் வருவார் என்கிறார்கள், கோவை உடன்பிறப்புகள். இவர், பாரம்பரிய திமுக குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது மாமனார் மு.மா.சண்முகசுந்தரம், அறிஞர் அண்ணாவின் நட்பு வட்டத்தில் இருந்தவராம். மொழிப்போர் தியாகியான சண்முகம், ஒருமுறை சூலூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிவாய்ப்பை இழந்தவராம். எனினும் கலைஞரோடும் அழுத்தமான நட்பில் இருந்திருக்கிறார் சண்முகம். அவரது மகனான முருகன் இப்போது கோவை மாநகர் மாவட்ட பொதுக்குழு உறுப்பினராக பொறுப்பில் இருக்கிறார். இந்த முருகனின் மனைவியான சாந்தி முருகன், மாநகராட்சி பணிக் குழுத் தலைவராக இருந்து வருகிறார். அகமுடையார் சமூகத்தைச் சேர்ந்த இவர் பக்கமே இப்போது காற்று வீசிக்கொண்டிருக்கிறது என்கிறார்கள்.''”

"நானும் என் காதுக்கு வந்த ஒரு தகவலைப் பகிர்ந்துக்கறேன். பிரபல பாஷ்யம் கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவன உரிமையாளரான அபினாஸ், ஓ.பி.எஸ்.ஸுக்கு மிக நெருக்கமானவர். அந்த ஈடுபாட்டில், அவரையும் அ.தி.மு.க.வில் இருந்து விலக்கப்பட்ட மற்றவர்களையும், மறுபடியும் அதிமுகவில் இணைக்க முயற்சி எடுத்துவருகிறாராம். இதற்காக, ஓபிஎஸ், எடப்பாடி, மற்றும் சசிகலா தரப்பில் இளவரசி மகன் விவேக்குடனும் தொடர்ந்து பேசிவருகிறாராம். ஆனால் சசிகலாவோ, அபினாஸ் முயற்சி எல்லாம் கதைக்காகாது. அவர் பேசுவதெல்லாம் டைம்பாஸுக்குதான். டெல்லி தன் பாணியில் அதட்டி னால்தான் எடப்பாடி பயப்படு வார் என்று ஆதங்கத்தோடு சொல்லி வருகிறாராம்.''”

____

இறுதிச் சுற்று

தமிழ்நாடு பணியாளர்கள் தேர்வாணையம், தமிழ்நாடு மின்சார வாரிய ஒழுங்கு முறை ஆணையம், தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்கு முறை ஆணையம், லோக் ஆயுக்தா உள்ளிட்ட அமைப்புகளின் தலைவர் (சேர்மன்) பதவி நீண்ட மாதங்களாக காலியாக இருக்கிறது. இந்த பதவிகளைக் கைப்பற்ற பலரும் முயற்சித்து வருகிறார்கள். முக்கிய பதவிகள் காலியாக இருப்பது குறித்து தமிழக கவர்னர் ஆர்.என். ரவிக்கு பல தகவல்கள் சொல்லப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், தமிழ்நாடு மின்சார வாரிய ஒழுங்கு முறை ஆணையத்தின் தலைவராக மணிவண்ணண் என்பவரை தமிழக அரசு தேர்வு செய்திருப்பதாக கோட்டை வட்டாரங்களில் உலாவருகிறது. மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் இயக்குநராக இருந்து கடந்த மே மாதம் ஓய்வு பெற்ற அதிகாரி மணிவண்ணண். இது ஒருபுறமிருக்க, முதல்வரின் மூன்றாவது செயலாளராக இருக்கும் சண்முகம் ஐ.ஏ.எஸ்., ஆணைய தலைவர் பதவிகளில் ஒன்றைக் குறிவைத்து காய்களை நகர்த்தி வருவதாக கோட்டையில் சொல்லப்படுகிறது.

-இளையர்