அரசு போக்குவரத்துக் கழகத்தில் நடத்துனராக பணியாற்றி ஓய்வுபெற்றவர் உலக நாதன். இவர் தீவிர தி.மு.க. பற்றாளர் ஆவார். தேர்தலுக்கு முன்பு தி.மு.க.தான் ஜெயிக்க வேண்டும். ஸ்டாலின்தான் முதல்வராக ஆட்சி பீடத்தில் அமரவேண்டும்”என்று எல்லோரிட மும் சொல்லிக்கொண்டிருந்தார். அவர் விரும் பியபடியே, தமிழகத்தில் ஆட்சிமாற்றம் நிகழ்ந்து ஸ்டாலினும் முதல்வராக ஆகிவிட்டார்.
அப்போதில் இருந்தே உற்சாக மனநிலையில் இருந்த உலகநாதன், தீடீரென்று கரூர் பகுதியில் உள்ள, அமைச்சர் செந்தில் பாலாஜி யின் குலதெய்வமான மண்மங்கலம் காளியம்மன் கோயிலுக்குச் சென்று, அங்கு யாரும் எதிர் பார்க்காத வகையில் தீக்குளித்துவிட்டார்.
அதற்குமுன் அவர் முதல்வர் ஸ்டாலினுக்கும்., அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும் உணர்ச்சிமயமாய் ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். அதில்... "தி.மு.க. ஆட்சியைப் பிடிக்கவேண்டும். தலைவர் ஸ்டாலின் முதல்வராக வேண்டும். தம்பி செந்தில் பாலாஜி அமைச்சராக வேண்டும். தி.மு.க.வை தரக்குறைவாகப் பேசிய எடப்பாடியின் ஆட்சி ஒழிய வேண்டும் என்றும் நான் இறைவனை வேண்டிக்கொண்டேன். என் வேண்டுதல் பலித்தால் என் உயிரையும் தருகிறேன் என்று நேர்ந்துகொண்டேன். இப்போது என் பிரார்த்தனை பலித்து விட்டது”என்று குறிப்பிட்டிருந்ததோடு... தற்போது அதற்கான நேரம் வந்துவிட்டது. நான் காளியின் அருள் பெற்றவன். எனவே இனி எப்போதுமே தி.மு.க. ஆட்சி மட்டும்தான் நிலைத்து நிற்கும்.
என் மகன் விழுப்புரம் மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலராகப் பணியாற்றி வருகிறார். அவரை பணியிடமாற்றம் செய்து, அமைச்சர் செந்தில் பாலாஜி தன் நேரடிப்பார்வையில் வைத்துக் கொள்ள வேண்டும். இப்போது என்னுடைய வேண்டுதல் பிரகாரம் சுய நினைவுடன் நான் என்னுடைய உயிரை மாய்த்துக்கொள்கிறேன்'’ என்றும் உருக்கமாகக் குறிப்பிட்டிருக்கிறார். இந்தக் கடிதத்தை எழுதிய வேகத்தில் கோயிலிலேயே தன் உயிரைக் காணிக்கையாக்குவதாகக் கூறியபடியே... யாரும் எதிர்பாராத வகையில் தீக்குளித்திருக்கிறார்.
உலகநாதனின் உடலுக்கு தி.மு.க. பிரமுகர் களும் தொண்டர்களும் பெருமளவில் கூடி அவரது உடலுக்கு தி.மு.க. கொடி போர்த்தி அடக்கம் செய் தனர். செந்தில் பாலாஜி சென்னையில் இருந்ததால் அவரது சகோதரர் அசோகன், உலகநாதனின் குடும்பத்தினருக்கு போன் செய்து ஆறுதல் கூறியதுடன் ஊர் திரும்பியதும் அண்ணன் வந்து பார்ப்பார் எனக் கூறியுள்ளார்.
கட்சிமீதும், கட்சித் தலைவர்மீதும், விசுவாசம் இருப்பதில் தவறில்லை. அது உயிரையே அர்ப் பணிக்கும் அளவுக்கு செய்வது எந்த வகையிலும் ஏற்க முடியாதது. கட்சிக் கொள்கைக்கும் முரணானது.