தமிழகத்தின் சமூக, பொருளாதார வளர்ச்சியில் பல பொறியாளர்களை சிறப்பாக உருவாக்கித் தந்த சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் பங்கு முக்கியமானது. தற்போது உலகத் தரம் என்ற போர்வையில் அண்ணா பல்கலைக்கழகத்தை பறித்துக்கொள்ள மத்திய அரசு முயற்சிக்கிறது. அதற்கு தமிழக அரசும் துணைபோகும் வகையில் நடந்துகொள்கிறது என்ற குற்றச்சாட்டுகள் எழும் நிலையில், அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா எழுதிய கடிதம் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/surappa_0.jpg)
அந்தக் கடிதத்தில் ஐந்து வருடங்களில் அண்ணா பல்கலைக்கழகத்தால் 1,500 கோடி ரூபாய் நிதி திரட்டிக்கொள்ள முடியும். மாநில அரசின் நிதிப் பங்கீடு இல்லாமலேயே பல்கலைக்கழகத்தால் சமாளிக்கமுடியும். ஆகவே, அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உயர்சிறப்பு அந்தஸ்தை அளிக்கவேண்டுமென்று, துணைவேந்தர் சூரப்பா மத்திய அரசுக்கு ஜூன் மாதம் கடிதம் எழுதியுள்ளார்.
ஜூன் மாதம் சூரப்பா அனுப்பிய கடிதத்திற்கு முன்னதாகவே உயர்சிறப்பு அந்தஸ்து வேண்டுமென, உயர்கல்வி அமைச்சர், முதல்வரின் ஒப்புதலோடு முதன்மைச்செயலாளர் மூலம் மத்திய அரசுக்கு கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளனர். அந்த கடிதத்தின் காரணமாக தமிழகத்தில் பிரச்சனை வெடிக்கத் தொடங்கியபிறகே, தமிழக அரசு நாங்கள் தமிழக மக்களுக்கு
எதிரான எந்த திட்டத்தையும் செல்படுத்தமாட்டோம் என ஒப்புக்குச் சப்பாணி அறிவிப்பை வெளியிட் டுள்ளதே தவிர, மத்திய அரசுக்கு தனது உறுதியான எதிர்ப்பை வெளிப்படுத்தவில்லை என்கிறார்கள் கல்வியாளர்கள்.
இதன் பிறகுதான் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா ஒரு கடிதத்தை மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் மாநில அரசு நிதி இல்லாமலே பல்கலைக்கழகத்தில் கிட்டும் வருமானத்திலே கல்லூரியை இயக்க முடியும் என தெரிவித்திருந்தார்.
உயர்சிறப்பு அந்தஸ்து வழங்குவது சம்பந்தமாக அ.தி.மு.க. அரசின் சார்பில் ஆராய்ந்து, கொள்கைமுடிவு எடுக்க அமைச்சர்கள் குழு ஒன்று அமைக்கப்பட்டு, அந்தக் குழுவின் பரிந்துரை இன்னும் வெளிவராத சூழலில், ஒரு துணைவேந்தர் எப்படி தன்னிச்சையாக மத்திய அரசுக்குக் கடிதம் எழுதமுடியும். முதல்வர் பழனிசாமி ரகசியமாகக் கொடுத்த அனுமதி காரணமா என்ற சந்தேகம் கல்வியாளர்களின் மத்தியில் எழுந்துள்ளது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/stalin_162.jpg)
பல்கலைக்கழகங்கள் உயர்சிறப்பு அந்தஸ்து பெற ரூ.2000 கோடிக்கு மேல் நிதி தேவை. மத்திய அரசு ரூ.1000 கோடி மட்டுமே அளிக்கும். கூடுதல் செலவாகும் தொகையை மாநில அரசே ஏற்றுக்கொள்ள வேண்டும். இது பெரும் நிதிச்சுமை என்பதால் ஜாதவ்பூர் பல்கலைக்க ழகத்திற்கு சிறப்புத் தகுதி வேண்டாம் என்று மேற்குவங்க அரசு அறிவித்தது. ஆனால் தமிழக அரசு வேண்டாம் என்று சொல்லாமல் எங்களுக்கு நிதிப்பிரச்சனையையும், இட ஒதுக்கீட்டு பிரச்சனையையும் சரிசெய்து கொடுத்தால் நாங்கள் இந்த உயர் அந்தஸ்தை ஏற்றுக்கொள்ளும் சூழலில் இருந்தது. இதன் விளைவுதான் சூரப்பாவின் மாநில அரசின் நிதி தேவையில்லை என்ற கடிதம்.
இது ஒருபுறம் என்றால், மாணவர்களின் தேர்வில் நடைபெற்ற முறைகேட்டில் அமைச்சருக்கும் தொடர்பு உண்டு என்று சூரப்பா கூறியிருந்தார். உயர்கல்வி அமைச்சர் கே.பி. அன்பழகனுக்கும், துணைவேந்தர் சூரப்பாவுக்கும் இடையே ஏற்பட்ட அதிகாரப் பிரச்சனைக்கும் இந்த கடித விவகாரத்துக்கும் தொடர்புள்ளதாகவும் சில தரப்புகள் தெரிவிக்கின்றன.
தமிழக அரசு கேட்பதுபோல் சில விதிவிலக்குகளை அளிப்பதாக மத்திய அரசு சொல்லிவிட்டு மத்திய அரசின் கட்டுப்பாட்டில் பல்கலைக் கழகத்தை கொண்டு சென்றால், உயர்சிறப்பு அந்தஸ்து (ஐ.ஓ.வி) விதிமுறை களின்படி பார்த்தால் மெரிட் கோட்டா அடிப் படையில்தான் சீட்டு வழங்கப்படும். அப்படியிருக்க தற்போதுள்ள தமிழக அரசின் 69% இட ஒதுக்கீட்டை அங்கு எப்படி எதிர்பார்க்க முடியும்? ஏற்கனவே மத்திய அரசின் கல்வி நிறுவனங் களில், இதர பிற் படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27% இட ஒதுக்கீடு முறையாக செயல்படுத்தப்படவில்லை என்பதற்கான சட்டப்போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/kpanbagalan.jpg)
நீட் தேர்வு நடைமுறையால், எப்படி தமிழக அரசுப் பள்ளி மாணவர்களுக்கும், கோச்சிங் சென்டர்களுக்குச் செல்லமுடியாத மாணவர்களுக்கும் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்காத நிலை ஏற்பட்டதோ, அதையொத்த சிக்கல்கள் ஏற்படுவதற்கே, அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உயர் அந்தஸ்து வழங்குவது இட்டுச்செல்லும் என்கிறார்கள் விஷயமறிந்த பேராசிரியர்களும், கல்வியாளர்களும்.
தமிழக அரசும் அதற்கேற்றாற்போல் உறுதியான பதிலையோ விளக்கத்தையோ அளிக்காமல், சமாளிப்பு பதில்களையும் மௌனத்தையுமே நிலைமைக்கு ஏற்றாற்போல கையாண்டுவருகிறது என்கிறார்கள். அண்ணா பல்கலைக்கழக பெயர் மாற்றம், உயர் சிறப்பு அந்தஸ்து இவற்றிற்கு எதிராக பல்கலைக்கழக பேராசிரியர்களே போர்க்கொடி உயர்த்துகிறார்கள்.
இந்த நிலையில்தான் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்ததோடு, சூரப்பாவை உடனடியாக மாற்ற வேண்டும் இல்லையென்றால் போராட்டம் வெடிக்கும் என்றார். தி.மு.க. இளைஞரணி- மாணவரணி சார்பில் போராட்ட அறிவிப்பு வெளியானது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/annauniversity_11.jpg)
வேளாண்மை பார்த்தவன் ஒருத்தன். வெட்டிக்கிட்டுப் போறவன் ஒருத்தன் என்ற கதையாக கடந்த ஐம்பதாண்டு காலமாக தமிழக அரசு உருவாக்கி வைத்துள்ள வசதிகளை ஈஸியாக தன் பிடிக்குள் கொண்டுவருவதற்கான வலைகளை விரிக்கிறது மத்திய அரசு. உட்கட்சி சிக்கல் முதல் ஊழல் குற்றச்சாட்டுகள் வரை பல்வேறு சிக்கல்களில் மாட்டியுள்ள தமிழக அரசு இரு தலைக் கொள்ளி எறும்பாகத் தவிக்கிறது.
தனது கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் எப்படி அதிகாரத்தை கையில் எடுத்துக் கொள்ளலாம் எனக் கேட்க வேண்டிய தமிழக அரசோ, அண்ணா பல்கலைக்கழகம் தன்னிச்சையாக 1500 கோடி ரூபாயை எப்படித் திரட்ட முடியும் என துணைவேந்தர் சூரப்பாவிடம் விளக்கம் கேட்டுள்ளது.
-அ.அருண்பாண்டியன்
___________________
ராஜ்பவன் சந்திப்பில் தவித்த எடப்பாடி!
இந்தியாவில் உள்ள உயர் கல்வி நிறுவனங்களை மத்திய அரசின் வசம் கொண்டும் வரும் திட்டத்தின் ஒரு பகுதியாக, அண்ணா பல்கலைக்கழகத்தை குறி வைத்துள்ள மோடி அரசு, கவர்னருக்கு சில அறிவுறுத்தல்களை செய்துள்ளது. அதன்படி, அண்ணா பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் சூரப்பாவுக்கு பல்கலைக்கழக வேந்தரான கவர்னர் உத்தரவிட, மத்திய அரசுக்கு கடிதம் எழுதுகிறார் சூரப்பா. உயர் சிறப்பு அந்தஸ்து வழங்குவதன் மூலம் பல்கலையை தமிழக அரசின் அதிகாரத்திலிருந்து விடுவிக்க முடியும். துணைவேந்தரை கவர்னர்தான் நியமிக்கிறார் என்றாலும், துணை வேந்தர் அரசின் உயர்கல்வித்துறைக்கு கட்டுப்பட்டவர். அப்படியிருந்தும், எடப்பாடி அரசின் அனுமதியின்றி மத்திய அரசுக்கு கடிதம் அனுப்புகிறார் சூரப்பா. கடிதத்தின் நகல் மட்டுமே அரசுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த விவகாரம் அறிந்து பல்கலை பேராசிரியர்கள், கல்வியாளர்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.
உயர்கல்வித்துறை செக்ரட்டரி அபூர்வா உள்ளிட்ட உயரதிகாரிகளிடம் விவாதிக்கிறார் அமைச்சர் கே.பி.அன்பழகன். சூரப்பாவின் கடிதத்தின் பின்னணியிலுள்ள ஆபத்துகளை விவரிக்கிறார்கள். இதனை எடப்பாடியின் கவனத்துக்கு அன்பழகன் கொண்டு செல்ல, அரசு தரப்பிலிருந்து சூரப்பாவுக்கு, அரசு அனுமதியின்றி மத்திய அரசுக்கு நீங்கள் கடிதம் எழுதியது தவறு; அரசு இதனை அனுமதிக்காது என்கிற ரீதியில் எச்சரிக்கை செய்யப்பட்டிருக்கிறார். இதனை கவர்னரின் கவனத்துக்கு சூரப்பா கொண்டுபோக, கடந்த வாரம் ராஜ்பவனுக்கு அழைக்கப்பட்டார் எடப்பாடி.
ராஜ்பவனில் நடந்த கவர்னர்-எடப்பாடி சந்திப்பில் விவாதிக்கப் பட்ட பல்வேறு பிரச்சனைகளில் அண்ணா பல்கலை மேட்டரும் முக்கியமாக இருந்துள்ளது. அப்போது, அரசின் கட்டுப்பாட்டிலிருந்து பல்கலையை விடுவிக்கும் எந்த ஒரு மறைமுக நடவடிக்கைக்கும் அரசு அனுமதிக்காது என சொல்லியிருக்கிறார் எடப்பாடி. அமைச்சர் சண்முகம், தலைமைச்செயலாளர் சண்முகம் ஆகிய இருவரும் அரசின் கருத்தை வலியுறுத்தும் வகையில் பேசியிருக்கின்றனர். ஆனால், கவர்னர் ஏற்றுக்கொள்ளவில்லை. அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தலை அழுத்தமாகச் சொல்லி எடப்பாடி உள்ளிட்டவர்களை அனுப்பி வைத்துள்ளார் கவர்னர்.
மாநில உரிமையை விட்டுக்கொடுத்தால் ஏற்படக்கூடிய அரசியல் நெருக்கடி ஒருபுறம், கவர்னரின் நெருக்கடி மற்றொரு புறம் என தவித்திருக்கிறார் எடப்பாடி. இந்த சூழலில், அரசு தரப்பிலிருந்தே சிலர் இந்த நெருக்கடியை திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தெரிவிக்கப் பட்டது என்று சொல்கிறது கோட்டை வட்டாரம். அவர், சூரப்பா கடிதம் எழுதிய விவகாரத்தை கண்டித்ததுடன், சூரப்பா என்ன மற்றொரு முதலமைச்சரா ? அவரை துணைவேந்தர் பதவியிலிருந்து நீக்க வேண் டும் என காட்டமாக அறிக்கை கொடுக்க, ஆளும் கட்சி ஒருவகையில் நிம்மதியடைந்திருக்கிறது என்கிறார்கள்.
-இளையர்
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-10/surappa-t.jpg)