இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 59 வயதான விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், பேரி வில்மோர் இருவரும் பூமிக்குத் திரும்பமுடியாமல் 400 கிலோமீட்டர் உயரத்தில் தவித்துவருகின்றனர்.
விண்வெளியில் நடக்கும் ஆராய்ச்சிக்காக, அமெரிக்காவைச் சேர்ந்த ஆராய்ச்சி மையமான நாசா, விண்வெளியில் 400 கிலோமீட்டர் தொலைவில் விண்வெளி நிலையத்தை அமைத்துள்ளது.
தொடக்கத்தில் ஆராய்ச்சிக்காக விண்வெளி வீரர்கள் விண்வெளிக்குச் சென்று மீண்டும் பூமிக்கு வந்துசேர ரஷ்யாவை நாடிவந்தது. ஒருமுறை விண்வெளிக்கு வீரர்களை அழைத்துச்சென்று மீண்டும் பூமியில் கொண்டுவந்து சேர்ப்பதற்கு ரஷ்யா 56 மில்லியன் டாலர்கள் வசூல் செய்கின்றது. இந்த பெரிய பொருட்செலவைக் குறைக்க அப்போதைய அமெரிக்க அதிபரான, பராக் ஒபாமா யோசனைப்படி அமெரிக்காவின் சொந்த விண்வெளி ஓடத்தை உருவாக்கத் திட்டமிடப்பட்டது.
அமேசான் நிறுவனத்தின் புஃளூ ஆர்ஜன், எலன் மஸ்கின் டெஸ்லா நிறுவனத்தின் ஸ்பேஸ் எக்ஸ், பிரபல விமான தயாரிப்பு நிறுவனம் ஆன போயிங் நிறுவனத்தின் ஸ்டார்லைன் நிறுவனங்கள் முன்வந்தன. ஆராய்ச்சிக்காக நாசா பல கோடி டாலரை செலவிட்டது. இந்த நிலையில் போயிங் நிறுவனத்தின் ஸ்டார்லைனர் என்ற பெயரில் ஒரு ஓடத்தை கடந்த 2017-ஆம் ஆண்டு உருவாக்கியது.
முதற்கட்ட ஆய்வுகளில் ரோபோட்கள் பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், இந்த வருடம் ஸ்டார்லைனர் மூலம் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ், பேரி வில்மோர் ஆகிய இரண்டு விண்வெளி வீரர்களை கடந்த மே 7ஆம் தேதி விண்ணுக்கு அனுப்புவதற்கு தயாரானது அமெரிக்கா.
திட்டப்படி புறப்படுவதற்கு மூன்று மணி நேரம் முன்பு தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நிறுத்திவைக்கப்பட்டது. மீண்டும் ஜூன் 1-ஆம் தேதி புறப்படுவதற்கு மூன்று நிமிடத்திற்கு முன் மீண்டும் தொழில்நுட்பக் கோளாறு. மூன்றாவது முறையாக கடந்த ஜூன்-5-ஆம் தேதி வெற்றிகரமாக இரு விண்வெளி வீரர்களுடன் விண்ணை நோக்கிப் பாய்ந்தது ஸ்டார்லைனர்.
மொத்தம் 27 மணி நேரம் பயணத்தைத் தொடர்ந்த ஸ்டார்லைனரில் வழியிலேயே சில தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட்டது. இருப்பினும் அதைச் சரி செய்துகொண்டு விண்வெளியில் அமைக்கப்பட்டிருந்த விண்வெளி நிலையத்தை அடைந்தது.
இரு விண்வெளி வீரர்களும் ஆராய்ச்சிப் பணியை மேற்கொள்ளத் தொடங்கிய நேரத்தில், மேலும் சில தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட்டன. மேலும் ஸ்பேஸ் சூட் எனப்படும் விண்வெளி வீரர்கள் பயன்படுத்தும், விண்வெளி ஆடையை அணிந்த இருவருக்கும் சில பிரச்சனைகள் ஏற்பட்டன. அந்த விண்வெளி ஆடையில் தண்ணீர் புகுந்து சில தொழில்நுட்ப பிரச்சனைகள் ஏற்பட்டதால் ஆராய்ச்சிப் பணியைத் தொடங்கமுடியவில்லை. இதனால் 9 நாட்களில் (அதாவது கடந்த ஜூன் 13-ஆம் தேதி) பூமிக்குத் திரும்ப தயாராக இருந்த நிலையில், விண்வெளி ஓடத்தில் ஏற்பட்ட எரிபொருளான ஹீலியம் லீக்கேஜ் கசிவு மற்றும் தொழில்நுட்ப பிரச்சனையால் இருவரும், 25 நாட்கள் கடந்தும் விண்ணிலேயே தவித்துவருகின்றனர்,
இந்த நிலையில் போயிங் நிறுவனத்தின் மீது பலரும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். காஸ் கட்டிங் காரணத்தால் ஏற்கனவே விமான தயாரிப்பிலும் பல புகார்கள் எழுந்த நிலையில், அதே காஸ் கட்டிங் செலவைக் குறைக்க ஏதோ நிகழ்ந்துள்ளது என்ற புகார்கள் எழுந்துள்ளன. தற்போதுள்ள சூழ்நிலையில் இரு வீரர்களுக்கும் போதிய ஆக்சிஜன், உணவு குறிப்பிட்ட நாட்கள் வரைதான் இருக்கும். இரு விண்வெளி வீரர்களும் மூத்த விஞ்ஞானிகள் என்பதால் அமெரிக்கா, இந்தியாவைச் சேர்ந்தவர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
இந்த பிரச்சனை பற்றி நாசா எந்த தகவலையும் வெளியிடவில்லை. போயிங் நிறுவனமோ, ""இந்த பிரச்சினைகள் சரிசெய்யப்பட்டு, இரு விண்வெளி வீரர்களும் பத்திரமாக வரும் ஜூலை 6-ஆம் தேதி பூமிக்கு வந்துசேர்வார்கள் என்று தெரிவித்துள்ளது. அதற்கான பணிகளில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருவதாகக் தெரிவித்துள்ளது.
இந்தப் பிரச்சனை குறித்து இஸ்ரோவைச் சேர்ந்த பெயர்கூற விரும்பாத ஒரு விஞ்ஞானியிடம் பேசினோம். ""அமெரிக்காவின் இந்த விண்வெளி நிலையம், பூமியிலிருந்து 400 கிலோமீட்டர் உயரத்தில், 28,000 கிலோமீட்டர் வேகத்தில் பூமியைச் சுற்றிவருகிறது. ஹீலியம் லீக்கேஜ் என்பது பெரிய பிரச்சினை இல்லை. வழக்கமாக பாதுகாப்பு காரணமாக பூமியிலிருந்து செல்லும்போது தேவையைவிட அதிகமான எரிபொருள், ஆக்சிஜன், உணவுப் பொருட்கள் கொண்டுசெல்வது வழக்கம் பிரச்சனையைச் சரிசெய்யமுடியாத பட்சத்தில் எலன்மஸ்கின் டெஸ்லா நிறுவனம் உருவாக்கியுள்ள க்ரூ டிராகன் உதவியை நாடலாம். கடந்த சில மாதங்களில் நான்கு விண்வெளி வீரர்களை க்ரூ டிராகன் பூமிக்கு அழைத்துவந்துள்ளது, அதுவும் தவறும்பட்சத்தில் சோவித் ரஷ்யாவின் கேப்சூல் எனப்படும் விண்வெளி ஓடம் மூலம் இரு வீரர்களையும் பூமிக்கு அழைத்துவரலாம். அதனால் 99 சதவிகிதம், வீரர்கள் பூமிக்கு நல்லபடி திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்''’’என்று முடித்துக்கொண்டார்.
இந்தியா ஏற்கெனவே கல்பனா சாவ்லாவை இழந்திருக்கிறது. சுனிதா வில்லியம்ஸ், பேரி வில்மோர் இருவரும் பத்திரமாக பூமியை வந்து அடையவேண்டும் என்பதே தற்போது கோடிக்கான மக்களின் பிரார்த்தனை.