பொதுவாக தேர்தல் களத்தில் அ.தி.மு.க.வின் கேன் வாஸிங் பக்காவாக இருக்கும். இந்த முறை அதைக் கச்சிதமாக செய்தது ஆளுங்கட்சியான தி.முக. கட்சியின் ஒவ்வொரு நிர்வாகிக்கும் ஒதுக்கப்பட்ட பகுதிகளில் தெளிவாக வியூகம் வகுத்து தீவிரமாக வேலை செய் தனர். எழும்பூர் தொகுதி சட்ட மன்ற உறுப்பினரான இ.பரந்தாம னுக்கு செங்கல்பட்டு மாவட்டத் தில் அச்சிறுபாக்கம் தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட 9 ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்களை வெற்றிபெறச் செய்யும் பொறுப்பு ஒதுக்கப்பட்டிருந்தது. அமைச்சர் சேகர்பாபு வழிகாட்டுதலில் இரவு-பகல் பாராமல் பணியாற்றி னார் பரந்தாமன். 9-ல் 7 ஒன்றிய உறுப்பினர்களை தி.மு.க. வென்றதால், அந்த ஒன்றியம் ஆளுங்கட்சி வசமானது.
இப்படி பல இடங்களிலும் வெற்றி. அத்துடன், விநோத -விபரீதங்களுக்கும் குறைவில்லை.
வஞ்சனையில்லாத வாக்காளர்
விழுப்புரம் மாவட்டம் காணை ஊராட்சி ஒன்றியத்துக் குட்பட்ட வாக்கு எண்ணிக்கை. விழுப்புரத்திலுள்ள அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி மையத்தில் எண்ணப்பட்டது. அப்போது ஒரு வாக்குச்சீட்டில் அனைத்து சின்னங்களிலும் வாக்காளர் தனது முத்திரையைப் பதித்திருந்தார். திரைப்படமொன் றில் வடிவேலு -முத்துக்காளை காமெடி காட்சி போலவே வாக்குச்சீட்டு இருந்தது. அந்த வாக்கு செல்லாத வாக்கு என அதிகாரிகளால் அறிவிக்கப் பட்டது.
மகளின் உயிர்பறித்த அப்பாவின் தோல்வி!
மயிலம் ஒன்றியத்திலுள்ள அசூர் ஊராட்சி தலைவர் பதவிக்கு நடைபெற்ற தேர்தலில் அதே ஊரைச் சேர்ந்த விவசாயி சம்பத் போட்டியிட்டார். இவர் 65 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார். இதை அவமானமாக கருதிய சம்பத் மகள் வான்மதி, மனஉளைச்சலில் இருந்துள்ளார். அவர் தனது தந்தையின் செல்போனுக்கு "சாரி டாடி ஐ மிஸ் யூ' என குறுந் தக வல் அனுப்பிவிட்டு வீட்டிலிருந்த மொபட் வண்டியில் வேகமாக புறப்பட்டுச் சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர். இறுதியில் அவர்களது விவசாய நிலத்திலுள்ள கிணற்றருகே வான்மதி ஓட்டிச்சென்ற மொபட் வண்டி நின்றுள்ளது. அதைக் கண்டு சந்தேகமடைந்து கிணற்றருகே சென்று பார்த்த போது தண்ணீரில் வான்மதி பிணமாக மிதந்துள்ளார். அவர் விஷம் அருந்திவிட்டு கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து வெள்ளி மேடு பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை செய்து வருகின்றனர் .
தீராத அதிகார ஆசை
உளுந்தூர் பேட்டை தி.மு.க. எம்.எல். ஏ.வாக (1989-91) இருந்தவர் அங்கமுத்து. இவரது சொந்த ஊர் புகைப் பட்டி கிராமம். தற்போதைய உள்ளாட்சித் தேர்தலில் ஊராட்சிமன்றத் தலைவர் பதவிக்கு அங்கமுத்து போட்டியிட்டார். இவருடன் சிவலிங்கம், சத்யராஜ், அரி புத்திரன் ஆகியோரும் களத்தில் குதித்தனர். ஆனாலும் அங்க முத்துவை மக்கள் வெற்றிபெற வைத்து ஊராட்சிமன்றத் தலைவராக்கியுள்ளனர்.
இதே உளுந்தூர்பேட்டை தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் 1991-ல் எம்.எல்.ஏ.வாக வெற்றிபெற்று ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராக பவனி வந்தவர் ஆனந்தன். பின்னர் பாராளுமன்றத் தேர் தலில் விழுப்புரம் தொகுதியில் போட்டியிட்டு எம்.பி. ஆகவும் பதவியில் இருந்தவர்.
இவரது சொந்த ஊர் உளுந்தூர்பேட்டை அருகே யுள்ள நத்தாமூர். இந்த ஊராட்சித் தலைவருக்கான பதவியைப் பிடிக்க ஆனந்தனின் மனைவி சித்ரா போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளார்.
குலுக்கல் முறையில் உறுப்பினர் தேர்வு
ரிஷிவந்தியம் ஒன்றியத்திற்குட் பட்ட உள்ளாட்சித் தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டது. இதில் மேலந்தல் ஊராட்சி ஐந்தாவது வார்டில் போட்டி யிட்ட குப்பம்மாள் -ஜெயந்தி ஆகிய இருவருக்கும் தலா 66 வாக்குகள் கிடைத்தன. அதேபோல் கடம்பூர் ஊராட்சியில் இரண்டாவது வார்டு உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட்ட கௌசல்யா, துர்காதேவி ஆகிய இருவருக் கும் 73 ஓட்டுகள் கிடைத்தன. சிறுவங்கூர் ஊராட்சியில் 8-வது வார்டில் போட்டி யிட்ட வேலுமணி, அண்ணாமலை இருவ ருக்கும் 71 ஓட்டுக்கள் கிடைத்தன. இந்த வேட்பாளர்கள் 6 பேரும் சமமான வாக்குகள் பெற்ற நிலையில், தேர்தல் அலுவலர் ஆறுமுகம், சம்பந்தப்பட்ட வேட்பாளர்கள் முன்னிலையில் அவர்களது பெயர்களை துண்டுச்சீட்டில் எழுதி குலுக்கல் முறையில் தேர்வுசெய்யப் பட்டதில் குப்பம்மாள், கௌசல்யா, வேலுமணி ஆகியோர் வெற்றி பெற்றனர்.
86 வயதில் ஊராட்சித் தலைவி
பாளையை ஒட்டியுள்ள அதன் யூனியனுக்கு உட்பட்ட ஊராட்சி சிவந்திபட்டி. இங் குள்ள விவசாய குடும்பமான சுப்பையா குடும்பம், சிவந்திபட்டி உட்பட சுற்றுப்பட்டு கிராமத் திலும் அறிமுகமானது. இவரது மனைவி 86 வயதுடைய பெருமாத்தாள் தற்போதைய உள்ளாட்சித் தேர்தலில் இந்த மூதாட்டி பஞ்சாயத்து தலைவி யாக வெற்றி பெற்றிருக்கிறார்.
சுமார் 2800 வாக்குகளைக் கொண்ட சிவந்திபட்டியின் தலைவர் பதவி பெண்களுக்கு என்று ஒதுக்கப்பட்டதால் இம்முறை இந்தக் குடும்பத்தி லிருந்து 86 வயது மூதாட்டியும், தங்கபாண்டியனின் தாயாருமான பெருமாத்தாள் வேட்பாள ராகியிருக்கிறார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட செல்வராணி, உமா இருவரும் அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள்.
86 வயதானாலும் திடமாகப் பிரச்சாரத்துக்குச் சென்று வாக்கு சேகரித்தார் பெருமாத்தாள். 2160 வாக்குகள் பதிவானதில் பெருமாத்தாள் 1568 வாக்குகள் பெற்று வெற்றிபெற, எதிர்த்துப் போட்டியிட்ட இரண்டு வேட்பாளர்களும் டெபாசிட்டை இழக்க நேரிட்டுள்ளது.
-எஸ்.பி.எஸ்.