"கல்யாணம் பண்ணியும் பிரம்மச் சாரி'யாக வாழ்பவர்களைக் கேள்விப் பட்டிருப்பீர்கள். ஆனால் கல்யாணம் பண்ணாமலே சம்சாரியாக வாழ்பவரைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அதுவும் பன்னிரெண்டு நாடுகளில்... நூறு குழந்தைகளுக்கு அப்பாவாக இருக்கிறார் அவர்.
X சமூக ஊடகத்தின் தலைவர் ELON MUSK சமீபத்தில் பரபரப்பான பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளானார். தனது நிறுவனத்தில் பணிபுரியும் சில பெண்களிடம் "அறிவாளியான குழந்தைகள் இந்த உலகத்துக்கு அவசியம்; அதனால் என்கூட உடல் தொடர்பு வச்சு, குழந்தைகளைப் பெத்துப் போடு' என வற்புறுத்தினார் மஸ்க் என்பதே அந்த குற்றச்சாட்டு. இது பற்றி A கதையில் எழுதியிருந் தோம்.
மஸ்க் பற்றி மிக லேட்டஸ்ட்டான செய்தி... தனது நான்காவது மனைவி மூலம் ஒரு பையனுக்கு அப்பாவாகி யிருக்கிறார். இதுவரை மொத்தம் 12 குழந்தைகள் மஸ்க்கிற்கு. (அதில் ஒரு குழந்தை மட்டும் இறந்துவிட்டது)
அடுத்தும், தனது பிள்ளைகள் உற்பத்தியைத் தொடர்ந்துகொண்டிருக் கிறார்.
சமூக வலைத் தளங்களில் மிகவும் பிரபலமான இன்னொன்று TELEGRAM..
டெலிகிராமின் உரிமையாளர்களில் ஒருவரும், அந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியுமான ரஷ்யாவைப் பூர்விகமாகக் கொண்டவர் PAVEL VALERYEVICH DUROV. 39 வயதாகியும் இன்னும் திருமணம் ஆகாத பாவெல்லின் குழந்தைகள் நூறு பேர்கள் 12 நாடுகளில் வளர்கிறார்கள்.
"அடப்பாவி...' என அவசரப்பட்டு சபித்துவிடாதீர்கள்.
பாவெல் செய்வது ஒருவிதத்தில் சேவையாகவே பார்க்கப்படுகிறது.
குழந்தை இல்லாத தம்பதிகளுக்காக IVF: In vitro fertilization எனப்படும் செயற்கைக் கருத்தரிப்பு முறையில் குழந்தை கள் உருவாக்கப்படும். பொதுவாக கணவனின் விந்தணுவை மனைவியின் கரு முட்டைக்குள் செலுத்தி, இந்த கர்ப்பம் உண்டாக்கப்படும். இது இயற்கையிலேயே கருமுட்டைக்குள் விந்தணு இணயாதபோது செய்யப்படும் சிகிச்சை.
கணவனின் விந்தணு ஆரோக்கியமாக இருந்து, பெண்ணின் கருமுட்டை ஆரோக் கியமில்லாமல் இருந்தால், கணவனின் விந்தணுவை, மனைவியின் சம்மதத்துடனும், சம்பந்தப்பட்ட பெண்ணின் சம்மதத்துடனும் வாடகைத்தாய் மூலம் கருத்தரிப்பு செய்யப் படும்.
இந்த முறையில்தான் விக்னேஷ்சிவன் -நயன்தாரா தம்பதி இரு குழந்தைகளுக்கு பெற்றோர் ஆனார்கள்.
பெண்ணின் கருமுட்டை ஆரோக்கிய மாக இருந்து, கணவனின் விந்தணுவில் குறைபாடு இருந்தால், கணவனின் சம்மதத்துடன், முகம் தெரியாத ஒரு நபரின் பதப்படுத்தி வைக்கப்பட்ட உயிரணுவை உட்செலுத்தி, கருத்தரிப்பு செய்யப்படும்.
இதுபற்றி "விக்கி டோனர்' என்ற பெயரில் இந்தியிலும், "தாராள பிரபு' என தமிழிலும் திரைப் படங்கள் வந்திருக்கிறது.
டெலிகிராம் தலமைச் செயல் அதிகாரி பாவெலிடம் அவரின் நண்பர் ஒருவர் "பிள்ளையில்லா தம்பதிகளுக்கு விந்தணு தானம் செய்வது பற்றி' எடுத்துச் சொல்ல... அப்போதிலிருந்து விந்தணு தானம் செய்து வருகிறார். இதனால்தான் பாவெல் "12 நாடுகளில் எனது நூறு குழந்தைகள் வளர்கின்றது' எனச் சொல்லியுள்ளார்.
இந்த சிகிச்சை முறையில் விந்தணுவை தானம் செய்வது யார்? அதைப் பெறுவது யார்? என்பது நம்பிக்கையோடு காக்கப்பட வேண்டியது தர்மம்.
எத்தனை நாடுகள்? எத்தனை குழந்தைகள்? என தெளிவாகத் தெரிந்து வைத்திருக் கிறார் பாவெல், இது போன்றிருந்தால் அவர் செய்த...
தானமே... பாவமாயிடும் !