செக்ஸ் ரொம்ப ரிஸ்க்!
பாம்பு என்றால் படையே நடுங்கும்போது...
தேள் என்றால் தொடையே நடுங்காதா என்ன?
நிலக்கோட்டை -விளாம்பட்டியில் இருந்த எங்கள் காரை வீட்டில் சுவர் சூடு தாங்காமல், சுருட்டி வைத்த பாயில், அடுக்கி வைத்த பானையில், அள்ளி வைத்த விறகில் தேள்கள் பதுங்கியிருக்கும்.
விளாம்பட்டி பேப்பர் மில்லில் "கூலி'யாக வேலை பார்த்தபோது, கடைசி மூட்டையை புரட்டியபோது தேளின் பெரிய வகையான முக்கா முழம் நட்டுவாக்காலி தன் முன் இடுக்கியால் என் வலதுகால் பெருவிரலைக் கவ்வியது. அதனிடமிருந்து என்னை மீட்பது பெரும்பாடாகிவிட்டது. ஒருவேளை... கொடுக்கால் போட்டிருந்தால்...
ஏனென்றால் அவ்வளவு வீரியமானது தேளின் விஷம்! அந்த விஷத்தின் விலையும் அதிகம்தான்.
பல்வேறு நாடுகளில் இப்போது தேள் பண்ணை வைத்து வளர்க்கிறார்கள். ஒரு தேளிலிருந்து ரெண்டு மில்லிகிராம் விஷம் எடுக்கப்படுகிறது.
சேகரிக்கப்பட்ட விஷத்திரவத்தை ஃபிரீசரில் வைத்து கெட்டியாக்கி, பிறகு அதை உலர்த்தி பொடியாக்கி ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறார்கள். விஷ ஏற்றுமதியில் எகிப்து முன்னணியில் இருக்கிறது.
ஒரு கிராம் தேள் விஷம் (இந்திய மதிப்பில்) ரூ.85 லட்சம். அழகு சாதனப் பொருட்கள், வலி நிவாரணி மருந்துகள் தயாரிக்க இந்த விஷப்பொடி பயன்படுது.
"அழகு ஆபத்தானது' என்பது சரிதான்போல!
தேள் வளர்க்கிறவங்க காதுல தேன் பாய்ச்சுற சேதி இது.
தாய்லாந்து நாட்டின் டெனாசெரிம் மலைத் தொடரின் பாறை இடுக்குகளில் எட்டு கண்கள், எட்டு கால்கள் கொண்ட யூஸ்கோபியோப்ஸ் என்கிற தேள் இனத்தோட துணை இனத் தேள்களை விஞ்ஞானிகள் கண்டுபிடிச்சிருக்காங்க.
இனிமே என்ன...? கொடு விஷம் கொண்ட அதை வளர்த்து, "விஷம் எடு... கொண்டாடுதான்!'
சரி... விஷயத்துக்கு வருவோமா...?
அப்ப இதுவரை சொன்னது?
இதுவரை விஷம்; இனிமேல்தான் விஷயம்.
தேள்களின் பாலியல் உறவு பற்றி விஞ்ஞானிகள் சொல்வது வியப்பாகவும் இருக்கிறது தேள் கொட்டின மாதிரியும் இருக்கிறது.
தங்களுக்குப் பிடித்த பார்ட்னரை "கரெக்ட்'பண்ண, பார்ட்டியில் லைட்டான "கிக்'குடன் லைட்டான "லைட்'டுடன் ஆணும் பெண்ணும் கை கோர்த்து ஆடுவார்களே... அந்த டான்ஸ் அப்ரோச் தேள்களிடமும் உண்டு.
ஆண் தேள் பல இடங்களில் அலைந்து திரிந்து, தனக்கான செக்ஸ் பார்ட்னரை முதலில் "சைட்' அடிக்கும். உடம்பை ஆட்டி குறும்பு செய்யும். இதில் பெண் தேள் கவரப்பட்டால், பதிலுக்கு சமிக்ஞை செய்யும். உடனே ஆண் தேள்... "என்னம்மா பண்ணலாம்... டிஸ்கோவுக்குப் போகலாம்' என்பது போல் ஜாடையில் கேட்க...
"வேர் இஸ் த பார்ட்டி -அட இங்ஙனக்குள்ள யே பார்ட்டி' என ரெண்டுபேரும் முடிவு செய்ததும், இருவரும் தங்களின் இரு முன்புற கிடுக்கிகளை இணைத்துக்கொண்டு ஆடுவார்கள். ஆட்டம் ரொம்ப சூடுபிடிச்சதும் ரெண்டு தேள்களும்... லிப்-லாக்; இங்கிலீஷ் கிஸ், உதட்டு முத்தம் கொடுத்துக்கும். இந்த உதட்டு முத்தம் ரெண்டு நிமிஷத்திலிந்து ரெண்டு மணி நேரம் கூட நீடிக்குமாம்.
இந்த விஷயத்தில் தேள்களைப் பார்த்து "ஆமா... இவரு பெரிய டுபுக்கு; இவரு பெரிய கொடுக்கு' என்றெல்லாம் கேட்டுவிட முடியாது.
கில்லாடிங்கதான்...!
அதனால்தான் காமக் கலைக்கோயில் பொக்கிஷமாகச் சொல்லப்படும் கஜுராகோ கோயிலில் சில பெண் சிலைகளின் தொடை மீது தேள் ஊர்ந்து செல்வது போல குறியீட்டுச் சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன.
அல்லது ஒருவேளை...
-காமவிடாய்
பட்டா ருயிரைத் திருகிப் பருகி பசிதணிக்கும்
கட்டாரி வேல்விழி யார்வலை
என அருணகிரிநாதர் பாடியது போல... "காமவசப்பட்டவர்களின் உயிரைத் திருகிப் பருகி, பசி தணிக்கும் கூர்மையான கட்டாரி போன்ற வேல்களைப் போன்ற கண்களையுடைய பெண்கள் விரித்த வலை'யை நோக்கி இந்த தேள் செல்கிறதோ என்னவோ?
"இச்சுத்தா... இச்சுத்தா...' என "உம்மா' தந்து முடிந்ததுமே, க்ளைமாக்ஸ்தான். பெண் தேளின் பிறப்புறுப்பில் உயிர் நீரைப் பீய்ச்சிவிட்டு ரிலாக்ஸ் செய்யும் ஆண் தேள். ஓரிரு வகை ஆண் தேள்கள் மட்டும் இந்திரியத்தை பீய்ச்சியதும்....
"கொடுக்க காணோம்; கிடுக்கியக் காணோம்'னு திரும்பிப் பார்க்காம ஓடிவிடும். இல்லேன்னா அங்கே ஒரு பயங்கரம் நிகழும்.
நமக்குத்தான் அது பயங்கரம், செந்தோள்களோட "செக்ஸ் வாழ்க்கை இதெல்லாம் சாதாரணமப்பாதான்!'
அது என்னன்னா... "ஜாலி' முடிஞ்சதும் ஆண் தேளை காலிபண்ணிடும் பெண் தேள்.
1994ஆம் ஆண்டுவாக்கில் நடந்த விஷயம்.
அண்ணன் நக்கீரன் கோபாலை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் நக்கீரன் வெளியிடும் "இனிய உதயம்' மாத இதழ் அலுவலகம் சென்னை, ராயப்பேட்டை மீர்பக்ஷி அலி தெருவில் இருந்தது. பொறுப்பாசிரியர் வேம்பத்தூர் லலிதா என்ற தர்மராஜன் சாரும், உதவி ஆசிரியரான நானும் மட்டும்தான் அலுவலகத்தில் இருப்போம்.
ஒருநாள்... தேள் பற்றிய பேச்சு வந்த போது, வேம்பத்தூர் லலிதா சொன்னார்..
செந்தேள்...
வந்தேள்...
செய்தேள்...
செத்தேள்!