காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் கடந்த ஒரு வாரமாக பெய்யும் கனமழையால் கர்நாடகாவிலிருந்து காவிரியில் தண்ணீர் பெருக்கெடுத்து பாய்ந்து வருகிறது. அதனால் மேட்டூர் அணை திறப்பு சாத்தியமானது. மேட்டூர் தண்ணீர் 3 நாட்களில் கல்லணைக்கு வந்து, அது திறக்கப்படும்போதுதான் டெல்டா மாவட் டங்களில் விவசாயம் செய்ய முடியும். ஆனால் கல்லணை திறந்தால் விவசாயத்திற்கு தண்ணீர் போகுமா என்பதுதான் கேள்விக்குறியாக உள்ளது. அரசாங்கத்தின் பொதுப்பணித்துறை அதிகாரிகளின் அலட்சியத்தால் கல்லணைக் கால்வாய்கள் அத்தனையும் உடைந்து நாசமாகி கிடக்கின்றன. கஜா புயலில் விழுந்த மரங்களைக் கூட வெட்டி அகற்றவில்லை. பல இடங்களில் பாலம் கட்டும் பணிகள் நடக்கின்றன. இதனால் கடந்த ஆண்டைப் போலவே இந்த வருடமும் கொள்ளிடம் வழியாக கடலுக்குப் போய் வீணாகும் நிலை உருவாகி உள்ளது.
கடந்த ஆண்டு 100 டி.எம்.சி. தண்ணீரை சரியான நீர்மேலாண்மை இன்றி வீணடித்த அரசாங்கமும், அதிகாரிகளும் திருந்தினார்களா என்றால் இல்லை.. தஞ்சையிலிருந்து நாகுடி வரை செல்லும் பிரதான கால்வாயில் இடை யாத்தி உள்ளிட்ட பல இடங்களில் பாலம் கட்டுவதாக ஆற்றை அடைத்து வைத் துக்கொண்டு பணிகள் நடக்கின்றன. கடந்த ஆண்டு உடைப்பு ஏற்பட்ட பல இடங்களில் தற்காலிகமாக அடுக்கப்பட்ட மணல் மூட்டைகளே இன்றும் உள்ளன. குடிமராமத்து என்ற பெயரில் பெரிய ஏரிகளின் மடைகள் உடைபட்டுக் கிடப்பதால் வரும் தண்ணீரை ஏரிகளில் சேமிக்கவும் முடியாது. தண்ணீர் செல்லக்கூடிய கிளை வாய்க்கால்களில் கஜா புயலுக்கு ஒடிந்து சாய்ந்த அத்தனை மரங்களும் அப்படியே கிடக்கின்றன. மரங்கள் சாய்ந்து மண் சரிந்த பகுதிகளும் சீரமைக்கப்படவில்லை.
அதேபோல கிளைவாய்க்கால்கள் தூர்வார ரூ. 50 கோடி வரை ரகசியமாக நிதி ஒதுக்கப்பட்டு அந்த தொகைக்கு எந்த மராமத்துப் பணிகளும் செய்யாமல், பணிகளை எடுத்தவர்களிடம் தண்ணீர் வந்த பிறகு வொர்க் ஆர்டர் தருவதாக காலங்கடத்தி வருகிறார்கள் அதிகாரிகள். அதாவது தண்ணீர் வந்துவிட்டால் வேலை செய்யாமலேயே பில் போட திட்டம் போல. இப்படி ஒட்டுமொத்தமாக கல்லணைக் கால்வாய், வாய்க்கால்கள் சீரழிந்து கிடக்கின்றன.
இதுகுறித்து நம்மிடம் பேசிய விவசாயி திருஞானம்... ""ஒவ்வொரு வருசமும் தண்ணீர் வரும்னு காத்திருந்து காத்திருந்து கடைசி நேரத்தில் மொத்தமா திறந்துவிட்டு விவசாயம் செய்யவிடாமல் செய்றாங்க. போர்க்கால அடிப்படையில் ஆற்றுக் குள் நடக்கும் பணிகளை உடனே முடிக்க வேண்டும். இல்லை என்றால் தண்ணீர் வீணாகத்தான் போகும்'' என்றார்.
தஞ்சை மாவட்ட விவசாயிகள் சங்கம் சாமி.நடராஜன்... ""கடந்த ஆண்டு இதேபோல அதிகமான தண்ணீர் வந்தது. ஆனா பாசனத்துக்கு வரல. கடைமடை விவசாயிகள் கடைசி வரை போராடிக்கிட்டேதான் இருந் தாங்க. இந்த வருசம் வாய்க்கால் மராமத்துக்கு ரூ. 24 கோடி ஒதுக்கி யாச்சு. ஆனா எங்கேயும் ஒரு வேலையும் தொடங்கல. பல ஊர்கள்ல இளைஞர்கள் வெட்டின வாய்க்காலை இந்த வருசம் அதிகாரிகள் வெட்டியதா பில் போடச் சொல்லி விரட்டுறாங்களாம். கடந்த வருடம் கல்விராயன்பேட்டையில் பெரிய உடைப்பு ஏற்பட்டது. அந்த இடத்தில் இந்த ஆகஸ்ட் 10-ந் தேதிக்குப் பிறகுதான் காங்கிரீட் போட்டிருக்காங்க. அது எப்படி தாங்கும்.
அதேபோல மேலஉளூர்கிட்ட உடைப்பு ஏற்பட்டது. அந்த இடத்தில் கிராவல் கொட்டி மணல் மூட்டை அடுக்கினதோடு சரி... மணல் மூட்டைகளும் கிழிஞ்சுருச்சு. அதனால் திறக்கப்படும் தண்ணீரை டெல்டா மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுமார் 1200 பெரிய ஏரிகளில் தண்ணீரை நிரப்பி பாதுகாக்க நடவடிக்கை எடுக்கணும். அப்பதான் தண்ணீர் வீணாகாமல் நிலத்தடி நீரையாவது பாதுகாக்க முடியும். உடனே தண்ணீர் திறக்கப்படவேண்டிய நிலை உள்ளதால கடந்த ஆண்டுக்கான காப்பீட்டுத் தொகையை அரசாங்கம் பெற்றுக் கொடுப்பதோட, நிபந்தனை இல்லாம விவசாயக் கடன் கொடுக்கணும்'' என்றார்.
திருவோணம் வட்டார விவசாயிகள் சங்கம் சின்னத்துரை... ""பேராவூரணிப் பகுதி இளைஞர்கள் சொந்த செலவில் குளம், ஏரிகள் தூர்வாரி வருகிறார்கள். அந்த ஏரி, குளங்களில் தண்ணீர் நிரப்பவாவது செய்யணும். குடிமராமத்துப் பணிகள் என்ற பெயரில் தற்போது ஊரெங்கும் உள்ள குளங்களில் குமிழி, மடைகள் உடைக்கப்பட்டு கிடக்கின்றன. அதிகாரிகளிடம் கேட்டால், "40 சதவீதம் வேலை முடிந்திருக்கிறது. மாற்று வழி செய்வோம்' என்கிறார்கள். இந்த அரசாங்கம் எதிலும் மெத்தனம் காட்டுவதாலதான் ஒவ்வொரு முறையும் தண்ணீர் வீணாகி கடலில் கலக்கிறது.
இந்த நிலையில் நாகுடியில் அவசரமாக கூடிய விவசாயிகள்... "எங்களுக்கு முறையாக வழங்க வேண்டிய அளவைக் குறைக்காமல் தண்ணீர் கொடுக்கவேண்டும்' என்று தீர்மானம் நிறைவேற்றினார்கள்.
காவிரியில் தண்ணீர் வந்தால் மேட்டூருக்கு வரும். மேட்டூர் அணையைத் திறந்தால் கல்லணைக்கு வரும். கல்லணையைத் திறந்தால் தண்ணீர் எங்கே போகும்?
-இரா.பகத்சிங்