ஒன்றிய அரசின் கொடூர அடக்குமுறைச் சட்டமான உபாவால் (UAPA) சிறையிலடைக்கப்பட்டு, தனது முதுமையான சூழலில் ஜாமீன் மறுக்கப்பட்டு, உரிய முறையில் சிகிச்சை அளிப்பதும் மறுக்கப்பட்டு, இறுதிவரை போராடி உயிரிழந்தார் சமூகச் செயற்பாட்டாளர் ஸ்டேன் சாமி. அவரை நேரில் சந்தித்து உரையாடியுள்ள தேசிய மனித உரிமை அமைப்புகளின் கூட்டமைப்பு தேசியத் தலைவர் பேராசிரியர் அ.மார்க்ஸ், அவர் குறித்த நினைவுகளையும், ஸ்டென் சாமிக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளையும் நம்மோடு பகிர்ந்துகொள்கிறார்.
"ஜார்க்கண்ட் மக்களுக்காக வாழ்நாள் முழுக்கப் போராடிய ஸ்டேன் சாமி நம் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். இவர் பிறந்த கிராமம், தஞ்சாவூருக்கும் திருச்சிக்குமிடையே பூதலூர் அருகே இருக்கிறது. அவர் கிட்டத்தட்ட 40 ஆண்டு காலமாக ஜார்க்கண்ட் மாநிலத்தில், அங்குள்ள ஆதிவாசி மக்களுக்காகப் போராடி வந்தவர். அம்மாநிலத்திலுள்ள ஆதிவாசி மக்களின் நிலத்தை, வாழ்விடத்தை அவர்களிடமிருந்து பறித்து, கார்ப்ப ரேட் நிறுவனங்களிடம் கொடுப்பதற்காக, அம்மக்களுக் கெதிராக அரசு அதிகாரம் தவறாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இவ்விவகாரத்தில் உரிமைக்குரல் எழுப்பும் காரணத்துக்காகவே, சராசரியாக நாளொன்றுக்கு ஒரு ஆதிவாசி இனத்தைச் சேர்ந்தவர் கைது செய்யப்படுகிறார். அந்த அளவுக்கு கொடுமையான சூழல் அங்கே நிலவி வரு கிறது. அந்த ஆதிவாசி மக்களின் உரிமைக்காக அங்கேயே அவர்களோடு தங்கியிருந்து போராடி வந்தவர் இவர்.
ஐந்தாண்டுகளுக்கு முன் நான் அவரைச் சந்தித்த போது பல்வேறு விஷயங்களை என்னோடு ஆங்கிலத்தில் பகிர்ந்துவந்தார். இறுதியாக அவரிடம், "அவரது சொந்த ஊர் எதுவென்று கேட்டேன். அதற்கு, தமிழ்நாட்டிலுள்ள ஊரை அவர் சொன்னதும் எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. ஜார்க்கண்டிலேயே பல காலமாகத் தங்கியிருப்பதால் தமிழ் மொழிகூட தனக்கு பெரும்பாலும் மறந்துவிட்டதாகக் கூறினார். அவரை மத்தியிலுள்ள அரசாங்கம் கொடுமையான உபா சட்டத்தில் கைது செய்து சிறையிலடைத்தது. அவரை மட்டுமல்லாது அவரோடு சேர்த்து 18 பேர் வரை கைது செய்தது. அவர்கள் அனை வருமே சமூக சிந்தனையோடு செயல்பட்டு வரும் சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள், செயற்பாட் டாளர்கள். அவர்களில் அம்பேத்கரின் பேரனும் அடக்கம். அவர்கள் அனைவரும் அமைதி வழியில் போராடுபவர்கள். தங்கள் போராட்டத்தில் எவ்வித ஆயுதத்தையும் பயன்படுத்தியவர்கள் கிடையாது.
ஸ்டேன் சாமிக்கு முதுமை காரணமாக பார்க்கின்சன் என்ற உடல் நடுக்கவாத நோய் தாக்கியிருந்தது. அவரால் ஒரு டம்ளரைக் கையால் பிடித்து தூக்கி தண்ணீர் குடிக்கக்கூட முடியாது. எனவே அவருக்கு தண்ணீர் குடிப்பதற்கு வசதியாக ஸ்ட்ரா கொடுக்கும்படி கேட்கப்பட்டது. ஆனால் ஸ்ட்ரா கொடுப்பதற்குக்கூட மனிதாபிமானமின்றி மறுத்தார்கள். இதற்கு இந்தியா முழுக்க கடும் எதிர்ப்பு கிளம்பி, அனைவரும் அவருக்கு ஸ்ட்ரா அனுப்பத் தொடங்கினார்கள். அந்த ஸ்ட்ரா அவரது கைக்குக் கிடைக்காது என்றாலும், வலுக்கும் எதிர்ப்பைப் புரிந்துகொண்ட பின்னர் ஸ்ட்ரா வழங்கினார்கள்.
அவருடைய உடல்நிலை மிகவும் மோசமாக இருந்ததால் அவருக்கு உயிர் காக்கும் சிகிச்சையளிப்பதற்காக மனித உரிமைகள் ஆணையத்தின் சார்பாக ஜாமீன் கோரப்பட்டது. அதற்கும் நீதிமன்றம் இசைவு தெரிவிக்காமல், அதுகுறித்த விசாரணை நடக்குமென்று தெரிவித்த நாளில், அந்த விசாரணை நடக்குமுன்பே, அவருக்கு சிகிச்சையளிக்கப்படாத நிலையில் உயிரிழந்துள்ளார். இந்த அளவுக்கு அவருக்கு கொடுமை நடந்துள்ளது. இவர் வயதானவர் என்பது மாத்திரமல்ல, எவ்வித வன்முறைக்கும் போகாத போராட்டக்காரர். இவரது உயிரிழப் பில் முதலும் கடைசியுமாக குற்றம்சாட்டப்பட வேண்டியது அரசாங்கத்தைத்தான். ஜாமீனில்கூட வரமுடியாதபடியான கடுமையான சட்டப்பிரிவால் இவரை சிறைக்குள் தள்ளியிருப்பது அரசாங்கம் தான். இச்சட்டத்தில் மேலும் மேலும் கடுமையான பிரிவுகளைச் சேர்த்து, உலகத்திலேயே மிகக்கொடூரமான சட்டமாக மாற்றியுள்ளார்கள்.
ஸ்டேன் சாமிக்கு எங்கள் கூட்டமைப்பின் சார்பாக மூன்று மாதங்களுக்கு முன்புதான் அவரது மக்கள் நலப்போராட்டத்தைப் பாராட்டும்விதமாக பரிசு கொடுத்தோம். அதற்காக அவருக்கு வழங்கப்பட்ட பரிசுத்தொகை யையும்கூட சிறைச்சாலைக் கைதிகளுக்கே அளிக்கும்படி கூறிவிட்டார். இந்த பீமா கொரேகான் சம்பவ வழக்கில் கைது செய்யப்பட்ட சமூக ஆர்வலரும், கவிஞருமான வரவர ராவும் நோய் வாய்ப்பட்ட நிலையில்தான் சிறையிலிருந்தார். அவருக்கும் ஜாமீன் வழங்காமல் தொடர்ந்து மறுத்துவந்தார்கள். இறுதியில் அவரது உடல்நிலை மோசமான நிலையில் நீதிமன்றம் ஜாமீன் வழங் கியது. ஸ்டேன் சாமியின் மரணத் துக்கு காரணமான அரசாங்கத்தை எங்களுடைய தேசிய மனித உரிமை அமைப்புகளின் கூட்டமைப்பின் சார்பாக கடுமையாகக் கண்டிக் கிறோம்'' என்றார்.
கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாகவும், எளிய மக்களின் வாழ்வாதார உரிமைகளுக்கு எதிராக வும் செயல்படும் அதிகார மட்டத்தை எதிர்த்து அற வழியில் போராடும் எளிய போராட்டக்காரர்களை கடுமையான சட்டங்களைப் பாய்ச்சி, ஒடுக்க நினைப்பது சர்வாதிகாரத் தன்மையாகும். அந்த போக்கை மாற்றிக்கொண்டு, இந்த அரசாங்கம், அனைத்து வர்க்கத்தைச் சேர்ந்த மக்களின் நலனுக்காகவும், வாழ்வாதார உரிமைகளைக் காப்பதற்காகவும் செயல்படுவதே ஜனநாயக அரசின் வெளிப்பாடாகும். இதுவே ஜனநாயகத்தை விரும்பும் இந்தியர்கள் அனைவரின் எதிர் பார்ப்பும், எண்ணமுமாகும்.