தமிழகத்தில் சில ஆண்டுகளுக்கு முன்புவரை கிடையில் நிற்கும் செம்மறி ஆடுகளை மொத்தம் மொத்தமாக திருடிச் செல்வது வழக்கமாக இருந்தது. டெல்டா மாவட்டங்களில் இது போன்ற சம்பவங்கள் ஏராளம் நடந்து ஓய்ந்திருக்கிறது. ஆனால் கொரோனா ஊரடங்கு காலத்திலிருந்து புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் கார், பைக்குகளில் சென்று ஒன்று, இரண்டு ஆடுகளை திருடிச் செல்லத் தொடங்கினர்.
தீபாவளிக்கு முதல் நாள் இரவில் மழையோடு புதுக்கோட்டை கீரமங்க லம் காவல் சரகம் குளமங்கலம் கிராமத்தில் நீதிராஜன் என்பவரின் 13 ஆடுகளையும் சுப்பிரமணியன் என்பவரின் 20 ஆடுகளையும் என 33 ஆடு களையும் ஒரே நேரத்தில் சரக்கு வாகனத்தில் தூக்கிச் சென்றுள்ளனர். கடந்த வாரம் வடகாடு காவல் சரகம் கருக்காகுறிச்சியில் ஆடு திருடும்போது இருவரை பொதுமக்கள் பிடித்து வைத் திருந்தனர். தஞ்சாவூர் மாவட்டத்தின் பல கிராமங்களிலும் ஆடு திருடிய கும்பல் பிடிபட்டபோது, அறந்தாங்கி அருகே எட்டியத்தளி கிராமத்தில் தங்கி இருக்கும் ஒருவருக்காக புளிச்சங்காடு கைக்காட்டியை சேர்ந்தவர்களுடன் ஆடுகள் திருடுவதாக பிடிபட்டவர்கள் கூறியுள்ளனர். மேலும் ஆடுகளை திருடிக்கொண்டு வேகமாகச் செல்ல கூகுள் மேப் பயன்படுத்துவோம் என்றும் கூறியுள்ளனர்.
பேராவூரணி காவல் நிலையத்திற்கு டி.எஸ்.பி. வருகிறார் என்று ஆடு திருடர்கள் மீது நட வடிக்கை எடுக்காமல் இழுத்தடிக்க, இந்த தகவலை தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வரை கொண்டுபோன பிறகே, திருடர்களை சிறைக்கு அனுப்பியுள்ளனர். போலீசின் அலட்சியத்தின் பலன்தான் தற்போது ஆடு திருடர்களாலேயே ஒரு எஸ்.எஸ்.ஐ. வெட்டி படுகொலை செய்யப் பட்டுள்ளார்.
திருச்சி மாவட்டம் நவல் பட்டு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதனும், ஏட்டு சித்திரவேலுவும் சனிக்கிழமை யன்று தனித்தனி பைக்குகளில் ரோந்து சென்றுள்ளனர். அதி காலை 3 மணிக்கு பூளாங்குளத்துப் பட்டி கிராமத்தில் 2 பைக்குகளில் 4 பேர் வந்ததைப் பார்த்து நிறுத்தியுள்ளனர், பைக்குகளை அவர்கள் நிறுத்தவில்லை.
ஒரு பைக்கில் ஆடு இருப் பதைப் பார்த்து எஸ்.எஸ்.ஐ.யும் ஏட்டுவும் தங்கள் பைக்குகளில் விரட்ட... முன்னால் சென்ற இரு பைக்குகளும் வெவ்வேறு சாலை களில் திரும்பிவிட, இரு போலீசா ரும் ஒரு பைக் போன திசையில் விரட்டிச்செல்ல... புதுக்கோட்டை மாவட்ட எல்லை தொட்டுவிடுகிறது. ஏட்டு வேகமாக ஓட்டமுடி யாமல் பின்தங்கிவிட, எஸ்.எஸ்.ஐ. பூமிநாதன் சுமார் 25 கி.மீ. வரை விரட்டிச் செல்கிறார்.
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் காவல் சரகம் பள்ளத்துப்பட்டி கிராமத்தில் ரயில்வே சுரங்கப் பாதையில் தண்ணீர் நிறைந்திருந்ததால், அதன்பிறகு செல்ல முடியாமல் தவித்த இருவரை யும் பிடித்து வைத்துக்கொண்டு, தனக்கு பின்னால் வந்த ஏட்டு சித்திரவேலுக்கு தகவல் கொடுக்க... சரி யான வழி தெரியாமல் தடுமாறி நிற்க, தொடர்ந்து அதே பகுதியில் வசிக்கும் மற்றொரு ஏட்டு சேகருக்கும் செல்போனில் தகவல் சொல்லிக்கொண்டிருக்கும்போதே திருடர்களுடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டு சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது.
சுமார் 3 மணிக்கு ஏட்டு சித்திரவேல் வந்து பார்க்கும்போது பூமிநாதன் எஸ்.எஸ்.ஐ. 5 வெட்டுக் காயங்களுடன் காக்கிச்சட்டை ரத்தக்கறையுடன் சடலமாகக் கிடந்துள்ளார். இதனைப் பார்த்து ஏட்டு கதறிக்கொண்டே கீரனூர் காவல்நிலை யத்திற்கும் நவல்பட்டு காவல் நிலையத்திற்கும் தகவல் கொடுத்துவிட்டு நிற்கும்போது, ஏட்டு சேகரும் வந்து சேர்ந்துள்ளார். ரத்தக்கறை அரு கிலுள்ள ரயில் தண்டவாளத்திலும் படிந்துள்ள தால் கொலையாளிகள் தடை செய்யப்பட்ட பகுதியை கடந்து சென்றிருக்க வேண்டும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
சம்பவ இடத்திற்கு திருச்சி மண்டல ஐ.ஜி. பாலகிருஷ்ணன் உள்ளிட்ட காவல் துறையினர் வந்து பார்வையிட்ட பிறகு சடலம் திருச்சி மருத் துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு போலிஸ் மரியாதையுடன் உடல் அடக்கம் செய்யப்பட் டது. 4 தனிப்படைகள் அமைத்து கொலையாளி களைத் தேடும் பணி தொடங்கியது.
பூமிநாதனைக் கொன்றவர்கள் ஆடு திருடும் கும்பல் என்றால், ஆடுகளைக் கட்டியிருக் கும் கயிறுகளை அறுக்க, சிறிய கத்திகளையே பயன்படுத்தியிருப்பார்கள். ஆனால் எஸ்.எஸ்.ஐ.யை கொன்றவர்கள் வெட்டரி வாளில் வெட்டியுள்ளதைப் பார்க்கும்போது இவர்கள் கூலிப்படையை சேர்ந்தவர்களாகவோ அல்லது பெரிய குற்றங்களில் ஈடுபட்டு வரும் நபர்களாகவோ இருக்கலாம் என கருதப்படுகிறது. காவல்துறைக்குப் பொறுப்பு வகிக்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பலியான எஸ்.எஸ்.ஐ. குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிவாரணமும் அரசு வேலையும் வழங்கியிருக்கிறார்.
ஆடு திருடர்களால் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பூமிநாதன் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் 10 வயது சிறுவன் உள்பட 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். திருச்சி நவல்பட்டு காவல்நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன், ஆடு திருடர்களை இரு சக்கர வாகனத்தில் விரட்டி வந்தபோது புதுக் கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே பள்ளத்துப்பட்டியில் ஞாயிற்றுக் கிழமை அதிகாலை வெட்டிக் கொல்லப்பட்டார். இச்சம்பவத்தில் குற்றவாளிகளைக் கைதுசெய்ய 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்ட எல்லைப் பகுதிகளில் பூமிநாதனுக்கு அருகே இருந்த செல்போன்கள் பற்றிய விவரங்களை செல்போன் சிக்னல் வழி போலீஸார் ஆய்வு செய்தனர். இதில் தஞ்சை மாவட்டம் கல்லணை அருகேயுள்ள தோகூர் பகுதியைச் சேர்ந்த சிலரின் எண்களை தனிப்படையினர் நேரில் விசாரணை நடத்தினர். இதன்படி 10 வயது சிறுவன் உள்பட 4. பேரை போலீஸார் நவம்பர் 22-ஆம் தேதி அதிகாலை சுற்றிவளைத்து கைது செய்தனர். இவர்கள் அனைவருமே சிறார் மற்றும் இளம் குற்றவாளிகள். அவர்களின் இரு சக்கர வாகனங்களும் கொலை செய்யப் பயன்படுத்திய கத்திகளையும் போலீஸார் கைப்பற்றினர். விசாரணையில் கொரோனா காலத்தில் பள்ளிக்கூடம் இல்லாதபோது இப்படி ஆடு திருட அழைத்துச் செல்வார்கள் என்று சிறுவர்கள் கூறியுள்ளனர். மேலும் ஒரு ஆடு திருடினால் 200, 300 ரூபாய் தருவார்கள், நல்ல சாப்பாடு வாங்கிக் கொடுப்பாங்க. அதனால திருடப் போவோம் என்று சொன்ன சிறுவர்கள், திருடும் ஆடுகளை கறிக்கடைகாரங்களிடம் விற்பது பற்றியும் கூறியுள்ளனர்.
"போலீசார் இவ்வளவு தூரம் விரட்டி வரமாட்டாங்கனுதான் வேகமா வந்தோம். ஆனால் அவரும் எங்களை விடாம விரட்டி வந் துட்டார். சுரங்கப் பாதையில் போகமுடியாம நின்றதும் பிடித்துக் கொண்டு கூடவந்த போலீஸ்காரருக்கு போன் செஞ்சார். அப்பறம்தான் பாதுகாப்புக்காக வச்சிருந்த அரிவாளை எடுத்து வெட்டி னோம். அவரு கீழ விழுந்த தும் அவரோட வாக்கி டாக்கி, செல்போனை எடுத்து உடைச்சு தண்ணிக் குள்ள வீசிட்டோம்' என்று கூறியுள்ளனர்.
இவர்களுக்கெல்லாம் குருவாக இருந்து சிறுவர் கள் உள்பட பல ஆடு திருட்டுக் கும்பல்களை உருவாக்கி ஆடுகளை வாங்கும் நபர்களையும் கைதுசெய்யும் போதுதான் முழு உண்மை களும் வெளிவரும்.
ஆடு திருட்டு போலவே கஞ்சா கடத்த லுக்கும் 14 வயதில் இருந்து 20 வயதுக்குள் உள்ள சிறுவர்களுக்கு முதலில் கஞ்சா போதையை ஏற்றி அடிமையாக்கி, பிறகு அவர்களையே கஞ்சா கடத்தவும் பயன்படுத்தும் கும்பல் புதுக்கோட்டை, தஞ்சை மாவட்டத்தில் உள்ளனர். கஞ்சா கடத்தலுக் காக வெளிமாவட்டங்களில் மோட்டார் சைக்கிள்களை திருடிவந்து சிலமுறை கடத்தலுக்கு பயன்படுத்தி விட்டு, பழைய இரும்பு கடைகளில் விற்பதும் வழக்கமாக உள்ளது. இந்த விபரங்கள் போலிசாருக்கு தெரிந்தும்... ஏனோ கண்டு கொள்ளாததால் மேலும், மேலும் சிறார் குற்றவாளி கள் உருவாகிக்கொண்டே இருக்கிறார்கள். அவர்களை ரவுடிகள் இயக்குகிறார்கள்.
சட்டம்-ஒழுங்கு நிலவரம் முதல்வருக்கு சவால் விடத் தொடங்கியுள்ளது.