நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்கான பணிகள் தி.மு.க.வில் வேகமெடுத்துள்ளன. குறிப்பாக, கூட்டணி கட்சிகளுடனான தொகுதிப் பங்கீடுகளை முடிப்பதற்கான பேச்சுவார்த்தை, மாவட்ட வாரியாக கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசனை, தேர்தல் அறிக்கை தயாரிப்புப் பணிகள் என தி.மு.க.வில் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், தி.மு.க. தலைவர் ஸ்டாலினிடம் ஒரு கோரிக்கையை வைத்திருக்கிறார் சோனியா காந்தி. அதனை ஸ்டாலின் நிறைவேற்று வாரா என்கிற எதிர்பார்ப்பு காங்கிரஸ் மேலிடத் தலைவர்களிடம் அதிகரித்தபடி இருக்கிறது.
கடந்த வாரம், காங்கிரசுக்குரிய தொகுதிகளை முடிவு செய்வதற்காக அக்கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தியது டி.ஆர்.பாலு தலைமையிலான தி.மு.க.வின் பேச்சுவார்த்தைக் குழு. இந்த பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் முகுல்வாஸ்னிக், முன்னாள் மத்திய அமைச்சர் சல்மான்குர்ஷித், தமிழக காங்கிரசின் மேலிட பொறுப்பாளர் அஜோய்குமார், மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பேச்சுவார்த்தை சுமார் 45 நிமிடங் கள் நீடித்தது. முதல் கட்டப் பேச்சுவார்த்தை சுமுகமாக இருந்ததாக காங்கிரஸ் தலைவர்கள் கூறினாலும், சுமுகமாக நடக்கவில்லை. இதனை சோனியா, ராகுல், மல்லிகார்ஜுனகார்கே ஆகி யோருக்கு பாஸ் ஆன் செய்தார் முகுல்வாஸ்னிக்.
பேச்சுவார்த்தையில் என்னதான் நடந்தது என காங்கிரஸ் தரப்பில் நாம் விசாரித்தபோது, ‘"கடந்த தேர்தலில் பாண்டிச்சேரி உட்பட 10 சீட் காங்கிரசுக்கு ஒதுக்கியது தி.மு.க. இந்தமுறை கூடுதலாக 5 சீட்டுகள் பெறவேண்டும் என முடிவு செய்தே பேச்சுவார்த்தைக்கு எங்கள் தலைவர்கள் சென்றனர். தி.மு.க.வின் வரவேற்பும் உபசரிப்பும் நன்றாகவே இருந்தது.
பேச்சுவார்த்தையைத் துவக்கியதும், இந்த முறை 40 தொகுதிகளிலும் நம் கூட்டணி ஜெயிக்க வேண்டும். நம் கூட்டணி பலமாக இருக்கிறது. அதனால் வேட்பாளர்களை சரியாக தேர்வு செய்ய வேண்டும். பிரச்சாரங்களில் அ.தி.மு.க., பா.ஜ.க.வை எதிர்கொள்வது எப்படி என்றெல்லாம் விவரித்தார் டி.ஆர்.பாலு.
இதனையடுத்து, சீட் ஷேரிங் குறித்து விவாதிக்கப்பட்டபோது, கடந்த 2019-ல் எங்களுக்கு 10 சீட் ஒதுக்கினீர்கள். 9 இடங்களில் ஜெயித் துள்ளோம். கூட்டணி வலிமையாக இருப்பதற்கு காங்கிரசும் முக்கிய காரணம். இந்தமுறை கூடுதல் சீட்டுகளில் காங்கிரஸ் போட்டியிட விரும்புவதால், கூடுதலாக 4 சீட் என 14 இடங்கள் வேண்டும் என வெளிப்படுத்தினார் முகுல்வாஸ்னிக்.
அதனை மறுக்கும் விதத்தில் பேசிய டி.ஆர். பாலு, கூட்டணியில் சில கட்சிகள் வரவிருக்கிறது. அவர்களுக்கும் சீட் ஒதுக்கவேண்டும். அதனால் காங்கிரஸ் தனது சீட்டுகளை கொஞ்சம் குறைத்துக்கொள்ள வேண்டும். ஆக, காங்கிரசுக்கு எங்களால் 4 சீட்டுகள் தர முடியும் என்றிருக்கிறார்.
இதனைக்கேட்டு முகுல்வாஸ்னிக்கும் சல்மான் குர்ஷித்தும் அதிர்ச்சியடைந்தனர். உடனே சல்மான்குர்ஷித், கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் 45 இடங்களில் காங்கிரஸ் போட்டி யிட்டது. ஆனால், 2021 சட்டமன்ற தேர்தலின் பேச்சு வார்த்தையின்போது, பெரும்பான்மை பலத்துடன் தி.மு.க. ஆட்சியைப் பிடிக்க வேண்டுமானால் அதிக இடங்களில் போட்டியிட வேண்டும் என்ற காரணத்தைச் சொல்லி, காங்கிரசுக்கான இடங்களை 25 ஆக குறைத்தீர்கள். நியாயமான காரணமாக இருந்ததால் சீட் குறைக்கப்பட்டதை ஒப்புக்கொண்டோம்.
அதேபோல இப்போது நடக்கப்போவது பார்லிமெண்ட் தேர்தல். இதில் தேசிய கட்சியான காங்கிரஸ் அதிக இடங்களில் போட்டியிட்டு நிறைய இடங்களில் ஜெயித்தால் தானே மத்தியில் ஃபைட் பண்ண முடியும். காங்கிரஸ் ஜெயித்தாலும் அது தி.மு.க. ஜெயித்தது மாதிரி தானே. அதனால், காங்கிரசை கௌரவப்படுத்தும் வகையிலும், உங்களின் அளவுகோலின்படியும் எங்களுக்கு முந்தைய தேர்தலைவிட கூடுதல் இடங்களை ஒதுக்குங்கள். அதனால் 14 சீட்டுகள் நாங்கள் கேட்பது நியாயமானதுதான் என வலியுறுத்தினார்.
இதைக்கேட்டு அப் போது பேசிய பொன்முடி, "4 சீட் என்பது காங்கிரசுக்கு வின்னிங் சீட். அதுவே நீங்கள் கேட்கும் 14 சீட்டுகள் ஒதுக்கினால் உங்களுக்கு (காங்கிரசுக்கு) எதிராக அ.தி.மு.க. தான் போட்டியிடும். அக்கட்சியை எதிர்த்து உங்களால் தேர்தல் பணிகளை முன்னெடுக்க முடியாது. அதற்கான சக்தி காங்கிரஸுக்கு இல்லை. காங்கிரஸ் தோற்றுப்போனால் அது உங்களை மட்டும் பாதிப்பதில்லை. கூட்டணியையே பாதிக்கும். அதேசமயம், 4 இடங்களில் உங்களுக்கும் வலிமை இருக்கிறது; தி.மு.க. கூட்டணி பலமும் இருப்பதால் ஜெயித்துவிடலாம். அதனால் 4 என்பது நியாயமானது, ஒப்புக் கொள்ளுங்கள்'' என சொல்லியுள்ளார் பொன்முடி.
ஆனால், இதனை ஏற்க மறுத்த காங்கிரஸ் தலைவர்கள், "மேலிடத்தில் கலந்து பேசிவிட்டு சொல்கிறோம். மீண்டும் சந்திக்கலாம்' என தெரிவித்துவிட்டு இறுக்கமான முகத்துடன் அறிவாலயத்திலிருந்து கிளம்பினர். வெளிநாட்டிலிருந்து 8-ந் தேதி சென்னை திரும்புகிறார் மு.க. ஸ்டாலின். அவரிடம் பேசிவிட்டு காங்கிரசுடன் மீண்டும் பேச 9-ந் தேதியை தி.மு.க. முடிவு செய்திருக்கிறது.
அந்த பேச்சுவார்த்தையின் போதும் காங்கிரசுக்கான தொகுதிகள் முடிவாகுமா? என்பது தெரியவில்லை. இழுபறிதான் நீடிக்கும்''‘என்று விரிவாக நம்மிடம் சுட்டிக்காட்டினார்கள் காங்கிரஸ் தலைவர்களுக்கு நெருக்கமானவர்கள்.
அறிவாலய வட்டாரங்களில் விசாரித்தபோது, "காங்கிரசுக்கு இந்த முறை 6 தொகுதிகள் ஒதுக்க தி.மு.க. தலைமை தீர்மானித்துள்ளது. அதனால் 4 தொகுதிகளிலிருந்து பேச்சுவார்த்தை துவங்கியிருக் கிறது. தொகுதிப் பங்கீடுகள் எப்போதுமே இப்படித்தான் ஆரம்பிக்கும். 6 தொகுதி கள் என்பது மிகச் சரியானதுதான். அதாவது, 80 தொகுதிகள் கொண்ட உத்தரப் பிரதேசத்தில் காங்கிரசுக்கு 11 இடங்களை மட்டுமே தந்திருக்கிறது சமாஜ்வாதி கட்சி. அதனை காங்கிரசும் ஏற்றுக்கொண்டது.
ஆக, 80 தொகுதி களுக்கு 11 எனில், பாண்டிச்சேரி உட்பட 40 தொகுதிகள் கொண்ட தமிழகத் தில் காங்கிரசுக்கு ஐந்தரை தொகுதி கள்தானே சரியான பங்கீடு? ஐந்தரை தொகுதி என பங் கிட முடியாது என் பதால் 6 தொகுதி கள் தருவதற்கு தி.மு.க. முன்வரும். முதல்கட்டமாக 4 என ஆரம்பித் துள்ளது. அதனால், 80-க்கு 11-யை ஒப்புக்கொள்கிற காங்கிரஸ், 40-க்கு 6 என தி.மு.க. ஒதுக்கினால் அதனை ஏற்பதுதான் ஆரோக்கியம். முரண்டுபிடித்தால் காங்கிரசுக்குத் தான் நட்டம்''‘என்கிறார்கள் தி.மு.க.வினர்.
தி.மு.க.வுடனான பேச்சுவார்த்தையை அறிந்த ராகுல்காந்தி அப்-செட்டாகியிருக்கிறார். தம்மிடம் பேசிய முகுல்வாஸ்னிக்கிடம், ”"எப்போதுமே காங்கிரஸ்தான் தொகுதிகளை விட்டுக் கொடுக்க வேண்டுமா? மாநில கட்சிகள் விட்டுக் கொடுத்தால் என்ன? தி.மு.க.விடம் இதனை எதிர்பார்க்கவில்லை. இந்தியா கூட்டணியில் கொஞ்சம் கறாராக நாம் பேசினால், காங்கிரஸ் பெரியண்ணன் பாணியில் பேசுகிறது என மாநில கட்சிகள் குற்றம்சாட்டு கின்றன. ஆனால், தொகுதிப் பங்கீடுன்னு போனா நம்மிடம் மாநில கட்சிகள் கறாராக பேசுகின்றன. இது பெரியண்ணன் பாணியில்லையா?'' என ராகுல்காந்தி வருத்தப்பட்டதாக வடக்கிலிருந்து தகவல்கள் வருகின்றன.
தமிழக காங்கிரஸ் எம்.பி.க்கள் சிலரிடம் பேசிய போது, "பிரதமர் வேட்பாளராக ராகுல்காந்தியை அறிவியுங்கள் என ஸ்டாலினிடம் கோரிக்கை வைத் திருக்கிறார் சோனியாகாந்தி. ஸ்டாலின் அறிவித்தால் அதுவே இந்தியா கூட்டணியின் நிலைப்பாடாக வும் மாறுவதற்கு வாய்ப்பு உண்டு என சோனியா கருதுவதால் அந்த கோரிக்கையை வைத்துள்ளார்.
சோனியாவின் கோரிக்கையை ஸ்டாலின் நிறைவேற்றினால், காங்கிரசுக்கான சீட் எண்ணிக்கை குறைப்புக்கு சோனியா சம்மதிக்கக் கூடும். இல்லையெனில், கடந்த முறை ஒதுக்கிய 10 சீட்டுகளும் ஒதுக்கப்பட வேண்டும் என ராகுல் பிடிவாதமாக இருப்பார். ராகுல்தான் பிரதமர் வேட்பாளர் என ஸ்டாலின் அறிவித்தால் பாண்டிச்சேரியில் களமிறங்குவார் ராகுல்காந்தி. இதுதான் டெல்லியிலிருந்து எங்களுக்கு கிடைக்கும் ஸ்கூப் நியூஸ்''’என்கிறார்கள்.
இந்த நிலையில்,”இந்தமுறை தேர்தலில் போட்டியிட காங்கிரசில் இளைஞர்களுக்கும் புதியவர்களுக்கும் அதிக வாய்ப்புகள் வழங்கப் படும்” என்று அஜோய்குமாரும் கே.எஸ். அழகிரியும் சொல்லியிருப்பதை ஆரோக்கியமாகப் பார்க்கிறார்கள் காங்கிரஸ் கதர்சட்டையினர்.
காங்கிரஸ் கட்சியுடனான முதற்கட்ட பேச்சு வார்த்தை இப்படியிருக்க, தி.மு.க.வின் ஒருங் கிணைப்புக்குழு கூட்ட ஆலோசனைகளும் விறு விறுப்பாக நடந்து வருகிறது. கே.என்.நேரு தலைமை யில் ஒருங்கிணைப்புக்குழு அமைக்கப்பட்டாலும் இந்த கூட்டம் உதயநிதி தலைமையில்தான் நடக்கிறது.
முதல்நாள் கூட்டம் நடந்தபோது குழுவில் இருக்கும் மூத்த தலைவர்கள் இரண்டு பக்கத்திலும் இருக்க... நடுநாயகமாக அமர்ந்து மாவட்ட, ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகளிடம் ஆலோசித்தார் உதயநிதி. அவருக்கு போடப்பட்டிருந்த நாற்காலி அமைச்சர்களுக்கான நாற்காலிகளை விட வேறுபடுத்திக் காட்டப்பட்டிருந்தது. இது பொதுவெளியில் சர்ச்சையானதும், இரண்டாம் நாளிலிருந்து மிகச்சாதாரண நாற்காலியை தனக்குப் போடச்சொல்லி அதில் அமர்ந்துதான் நிர்வாகிகளிடம், தொகுதிகளின் கள நிலவரம் எப்படி இருக்கிறது? அமைச்சர்கள், மா.செ.க்கள் ஒத்துழைப்பு தருகிறார்களா? என விசாரித்தார் உதயநிதி ஸ்டாலின்.
அப்போது, "அமைச்சர்கள் எதுவும் கட்சிக் காரர்களுக்கு செய்வதில்லை, அதிகாரிகளின் அதி காரம்தான் அதிகமாக இருக்கிறது, கட்சிக்காரர்களை அதிகாரிகள் மதிப்பதில்லை' என்றெல்லாம் நிர்வாகிகள் புலம்பித்தள்ள... அதையெல்லாம் குறித்துக்கொண்டதுடன், அவர்களுக்கு சில நம்பிக்கைகளைக் கொடுத்துள்ளார் உதயநிதி. திமுகவின் தேர்தல் பணிகள் இப்படி சூடாகவும் வேகமாகவும் விறுவிறுப்பைக் கூட்டி வருகின்றன.