மூகத்தில் பின்தங்கிய பி.சி., எம்.பி.சி உள்ளிட்ட இதர பிற்படுத்தப் பட்டோருக்கு (ஓ.பி.சி) அகில இந்திய தொகுப்பில் வழங்கப்படும் மருத்துவச்சீட்டில் இட ஒதுக்கீடு வழங்காதது சமூக நீதிக்கு எதிரானது என தமிழகத்திலுள்ள அனைத்துக்கட்சிகளும் ஒன்றுதிரண்டு சட்டப்போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன.

neet

தமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீட்டில் ஓ.பி.சி. எனப்படும் இதர பிற் படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு சீட்கள் வழங்குவது போல அகில இந்திய தொகுப்பு சீட்களிலும் 50 சதவீத இட ஒதுக்கீட்டு அடிப்படையில் வழங்கவேண்டும் என்று தி.மு.க, அ.தி.மு.க, ம.தி.மு.க, சி.பி.எம் மற்றும் சி.பி.ஐ. உள்ளிட்ட கட்சிகளும் அரசியல் கட்சிகளும் மத்திய அரசின் சட்டத்திருத்தத்தின்படி வழங்கவேண்டிய 27 சதவீத இட ஒதுக்கீட்டின்படி சீட் வழங்கவேண்டும் என்று பா.ம.கவும் அகில இந்திய தொகுப்பிற்கு தமிழக அரசு மருத்துவ சீட்டுகளையே வழங்காமல் அவற்றை தமிழக மாணவர்களுக்கே இட ஒதுக்கீட்டின்படி வழங்கப்படவேண்டும் என்று வி.சி.கவும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.

இப்படி மூன்று வகையிலான சட்டப்போராட்டம் முன்னெடுக்கப்பட்ட நிலையில், இட ஒதுக்கீடு அடிப்படை உரிமை அல்ல. மனுதாரர்கள், உயர்நீதிமன்றத்தை நாடவேண்டும் என்று நிராகரித்து அனுப்பிவிட்டது உச்சநீதிமன்ற நீதிபதிகளான நாகேஸ்வரராவ், கிருஷ்ணா முராரி, ரவீந்திர பட் ஆகியோரைக்கொண்ட அமர்வு. இதனால், இதர பிற்படுத்தப் பட்ட மக்களுக்கு ஏற்படும் சமூக அநீதி என்ன? என்று நாம் விசாரித்தபோது... இளநிலை எம்.பி.பி.எஸ் மற்றும் பல் மருத்துவ (பி.டி.எஸ்) இடங்களில் 15 சதவீத சீட்டுகளையும் எம்.டி., எம்.எஸ்., பல் மருத்துவம் (எம்.டி.எஸ்) உள்ளிட்ட முதுநிலை மருத்துவ இடங்களில் 50 சதவீத சீட்டுகளையும் ஆல் இண்டியா கோட்டா எனப்படும் அகில இந்திய தொகுப்புக்கு தமிழக அரசு மருத்துவக்கல்லூரிகளிலிருந்து வழங்கப்படுகிறது. அந்த இடங்கள்கூட தமிழகத்தைச் சேர்ந்த ஓ.பி.சி. மாணவர்களுக்கு கிடைப்பதில்லை.

Advertisment

nrry

இந்த, சமூக அநீதிக்கு எதிராக பல வருடங்களாக போராட்டங்களை நடத்தியதோடு சமீபத்தில் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுத்த சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் செயலாளர் டாக்டர் சாந்தி நம்மிடம், ""முதுநிலை மருத்துவக் கல்விக்கான முதற்கட்ட கலந்தாய்வு, கடந்த 2020 ஏப்ரல் 24- ந்தேதி நடந்தது. இந்த வருடம் முது நிலை மருத்துவ படிப்பிற்கான அகில இந்திய தொகுப்பிற்கு அனைத்து மாநிலங்களிலுமுள்ள அரசுக்கல்லூரிகளிருந்து 8,833 இடங்களையும் மத்திய அரசுக்கல்லூரிகள் 717 இடங்களையும் அனைத்து மாநிலங்களிலு முள்ள நிகர்நிலை மருத்துவப் பல்கலைக்கழகங்கள் 3,688 இடங்களையும் வழங்குகின்றன. ஆகமொத்தம், 13 ஆயிரத்து 238 இடங்கள். இதில், மத்திய அரசின் மருத்துவக் கல்லூரிகளிலிருந்து வழங்கப்படும் 717 இடங்களில் மட்டுமே, இதர பிற்படுத்தப்பட் டோருக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டின்படி சீட்கள் வழங்கப்படுகிறது. ஆனால், அனைத்து மாநிலங்களிலிருந்தும் வழங்கப்பட்ட 8,833 இடங்களில் 27 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப் படவில்லை. இதனால், இந்தியாவிலுள்ள இதர பிற்படுத்தப்பட்டோருக்கு கிடைத்திருக்க வேண்டிய 2,386 மருத்துவ சீட்கள் பறிபோய்விட்டன.

மாநில-மத்திய அரசு மருத்துவக்கல்லூரிகளிலிருந்து அகில இந்திய தொகுப்பிற்கு வழங்கப்பட்ட 9, 550 இடங்களில் 7,125 இடங்களை அதாவது 74.6 விழுக்காடு இடங்களை பொதுப்பிரிவினர் இந்த கலந்தாய்வின்போது எடுத்துள்ளனர். இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 371 இடங்கள் மட்டுமே அதாவது வெறும் 3.8 சதவீதம் விழுக்காடு இடங்கள் மட்டுமே கிடைத் துள்ளன. பட்டியல் இனத்தவருக்கு 14.5 சதவீத இட ஒதுக்கீட்டு அடிப்படையில் 1385 சீட்களும் 7 சதவீத இடஒதுக்கீட்டு அடிப்படையில் பழங்குடியினருக்கு 669 சீட்களும் கிடைத்துள்ளன. இதனால், இதர பிற்படுத்தப்பட்ட சமூக மாணவ ர்களே மிகப்பெரிய அளவிற்கு பாதிக்கப் பட்டுள்ளனர். தமிழகத்தில் சுமார் 1900 முதுநிலை மருத்துவ இடங்கள் உள்ளன. அகில இந்தியத் தொகுப்புக்கு இடங்களை வழங்காமல் இருந் திருந்தால், இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் இந்த 1900 இடங்களில் 50 சதவீத இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டு அடிப்படையில் சரிபாதி இடங்கள் இவர்களுக்கு கிடைத் திருக்கும். அதாவது, 950 சீட்கள் கிடைத்திருக்கும். மேலும், அகில இந்தியத் தொகுப்பில் இட ஒதுக்கீட்டை பின்பற்றாததால் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 475 இடங்கள் மட்டுமே கிடைக்கின்றன.

தமிழகத்திலுள்ள சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ இடங்களில் 100 சதவீத இடங்களும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பால் அகில இந்திய அளவில் 2017 முதல் இட ஒதுக்கீடே பின்பற்றாமல் தமிழக மாணவர்களுக்கே கிடைக்காத அவலநிலை ஏற்பட்டிருக்கிறது. அதனால், இதர பிற்படுத்தப்பட்ட மக்கள் பாதிக்கப்படுவதால்தான் மத்திய அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தோம்'' என்கிறார் அவர்.

உச்சநீதிமன்றத்தில் அனைத்துக்கட்சிகளின் மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில் திமுகவின் செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் சார்பில் அதே கோரிக்கையை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு சமூக அநீதிக்கான சட்டப்போராட்டம் தொடர்கிறது.

-மனோ சௌந்தர்