சில நாட்களாக கேரள மாநிலத்தின் பல பகுதிகளில், குறிப்பாக வயநாடு, கோழிக்கோடு, இடுக்கி மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கிறது. பல இடங்களில் பாதைகள் துண்டிக்கப்பட்டு, குடியிருப்புப் பகுதிகளில் நீர்புகுந் துள்ளது. இந்த நிலையில்தான், ஆகஸ்ட் 7ந்தேதி, வழக்கத்தைவிட மோசமான நாளாக ஆனது.
இடுக்கி மாவட்டத்தில் உள்ள மூணாறு தென்னிந்தியாவின் மிகமுக்கியமான சுற்றுலாப் பகுதிகளில் ஒன்று. தேயிலை எஸ்டேட்டுகள் நிறைந்திருக்கும் இங்கு, ஏராளமான தமிழர்கள் கூலித் தொழிலாளர்களாக பணியாற்றுகின்றனர். மூணாறு கிராமப் பஞ்சாயத்தில் இருந்து 30 கிமீ தூரத்தில், ராஜமலை பகுதிக்கு அருகிலிருக்கும் பெட்டிமுடி நாயமக்காடு டீ எஸ்டேட்டில் பணிபுரியும் தொழிலாளர்கள், அதே பகுதியில் நான்கு வரிசைகள் கொண்ட வீடுகளில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த 7ந்தேதியன்று அதிகாலையில், திடீரென படுக்கைகள் அதிர்ந்துள் ளன. உறங்கிக் கொண்டிருந்த சிலர் வெளியில் வந்து பார்த்தபோது வெள்ளநீர் வரத் தொடங் கியிருந்தது. அடுத்து என்ன செய்யலாம் என்று யோசிப்பதற்குள், திடீரென சகதியும் பாறைகளுமாக நிலச்சரிவு அந்த வீடுகளை மொத்தமாக அழுத்தியது. இந்தக் கொடூர விபத்தில் 12 பேர் உயிருடன் மீட்கப் பட்டனர். 80க்கும் மேற்பட்டவர்கள் மண்ணுக்குள் புதைந்தனர்.
இந்தத் தகவலறிந்து வந்த தேசிய பேரிடர் மீட்புப் படையினரும், தீயணைப்புப் படைவீரர்களும் உடல்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். காட்டாற்று நீரில் அடித்து வந்தது, மண்ணுக்குள் புதைந்தது என அடுத்தடுத்து சடலங்கள் மீட்கப் பட்டுள்ளன. உயிருடன் மீட்கப்பட்ட ஒருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தகவல் தொடர்பு, மின்வசதி, போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து வசதிகளும் துண்டிக்கப்பட்டுள்ளதால், பகல்வேளையில் மட்டுமே மீட்புப்பணிகளை மேற்கொள்ள முடிந்தது. இதுபோக, விபத்து நடந்த இடத்திற்கு செல்லக்கூடிய ஒரே வழியான பெரியவாரை பாலமும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால், மீட்புப் பணியில் மேலும் தாமதம் ஏற்பட்டுள்ளது.
பச்சிளம் குழந்தைகள், பள்ளிச் சிறுவர்கள் உள்ளிட்ட பலர் மண்ணுக்குள் புதைந்த இந்த சம்பவத்தால், அந்தப் பகுதியெங்கும் அடங்காத அழுகுரல் சத்தம் இன்னமும் கேட்கிறது. இந்தத் துயரத்தில் இருந்து மீள்வதற்குள் ளாகவே, கேரள மக்கள் தலையில் பேரிடியாக விழுந்தது கோழிக்கோடு விமான விபத்து.
கொரோனா ஊரடங்கால் வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்டுவரும் வந்தே பாரத் திட்டத்தின் கீழ், துபாயில் இருந்து 10 கைக்குழந்தைகள் உட்பட 184 பயணிகளுடன் கேரளா கிளம்பியது ஏர் இந்தியாவின் எக்ஸ்பிரஸ் ஒல1344 விமானம். இதில் இரண்டு விமானிகள் உட்பட 6 விமானப் பணியாளர்களும் இருந்துள்ளனர். கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள காரிபூர் விமானநிலையத்தில் இரவு 7.30 மணியளவில் தரையிறங்க இருந்த இந்த விமானம், கடுமையான மழைப்பொழிவு, சூறைக்காற்று காரணமாக தரையிறங்குவது தாமதமானது.
நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த விமானிகள் கேப்டன் தீபக் சாத்தே மற்றும் அகிலேஷ் குமார், தரை யிறங்குவதைத் தவிர்த்து வானிலேயே வட்டமிட்டனர். ஒரு கட்டத்தில் விமானத்தைத் தரையிறக்க முயன்றபோதுதான், ஓடுதளத்தில் இருந்து விலகி, 35 அடிபள்ளத்தில் விழுந்து விமானம் இரண்டாகப் பிளந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் விமானிகள் உட்பட 18 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். பயங்கர சத்தம்கேட்டு அக்கம்பக்கத் தினர் கொட்டும் மழை, கொரோனா பயத்தையும் பொருட்படுத்தாமல் வந்து உதவியதால், பலத்த காயங்களுடன் பலர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
மற்ற விமான நிலையங்களைப் போலல்லாமல், கோழிக்கோடு விமானநிலையம் டேபிள் டாப் எனப்படும் மலைப்பகுதிகளில் இருக்கும் விமானநிலையம் ஆகும். இதுபோன்ற விமான நிலையங்கள் ஆபத்தானவை என்பதால், பல நிறுவனங்கள் டேபிள் டாப் ஏர்போர்ட்டுகளில் தங்கள் விமானங்களை இயக்குவதில்லை. மிகவும் அனுபவம் வாய்ந்த விமானிகளே இதற்காக பணியமர்த்தப்பட்டாலும், போயிங், ஏர்பஸ் நிறுவனங்களில் பெரியரக விமானங்களை இதில் பயன்படுத்துவதில்லை. இதன் காரணமாகவே கோழிக்கோடு விமான விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கருதப்பட்டது.
இன்னொருபுறம், 2011லேயே இந்த விமானநிலையம் தகுதியற்று மிகக்குறுகலாக, பாதுகாப்பற்றதாக இருப்பதாக அறிவுறுத்தப்பட்டதும், 2019ல் ஓடுதளத்தில் விமானத்தின் டயர்கள் மூலம் ஏற்படும் ரப்பர் டெப்பாசிட் அதிகமாக இருப்பதாக அறிவிக்கப்பட்டதும் விபத்துக்கான காரணங்களாக சந்தேகமாக வைக்கப்பட்டது. இந்த நிலையில்தான், ஓடுதளம் 28-ல் இறங்க வேண்டிய விமானத்தை வேறு வழியின்றி 10ஆவது ஓடுதளத்தில் இறக்கமுயன்று, ஓடுதளத்திற்கு முன்னதாகவே ‘டேக்ஸிவே சி’ என்ற பாதையில் இறங்கியதுதான் விபத்துக்குக் காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. விமானத்தின் கறுப்புப்பெட்டியையும் ஆய்வு செய்து வருகின்றனர்.
இரண்டு விபத்துகளில் உயிரிழந்தவர் கள், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கியிருக்கிறார் கேரள முதல்வர் பினராயி விஜயன். விமான விபத்தில் படுகாயமடைந்தவர்களுக்கு ரத்ததானம் செய்வதற்காக நள்ளிரவில் குவிந்தவர்களாலும், நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்க வந்தவர்களா லும் கடவுளின் தேசத்தில் மனிதநேயம் துளிர்த்திருந்தது.
-ச.ப.மதிவாணன்