தாசிரியர், வசனகர்த்தா, திரைக்கதை ஆசிரியர், நடிகர், தயாரிப்பாளர், தயாரிப்பு நிர்வாகி, இயக்குநர் என 75 வருடங்களாக, பல பரிமாணங்களில் தமிழ் சினிமாவில் தன் பங்களிப்பை செலுத்தி வரும் கலைமாமணி திரு. கலைஞானம் அவர்களின் பாராட்டு விழா, சென்னை கலைவாணர் அரங்கத்தில் கடந்த சனிக்கிழமையன்று பிரம்மாண்டமாக நடைபெற்றது.

தமிழர் கலை இலக்கிய பண்பாட்டுப் பேரவையின் சார்பில் நடந்த இவ்விழாவிற்கு இயக்குநர் பாரதிராஜா தலைமையேற்க, தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு மற்றும் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் ஆகியோர் முன்னிலையில், நமது நக்கீரன் ஆசிரியர், நடிகர்கள் ரஜினி, சிவக்குமார், பாக்யராஜ், கவிஞர் வைரமுத்து, இயக்குநர் அமீர் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்துகொண்டு கலைஞானம் பற்றிய தங்களது நினைவுகளைப் பகிர்ந்துகொண்டனர்.

dda

நக்கீரனில் கலைஞானம் எழுதிய "சினிமா சீக்ரெட்'’மற்றும் "கேரக்டர்'’தொடர்கள் உருவான கதையை பற்றிப் பேசிய நமது நக்கீரன் ஆசிரியர், ""இந்த வயதிலும் கலைஞானம் எப்படி இத்தனை விஷயங்களை நினைவில் வைத்திருக்கிறார் என்று தெரியவில்லை, நினைவாற்றலில் கலைஞருக்கு அடுத்து கலைஞானம்தான்'' என்று சொல்லிச் சென்றார். கலைஞானம் அவர்களின் கதை ஞானத்தையும் அவரது கதை விவாத சுவாரசியங்கள் மூலம், தான் கற்றுக்கொண்ட திரைக்கதை உத்திகளையும் பற்றிப் பேசிய இயக்குநர் கே.பாக்யராஜ், ""அவருக்கு இத்தனை பெரிய பாராட்டு விழாவை ஏற்பாடு செய்த இயக்குநர் பாரதிராஜாவிற்கு நன்றி தெரிவித்ததோடு, இதேபோன்ற ஒரு விழாவை தமிழக அரசு, பாரதிராஜாவிற்கு எடுக்க வேண்டும்'' என்ற தன் விருப்பத்தையும் முன்வைத்தார்.

Advertisment

சிறுவயதிலேயே தந்தையை இழந்து கலைஞானம் அனுபவித்த கஷ்டங்களைப் பற்றி பேசிய நடிகர் சிவக்குமார், அத்தனையையும் தாண்டி அவர் ஜெயித்த விதத்தையும் சாண்டோ சின்னப்ப தேவரிடம் முறைத்துக் கொண்டு, தன் மனைவியின் தாலியை அடகுவைத்து ரஜினிக்கு அட்வான்ஸ் கொடுத்து ஹீரோவாக்கிய அவரின் தைரியத்தையும் பெரிதும் பாராட்டிப் பேசினார். இந்த பேச்சினூடே, ""எத்தனை பெரிய படங்களில் பணியாற்றியபோதும், பெரும் கலைஞர்களுடன் பணிபுரிந்தபோதும், கலைஞானம் அவர்கள் இன்னும் வாடகை வீட்டில் தான் வாழ்ந்து வருகிறார்'' என்று சிவக்குமார் சொன்னது மொத்த அரங்கத்தையும் அமைதியில் ஆழ்த்தியது.

எத்தனை துன்பங்கள் வரும்போதும் அதை சிரித்தபடி கடக்கும் கலைஞானம் அவர்களின் நகைச்சுவை உணர்வைப் பற்றிப் பேசிய கவிஞர் வைரமுத்து, சிவக்குமார் முன்வைத்த விஷயத்தை வலியுறுத்தி, ""கலைஞானம் போன்ற ஒரு கலைஞன், வாடகை வீட்டில் வசித்து சிரமப்படக்கூடாது என்பதையும் உடனடியாக தமிழக அரசு அதற்கு ஆவன செய்யவேண்டும்'' என்ற தன் விருப்பத்தையும் வெளிப்படுத்தினார்.

dda

Advertisment

இதற்கடுத்து பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜு, ""அனைவரின் விருப்பத்திற்கும் ஏற்ப, முதலமைச்சரிடம் பேசி கூடிய விரைவில் கலைஞானம் அவர்களுக்கு அரசு சார்பில் வீடு வழங்க ஏற்பாடு செய்யப்படும்'' என உறுதியளித்தார்.

""நீதான் ஹீரோ''’என்று கலைஞானம் சொன்னவுடன் தான் அடைந்த அதிர்ச்சியையும், எப்படியாவது அவரை தவிர்ப்பதற்காக சம்பளத்தை உயர்த்திக் கேட்டதையும் சுவாரசியமாக விவரித்தார் ரஜினிகாந்த். சூப்பர் ஸ்டார் பட்டத்தைப் பார்த்து பதறிய கதையை நினைவுகூர்ந்த ரஜினிகாந்த், ""நான்தான் முட்டாள். அடுத்து கலைஞானத்துக்கு படம் எதுவும் பண்ணாம இருந்துட்டேன். அவராச்சும் என்ட்ட வந்து கேட்ருக்கணும்ல? அவரும் கேட்காம விட்டுட்டாரு. கேட்ருந்தா எவ்ளோ வேணாலும் கொடுத்துருப்பேன்.. பத்து படம் பண்ணிருக்கலாம்''’என்று தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். கலைஞானம், மனைவியின் தாலியை அடகு வைத்து தனக்கு அட்வான்ஸ் கொடுத்ததும், அவர் இன்னும் வாடகை வீட்டில்தான் இருக்கிறார் என்பதும் தனக்குத் தெரியாது'' என்று வருத்தத்துடன் கூறிய ரஜினிகாந்த், ""அரசாங்கம் பெரிய மனதுடன் கலைஞானம் அவர்களுக்கு வீடு கொடுக்க முன்வந்ததற்கு நன்றிகள்... பாராட்டுக்கள். ஆனால் அரசாங்கத்திற்கு அந்த வாய்ப்பை நான் கொடுக்க மாட்டேன். கலைஞானம் அவர்களின் கடைசி மூச்சு, என் வீட்டில்தான் பிரியும். உடனே அவருக்கு ஒரு வீடு பாருங்கள். நான் வாங்கித் தருகிறேன்''’என்று கூறி மொத்த அரங்கத்தையும் கைதட்டலில் அதிர வைத்தார்.

நிறைவாக பேசிய கலைஞானம், ""ரஜினியை ஹீரோவாக்குவதில் சின்னப்ப தேவருக்கும் தனக்கும் நிகழ்ந்த உரசலை நினைவுகூர்ந்தார். தான் தோற்க வேண்டும் என்று தேவர் விரும்பியதையும், ஆனால் அதே தேவர் பைரவியை பார்த்துவிட்டு தன்னைக் கூப்பிட்டு பாராட்டி, எந்த ரஜினியை ஹீரோவாக போட வேண்டாம் என்று சொன்னாரோ, அதே ரஜினியை வைத்து படமெடுக்க ஆசைப்பட்டு கால்ஷீட் வாங்கித் தரச் சொன்னதையும் சுவாரசியமாக விவரித்தார்.

""ரஜினி தனக்கு நெருக்கமான அத்தனை பேருக்கும் தன்னால் முடிந்தவரை உதவிகள் செய்யக்கூடியவர்'' என்று கூறிய கலைஞானம், அதற்கு உதாரணமாக தேவர் குடும்பம் சம்பந்தப்பட்ட சில நெகிழ்ச்சியான சம்பவங்களையும் விவரித்தார். இறுதியாக ‘""ரஜினி உங்க ஹீரோதான... ஏன் அவர்ட்ட எதுவும் கேக்கமாட்டேங்குறீங்கன்னு என்ட்ட கேக்குறாங்க. யாரிடமும் எதையும் கேட்டுப் பெறுபவன் இல்லை கலைஞானம். உழைத்து வாழ்பவன். அன்பை கசக்கி பிழிஞ்சுரக்கூடாது''’ என்றபடி தன் உரையை முடிக்க, பெருகி எழுந்த கைதட்டல்களுடன் நிறைவடைந்தது அப்பெருங்கலைஞனின் பாராட்டு விழா.

-தொகுப்பு: ஹாஷ்மி

படங்கள்: எஸ்.பி.சுந்தர் & ஸ்டாலின்