2019, ஆகஸ்ட் 6-ல் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் ஆர்ட்டிகிள் 370-ஐ நீக்கிவிட்டு அதனை லடாக், ஜம்மு-காஷ்மீர் என இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்தபின் இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முதன்முறை யாக காஷ்மீருக்கு கடந்த அக் 22-ல் சென்றார்.
மூன்றுநாள் காஷ்மீரில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அமித்ஷா பேசியதும், அவரது வருகையையொட்டி ஏற்பாடு செய்யப் பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளும் இருவேறு நிலவரத்தைக் காட்டின. அதை இங்கே பார்ப்போம்...
ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு பலியான அதிகாரி பர்வேஸ் அகமத் உள்ளிட்டவர்களின் குடும்பங்களைச் சந்தித்து நம்பிக்கை அளித்தபின், இளைஞர் குழு பிரதிநிதிகளுக்கு நடுவில் அமித்ஷா பேசும்போது, “"சிறப்பு அந்தஸ்து நீக்கத்துக்குப் பின் பல மாதங்களுக்கு நீடித்த இன்டர்நெட் நிறுத்தம், ஊரடங்கு போன்றவை கசப்பு மாத்திரை போன்றவை. ஆனால் அதுதான் ஆயிரக்கணக்கானவர்களின் உயிரைக் காத்திருக்கிறது. தீவிரவாதமும் முன்னேற்றமும் கைகோர்த்துச் செல்ல முடியாது. சில பகை சக்திகள், ஊரடங்கை நீக்கவும், மக்கள் சாலைக்கு வந்து பாதுகாப்பு வீரர்களிடம் மோதவும்... அதன்மூலம் தங்கள் அரசியல் நலன்கள் பாதுகாக்கப்படவும் விரும்புகின்றன.
கடந்த 70 வருடங்களில் பாதுகாப்பு வீரர்கள் உட்பட 40,000 பேர் இறந்திருக்கின்றனர். இதற்கு குறிப்பிட்ட மூன்று குடும்பங்களிடம் விடையிருக்கிறதா? நீண்டகால நோக்கில் ஜம்மு-காஷ்மீரில் ஊரடங்கு நன்மையே செய்துள்ளது.
மத்திய அரசிடமிருந்து மிகப்பெரும் அளவில் ஜம்மு-காஷ்மீர் நிதி பெற்றிருக்கிறது. எனினும் இங்கு ஏழ்மை குறையவில்லை. ஆனால் 2019-ல் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பின் இம்மாநிலத்தின் வறுமைக்கோட்டுக்குக் கீழானவர்கள் விகிதம் 10.35 சதவிகிதமாக மாறியுள்ளது. இது தேசிய வறுமைக்கோட்டு அளவான 21.92-ஐவிட மிகக்குறைவு.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருடன், இங்குள்ள நிலைமையை ஒப்பிட்டுப் பாருங்கள். நீங்கள் முன்னேற்றத்தைக் காண்பீர்கள் கடந்த இரண்டாண்டுகளில் 25,000 வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. 7,000 பணி நியமன உத்தரவுகள் வழங்கப்படவிருக்கின்றன. இங்கே தீவிரவாதம் முடிவுக்கு வந்துவிட்டது. கல்லெறிதல் மறைந்துவிட்டது. அமைதிக்கு ஊறு விளைவிப்பவர்கள் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படுவார்கள்''’என்றார்.
உண்மையிலே ஜம்மு-காஷ்மீர் பகுதியில் தீவிரவாதம் நின்று போய்விட்டதா?
அமித்ஷாவின் வருகைக்கான காரணத்திலேயே அதற்கு விடையிருக்கிறது. சமீபகாலமாக காஷ்மீரில் சிறுபான்மைச் சமுதாயத்தினர் மீதும், உள்ளூரைச் சேராத புலம்பெயர் தொழிலாளர்கள் மீதும் தொடர்ச்சியாக நடைபெற்ற தாக்குதலும், இதனால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையை விட்டுவிட்டு ஓடியதுமே அவரது வருகைக்கான மிகமுக்கிய காரணம்.
ஒரு வாரம் முன்னதாக இப்பகுதியிலுள்ள அடர் வனப்பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 9 ராணுவ வீரர்கள் உட்பட, 2 ஜூனியர் கமிஷன்டு அதிகாரிகள் என 11 பேர் இறந்திருக்கின்றனர். இந்த மாதத்தில் மட்டும் ஏற்பட்ட மோதலில் 38 பேர் இறந்திருக்கின்றனர். அவர்களில் 11 பேர் பொதுமக்கள், 17 பேர் தீவிரவாதிகள், 10 பேர் ராணுவத்தினர்.
தாக்குதல்களில் இறந்தவர்களில் 5 பேர் புலம்பெயர் தொழிலாளர்கள், இருவர் உள்ளூர் ஹிந்துக்கள், ஒருவர் சீக்கியப் பெண். "தி ரெஸிஸ்டென்ஸ் போர்ஸ்' எனும் புதிய அமைப்பு தாக்குதலுக்கு காரணம் எனச் சொல்லப்படுகிறது. மேலும் இவ்வமைப்பு, இன்னும் தாக்குதல்களை நடத்து வோம் என எச்சரித்திருக்கிறது.
சிறப்பு அந்தஸ்து நீக்கப் பட்ட இரண்டு ஆண்டுகளாகி யும் ஜம்மு-காஷ்மீர், லடாக் பகுதிகளுக்கு தேர்தல் நடத்தப் படவில்லை. காவல்துறையும் ராணுவமும் காவலுக்கு நின்று அமைதியை நிலைநிறுத்திவரு கின்றன. அரசியல் தலைவர்கள் மாதக்கணக்கில் வீட்டிலேயே சிறைவைக்கப்பட்டனர். தேர்தல் நடக்காததால், இப்போதுவரை மத்திய அரசால் நியமிக்கப்பட்ட அதிகாரிகளும் ஆளுநருமே காஷ்மீரின் ஆட்சிப் பொறுப்பைக் கவனித்துவருகின்றனர்.
அமித்ஷா வருகையையொட்டி, இப்பகுதியில் போராட்டக்காரர்களாகக் கருதப்படும் 800 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவற்றில் பெரும்பாலோர் இளைஞர்கள். அதில் 30 பேர் சர்ச்சைக் குரிய சட்டமாகக் கருதப்படும் பொதுமக் கள் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சட்டத்தில் கைது செய்யப்படுபவர்களை ஒரு வருடத்துக்கு விசாரணையின்றி சிறையில் தள்ளமுடியும்.
கிட்டத்தட்ட 30 பேர் காஷ்மீருக்கு வெளியில் கொண்டுபோய் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அமித்ஷாவின் வருகையையொட்டி காஷ்மீர் எங்கும் 50 கம்பெனி துணை ராணுவப் படையினர் கூடுதலாக நகரமெங்கும் காவலுக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். பெண்களைச் சோதனையிடவும், அகற்றவும் பெண் துணை ராணுவப் படையினர் டஜன் கணக்கில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
புதிய தாக்குதல்களைத் தடுக்க, சிறுபான்மையினர் மற்றும் புலம்பெயர் பணியாளர்கள் வசிக்கும் இடங்களில் ஹெச்.டி. தரத்திலான சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. ட்ரோன்கள் எங்கும் பறக்கின்றன.
காஷ்மீரில் தீவிரவாதம் ஒழிந்து விட்டதா எனக் கேட்டால், பதில் சொல்லாமல் மெல்லிய புன்னகையுடன் ஊடகத் தினரைத் தவிர்த்து விலகி மறைகின்றனர் காஷ்மீர் மக்கள்.