ருபக்கம் எடப்பாடி, ஓ.பி.எஸ். கட்சி யாருக்கென பொதுக்குழு நடத்தியும், தலைமை அலுவலகத்தைக் கைப்பற்றியும் நீதிமன்ற போராட்டங்களை நடத்தியும் புஜபல பராக்கிரமத் தைக் காட்டிக்கொண்டிருக்க, இன்னொரு பக்கம் "என் அத்தி யாயம் முடிந்துவிடவில்லை. நான் இங்கேதான் இருக்கிறேன்' என ஜெ.வால் உடன்பிறவா சகோதரி என்றழைக்கப்பட்ட சசிகலாவும் தன் வாளை உருவிக்கொண்டு களத்தில் குதித்திருக்கிறார்.

ஜெ. உயிருடன் இருந்தவரை அ.தி.மு.க.வில் மன்னார்குடி கும்பலே அ.தி.மு.க.வில் கோலோச்சியது. இரண்டொரு முறை சசிகலா போயஸ்கார்டன் இல்லத்திலிருந்து வெளியேற்றப்பட்டா லும், ஜெ.விடம் அபிமானத்துக்குரியவராகவும், ஜெ.வுக்கு அடுத்தபடி கட்சியின் லகானைக் கையில் வைத்திருப்பவராகவும் சசிகலாவே திகழ்ந்தார். ஜெ.வின் உடல்நலக் குறைவின்போதும், மறைந்தபோதும் அப்பல்லோவிலிருந்து அடக்கம் செய்யும்வரை மன்னார்குடி வகையறாக்கள் கூடவே இருந்தது.

sasibrother

Advertisment

ஜெ.வின் இடத்தை சசிகலா அடைய நினைத்தபோது, "இந்த சந்தர்ப்பம் சரியில்லை. ஆட்சியின் கடைசியில் கட்சியைக் கைப்பற்றலாம். அதுவரை கட்சியை வழிநடத்தலாம்''’என்று சசிகலாவின் கணவர் நடராஜன், தம்பி திவாகரன் சொன்னதைக் கேட்காமல் தினகரன், டாக்டர் வெங்கடேசன் ஆகியோர் தூண்டுதலால் நிதானமிழந்து கட்சியைக் கைப்பற்றும் ஆசையில் தன்னை பொதுச்செயலாளராக அறிவித்துக்கொண்டார். ஆனால் ஜெ. இருந்தவரை வராத சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு, சசிகலா கட்சியைக் கைப்பற்ற நினைத்தபோது திடீரென வழங்கப்பட்டது சசிகலாவுக்கு பாதகமாக அமைந்தது. சிறைக்குச் சென்று திரும்பும்போது அ.தி.மு.க. நிலவரமே வேறாக மாறியிருந்தது.

சசிகலாவை கட்சிக்குள்ளே சேர்க்கக்கூடாது என்ற குரல்களை எழும்பச் செய்து, அதற்கு வலுவான ஆதரவையும் உருவாக்கியிருந்தார் எடப்பாடி.

எடப்பாடியா, ஓ.பி.எஸ்.ஸா என்று ஒருபக்கம் பஞ்சாயத்தென்றால், சசிகலா குடும்பத்தில் மட்டும் தினகரன், திவாகரன், பாஸ்கரன் என்று ஆளுக்கொரு கட்சியைத் தொடங்கி வைத்திருந்தனர். அ.தி.மு.க.வை முழுமையாகக் கைப்பற்ற ஓ.பி.எஸ். -எடப்பாடி இருவருக்கும் இடையே மெகாயுத்தம் நடந்துகொண்டிருந்த கடைசி நாளில், புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடிக்கு ஒரு திருமண நிகழ்வுக்கு வந்த சசிகலாவுக்கு வைக்கப்பட்டிருந்த பதாகைகளில், அவரை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் என்றும் முதல்வர் பதவியை விட்டுக்கொடுத்தவர் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. அதில் சசிகலா காலில் விழுந்து கிடக்கும் எடப்பாடி படமும் இடம் பெற்றிருந்தது.

அந்த திருமண விழாவில் பேசிய சசிகலா, "தற்போதைய பொதுக்குழு செல்லாது. என் வழக்கே நிலுவையில் இருக்கும்போது எப்படி வேறு பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க முடியும்? நான்தான் பொதுச்செயலாளர்... நானே கட்சியைக் காப்பாற்றுவேன்''’என்றார், பேட்டியிலும் அதையே கூறினார்.

ss

Advertisment

அடுத்த நாள் 12-ஆம் தேதி தஞ்சை தமிழரசி மண்டபத்தில் சசிகலாவின் தம்பி நடத்திவந்த அண்ணா திராவிடர் கழகத்தை சசிகலா தலைமையிலான அ.தி.மு.க.வில் இணைக்கும் விழா நடந்தது. சாலையெங்கும் அ.தி.மு.க. கொடிகள் கட்டப் பட்டிருந்தன.

ஆயிரம் பேர்கள்வரை கலந்துகொண்ட இந்த நிகழ்வில் பலரும் எடப்பாடியைத் திட்டினார்கள். விழாவில் மைக் பிடித்த திவாகரன் "இப்போது அவசரத் தேவை கருதி அக்காவுக்கு வலுச் சேர்க்கத்தான் அ.தி.க.வை இணைக்கிறோம். குடும்பங்களை மறந்து அம்மாவுக்காக அ.தி.மு.க.வுக்காக உழைத்தவர் அக்காதான். ஆட்சி மாற்றம் ஏற்படும்போதெல்லாம் எங்கள் மீது போடப்படும் வழக்குகளை இன்றுவரை எதிர்கொண்டு வருகிறோம். அம்மா இருக்கும்போதே அக்காவை தேர்தலில் போட்டியிடவைத்து வெற்றி பெறச்செய்து எம்.எல்.ஏ. ஆக்கி அமைச்சராக்க ஆசைப்பட்டார். ஆனால் அக்கா அதனை ஏற்கவில்லை.

sasi

அன்றே அம்மாவின் ஆசையை நிறைவேற்றி இருந்தால் இப்போது அ.தி.மு.க. உடைந்திருக்காது. அ.தி.க. கட்சியை சின்னம்மாவிடமும் எனது அக்காவை உங்களிடமும் ஒப்படைக்கிறேன்''’என்றார். பின் கலங்கிய கண்களைத் துடைத்துக்கொண்டு, "அ.தி.மு.க.வில் பிரச்சினை வரும்போதெல் லாம் அக்காவும், அத்தான் நடராஜனும்தான் சமாளித்து வைத்திருந்தார்கள். ஆனால் அக்கா இல்லாத சமயத்தில் கட்சி யை இப்படிப் பிரித்து அடிதடி நடத்திக்கொண்டிருக்கிறார்கள். விரைவில் ஒருங்கிணைந்த அ.தி.மு.க. உருவாகும்''’என்றார்.

அதே விழாவில் மைக் பிடித்து எழுதி வந்த உரையைப் படித்த சசிகலா, "தற்போதைய நிகழ்வுகள் வேதனையளிக்கிறது. இயக்கம் சுயநலவாதிகளிடம் சிக்கி இருக்கிறது. இயக்கத்தின் தியாகம் பற்றி அறியாதவர்கள்தான் சுய ஆதாயத்திற்காக சின்னவன், பெரியவன் என்று போட்டி போட்டுக்கொண்டிருக் கிறார்கள். 2016 டிசம்பரில் நடந்தது தான் உண்மையான பொதுக்குழு. சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு அனைவருக்கும் தகவல் கொடுத்து நடத்தப்பட்டது. ஆண்டுக்கு ஒரு முறை கட்சியின் சட்டதிட்டங்களை மாற்றமுடியாது. அம்மாவின் அன்புத் தங்கையாக சொல்கிறேன். புரட்சித் தலைவர், புரட்சித் தலைவியைப் பார்த்துப் பார்த்து வளர்ந்தவளாக, ”வீரத்தமிழச்சியாக” சொல்கிறேன். இந்த இயக்கத்தை யாராலும் அபகரிக்க முடியாது. அனைவரையும் ஒருங்கிணைத்து கட்சியை வலுப்படுத்தி மீண்டும் ஆட்சியைப் பிடிப்போம்''” என்றார்.

எங்களுடையது மட்டுமே அசல். எங்களுக்கு வேறெங்கும் கிளைகளில்லை என சசிகலா, எடப்பாடி, ஓ.பி.எஸ். மூவருமே கூறுகிறார்கள். நீதிமன்றம் என்ன சொல்லப்போகிறதென பொறுத் திருந்துதான் பார்க்கவேண்டும்.