குஷியில் சிம்பு ரசிகர்கள்
சிம்பு ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையிலான ஒரு புதிய செய்தி கோலிவுட் வட்டாரத்தில் பரவி வருகிறது. அதன்படி, புதிய படம் ஒன்றிற்காக முன்னணி இயக்குநர் சுதா கொங்கரா உடன் கூட்டணியமைக்க உள்ளாராம் சிம்பு. இறுதிச்சுற்று, சூரரைப் போற்று வெற்றிகளுக்குப் பிறகு சுதா கொங்கரா உருவாக்கிவரும் திரில்லர் பாணியிலான ஒரு கதையில் தான் சிம்பு நடிக்க உள்ளாராம். இதற்காக ஏற்கனவே இரண்டு முறை நடிகர் சிம்பு, சுதா கொங்கராவுடன் கதை விவாதத்தில் ஈடுபட்ட நிலையில், சமீபத்தில் மூன்றாவது முறையாக இப்படத்திற்கான கதை விவாதம் நடந்துள்ளதாம். சிம்பு, சுதா கொங்கரா இருவருக்கும் கதை திருப்தி கொடுத்துள்ளதால் விரைவில் இப்படத்தின் அடுத்தகட்டப் பணிகள் துவங்கும் எனத் தெரிகிறது.
"வலிமை' காட்டுவாரா அஜீத்
முன்னணி தமிழ் நடிகர்களின் படங்கள் ஆண்டாண்டு காலமாக மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழி களில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டு வந்தாலும், இந்தி வெளியீடு என்பது இதுவரை விஷப்பரீட்சையாகவே இருந்து வந்துள்ளது. ஆனால், சமீபகால சினிமா வரலாறு இதனை ஓரளவுக்கு மாற்றியுள்ளது. தரமான சில தென்னிந்திய சினிமாக்கள் இந்தியிலும் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.
இந்த ட்ரெண்டை தொடர நினைக்கும் வலிமை படக்குழு, இந்தியில் இப்படத்தைப் பெரிய அளவில் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டு வருகிறதாம். அண்மையில் வெளியான அஜீத்தின் சில படங்கள் இந்தியில் டப் செய்யப்பட்டு யூட்யூப்பில் மில்லியன் கணக்கில் பார்வையாளர்களைப் பெற்றுள்ளன. எனவே, இந்தி ரசிகர்களுக்கு அஜீத் ஓரளவு பரிட்சய மான நடிகராக இருப்பதாலும், படத்தின் மேல் உள்ள நம்பிக்கையாலும் இம்முடிவை எடுத்துள்ளாராம் போனி கபூர். தமிழ் தவிர இந்தி மற்றும் தெலுங்கிலும் படம் வெளி யாகும் என ஏற்கனவே தகவல் வெளியான சூழலில், இந்தி பதிப்பை மும்பையில் அதிக எண்ணிக்கையிலான திரையரங்குகளில் வெளியிட முயற்சிகளை மேற்கொண்டு வருகிறதாம் தயாரிப்பு தரப்பு. கடைசியாக இந்தியில் வெளியான விஜய்யின் 'மாஸ்டர்' படம் எதிர்பார்த்த அளவு வணிகம் செய்யாத சூழலில், வலிமை என்ன செய்யப்போகிறது என்பதைப் பொறுத்தே பார்க்கவேண்டும்.
கைதி-2 பராக் பராக்
2019-ஆம் ஆண்டு கார்த்தி நடிப்பில் வெளியான படம் கைதி. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், ஒரே இரவில் நடக்கும் சம்பவங்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட இப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது. இப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாகும் என அப்போதே தெரிவித்திருந்தார் படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு. ஆனால், அறிவிப்புக்குப் பின்னர் கார்த்தி, லோகேஷ் கனகராஜ் இருவருமே அடுத்தடுத்த படங்களில் பிஸியானதால் இதுகுறித்து எந்த அறிவிப்பும் வெளிவராமல் இருந்தது.
இந்நிலையில், கைதி-2 படம் குறித்து தற்போது சில தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, கைதி படத்தின் ப்ரீக்வெல் கதையாக இப்படம் உருவாகிறதாம். கார்த்திக்கும், ஹரீஷ் உத்தமனுக்கும் இடையேயான பகை குறித்தும் கார்த்தி எவ்வாறு சிறைக்குச் சென்றார் என்பது குறித்தும் இப்படம் பேசவுள்ளதாம். கமல் நடிக்கும் "விக்ரம்' படத்தின் பணிகளை லோகேஷ் முடித்தபிறகு இதன் பணிகளைத் தொடங்க உள்ளதாகவும், 2022 கோடைக் காலத்தில் இதன் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
பிரம்மாண்ட அதிரடி அக்ஷனில் விஜய்
மாஸ்டர்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் விஜய், நெல்சன் திலீப்குமார் இயக்கும் 'பீஸ்ட்' படத்தில் நடித்துவருகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துவருகிறார். ‘பீஸ்ட்’ படத்தின் படப் பிடிப்பை நிறைவு செய்த படக்குழு டப்பிங் பணியில் தீவிரம் காட்டி வருகிறது.
இப்படத்தைத் தொடர்ந்து, பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார் விஜய். தில் ராஜு தயாரிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ள இப்படத்திற்காக மிகப்பெரிய தொகை செல விடப்பட உள்ளதாம். இதுவரை விஜய் நடிப்பில் வெளியான படங்களின் பட்ஜெட்டை விட இப் படத்தின் பட்ஜெட் மதிப்பு அதிகம் என சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன. பிரம்மாண்டமான அதிரடி ஆக்சன் படமாக இதனை எடுக்கத் திட்டமிட்டுள்ள படக்குழு, இதற்கான ஆரம்ப கட்ட பணிகளையும் தற்போது தொடங்கியுள்ள தாகக் கூறப்படுகிறது. விஜய் படங்களில் 'பிகில்' படத்துக்காக அதிகபட்சமாக சுமார் 180 கோடி வரை செலவு செய்யப்பட்டதாகச் சொல்லப்படு கிறது. அதனைவிட சில கோடிகள் அதிகமாக இந்த புதிய படத்திற்கு செலவிடப்பட உள்ளதாம்.
-எம்.கே