ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவையின் வெள்ளிவிழா, கடந்த ஜூன் 29, 30 ஆகிய தேதிகளில் இருநாள் விழாவாக சிறப்புறக் கொண்டாடப்பட்டது.
மகாகவி பாரதி பிறந்தநாளைக் கொண் டாடும் வகையில், அவரது பெயரில் அரசியல், இலக்கியம், அறிவியல் என பல்வேறு துறைகளில் உள்ள ஆளுமைகளைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு ஒவ்வொரு வருடமும் பாரதி விருது வழங்கும் இந்த மக்கள் சிந்தனைப் பேரவை, அறிவியல் ஆய்வாளர்களை ஊக்குவிக்க அறிவியல் விழா, அரசுப் பள்ளி மாணவர்களைத் தேர்ச்சி பெற வைக்கும் ஆசிரியர்களுக்குப் பாராட்டு விழா என பல்வேறு விழாக்களைக் கொண்டாடி வருவதோடு, அறிவார்ந்த உலகத்தைப் படைக்கும் ஆர்வத்தில் ஆண்டுதோறும் ஈரோட்டில் புத்தகத் திருவிழாவையும் நடத்தி, ஒட்டுமொத்த தமிழகத்தையும் ஈர்த்து வருவது குறிப்பிடத்தக்கது. இதில் பங்கேற்ற அறிஞர்கள் அனைவரும் அறிவுக்கு விருந்தளித்தனர்.
இந்த வெள்ளிவிழாக் கொண்டாட்டத்திற்கு சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி லட்சுமிகாந்தன் பாரதி தலைமை ஏற்றார்.
பேரவையை முன்னெடுத்து நடத்திவரும் அதன் தலைவரான ஸ்டாலின் குணசேகரன், தன் அறிமுகவுரையில் "பாரதி மன்றம், பகத்சிங் மன்றம், அடுத்து மக்கள் சிந்தனைப் பேரவை என தொடர்ந்து ஏறக்குறைய 40 ஆண்டு காலமாக நாங்கள் இயங்கிக் கொண்டிருக்கிறோம். மக்களே கொண்டாடும் வகையில் இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஈரோட்டில் மட்டுமில்லாமல் இப்போது தமிழகம் முழுக்க இதன் கிளை ஒவ்வொரு ஊரிலும் தொடங்கப்பட்டு வருகிறது.
புத்தக வாசிப்பு, கருத்தரங்கம் என்பதோடு நில்லாமல், அரசியல் ரீதியான தெளிவோடு, எதிர்கால சமூகம் மலரவேண்டும் என்ற நோக்கத்தில் இந்தப் பேரவை செயல்பட ஆரம்பித்திருக்கிறது'' என்றார் தீர்க்கமாக.
சிறப்புரையாற்றிய தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு "மனிதன் சிந்தனையால் செம்மைப்படுகிறான். அவன் சிந்திப்பதால் தான் செழுமை பெறுகிறான். சிந்தனாவாதிகளுக்கும் சாதாரண மனிதனுக்கும் வித்தியாசம் இருக்கிறது. சிந்தனாவாதிகள் உலகம், பொருளாதாரம், நாட்டின் மறுமலர்ச்சி, இளைஞர் களின் நலன் குறித்தெல் லாம் சிந்திக்கின்றனர். நான்கு பக்கமும் தெறித்து ஓடும் சிந்தனைகளை நெறிப்படுத்துவதே இப் பேரவையின் நோக்கமாக இருக்கிறது.
மருத்துவ காரணங் களினால் கோமா நிலையில் இருப்பவர்களால் பிரச்னை இல்லை. ஆனால் நல்ல நிலையில் இருந்து கொண்டே சமூகத்தில் எது நடந்தாலும் பரவாயில்லை என்கிற கோமாவில் இருப்பவர்களால்தான் பிரச்னை. நாம் எதைச் சிந்திக்கிறோமோ அதையொட்டியே நம் வாழ்க்கை இயங்குகிறது. உயர்ந்தவற்றை சிந்திக்கும்போது வாழ்க்கை வளமாக மாறுகிறது. எனவே உயர்ந்த சிந்தனைகளை நாம் கெட்டியாகப் பிடித்துக் கொள்ள வேண்டும். படிப்பதன் மூலம் நம் சிந்தனையில் சில மாற்றங்கள் ஏற்படுவது உண்டு. சிலவற்றை வாசிப்பதன் மூலம் நம் மூளை நரம்புகளில் மின்னூட்டம் ஏற்படும். அந்த மின்னூட்டம் சிந்தனைக்கு அழைத்துச்சென்று ஆக்கப்பூர்வமாக எதையாவது செய்ய வேண்டும் என்ற உந்துதலை ஏற்படுத்தும். இதுபோன்ற ஆக்கப்பூர்வமான சிந்தனை களைத் தூண்டிவிடும் செயல்களைத்தான் மக்கள் சிந்தனைப் பேரவை செய்து கொண்டிருக்கிறது'' என் றார் விளக்கமாக.
அறிவியல் அமர்வில் கலந்துகொண்ட இஸ்ரோ முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை தனது உரையில், "சுய சிந்தனை என்பது நம் அறிவியலுக்கு பயனுள்ளதாக இருந்து வருகிறது. உலகில் ரஷ்யா, அமெரிக்கா போன்ற நாடுகள் நிலவிற்குப் பலமுறை செயற்கைக் கோள்களை அனுப்பி இருந்தாலும், இந்தியா மிகக்குறுகிய காலத்தில், குறைந்த செலவில் நிலவிற்குச் செயற்கைக்கோளை அனுப்பி, எந்தெந்த இடத்தில் தண்ணீர் உள்ளது என்பதை உறுதி யாகக் கூற முடிந்தது. அதற்கு சுய சிந்தனையும், அதற்கு பின்புலமாக இருந்தது. தாய்மொழி யால் வந்த சிந்தனையின் வெளிப்பாடு தான் அறிவியல் கோட்பாடு.
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் எப்போதும் "அடுத்தது என்ன?' என்று கேட்பார். அந்த கேள்விதான் இன்றைக்கு இந்தியா விண்வெளித் துறையில் முன்னணியில் இருப்பதற்கு அடித்தளம். நான் இஸ்ரோ இயக்குநராக இருந்தபோது 36 மாதங்களில் 30 செயற்கைக் கோள்களை நிறுவி உலகில் முதல் வரிசையில் இந்தியாவை கொண்டு வர முடிந்தது. இதற்குக் காரணம் அப்துல்கலாம் கேட்ட அந்தக் கேள்விதான்.
இன்று மருத்துவத் துறையிலும் பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அடுத்தகட்டமாக சென்னை, தில்லி போன்ற பெரு நகரங்களில் உள்ள மருத்துவர்கள் அங்கே இருந்து கொண்டு, இந்தியாவில் உள்ள ஏதாவது ஒரு குக்கிராமத்தில் அறுவை சிகிச்சை செய்ய முடியும் என்ற நிலையை உருவாக்க வேண்டும்''’என்றார் ஆணித்தரமாக.
படைப்பாளர்களை கௌரவிக்கும் வகையில் இந்த விழாவில், ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 25 படைப்பாளர்களுக்கு பாராட்டு மடல் வழங்கப்பட்டது. தொடர்ந்து இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனின் தமிழ் ஓசை என்ற சங்கத் தமிழ்ப் பாடல்கள் இசை நிகழ்ச்சி அரங்கேறி, அனைவரையும் இசை மழையில் நனைத்தது.
மக்கள் சிந்தனைப் பேரவை தமிழகம் முழுக்க விரைவில் வேர் பரப்பித் தழைக்கும் என்கிற நம்பிக்கையை இவ்விழா ஏற்படுத்தியிருக்கிறது.