மாணவர்களின் போதையைத் தெளிவித்த தீர்ப்பு!

அரசாங்கம் நடத்தும் டாஸ்மாக்கால் தமிழகமே தள்ளாடுகிறது. இளைஞர்களையும் போதைப்பழக்கம் தொற்றிக்கொண்டது. இதில் கொடுமை என்னவென்றால், மாணவர்களும் இப்புதை சேற்றில் சிக்கிக்கொண்டதுதான்.

saf

இப்படித்தான் அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி மாணவர்களில் 8 பேர், போதை தெளியாமல் வகுப்புக்கு வந்தனர். அவர்களை கல்லூரிக்குள் அனுமதிக்காமல் வெளியேற்றியது கல்லூரி நிர்வாகம். மாணவர்கள் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

Advertisment

இந்த வழக்கில் மாணவர்களின் எதிர்கால நலனைக் கருத்தில்கொண்டு, அவர்கள் படிப்பதற்கு தேவாங்கர் கல்லூரி அனுமதிக்க வேண்டுமென்றும், செய்த தவறை உணர்ந்து ஒழுக்கத்துடன் நடந்துகொள்வதாக உறுதியளிக்கும் மாணவர்கள், சுதந்திர தினத்தன்று விருதுநகரிலுள்ள காமராஜர் இல்லத்தைச் சுத்தம் செய்ய வேண்டுமென்றும், அதன்பிறகு, இல்லத்துக்கு வெளியே பொதுமக்களிடம் மது விழிப்புணர்வு பதாகைகளைக் கையிலேந்தி பிரச்சாரம் செய்யும்படியும் உத்தரவிட்டது உயர்நீதிமன்றம்.

இதுகுறித்த அறிக்கையை, கல்லூரி நிர்வாகமும் காவல்துறையும் 19-ந் தேதி உயர்நீதிமன்றத்தில் தாக்கல்செய்ய வேண்டுமென்று வலியுறுத்தப்பட்டது. "காமராஜர் இல்லத்தைச் சுத்தம் செய்தபோதே, எங்கள் மனமும் சுத்தமாகிவிட்டது' என்று நெகிழ்ந்தனர் தவறிழைத்த மாணவர்கள்.

இவர்களைப் போன்ற மாணவர்கள் வெகுசிலரே என்றாலும், தமிழகத்தில் போதைப் பழக்கத்துக்கு ஆளான ஒட்டுமொத்த மாணவ சமுதாயத்தினரும் தவறுணர்ந்து திருந்தும்விதத்தில், நல்லதொரு படிப்பினையாக இப்படியொரு உத்தரவை உயர்நீதிமன்றம் பிறப்பித்திருப்பதாகவே கருத நேரிடுகிறது.

Advertisment

-ராம்கி

திருநாவுக்கரசர் கொடுத்த இன்ப அதிர்ச்சி!

ttt

கேந்திரிய வித்யாலயா எனும் மத்திய அரசுப் பள்ளியில் சீட் வாங்குவது லேசுப்பட்ட காரியமில்லை. இப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு எம்.பி.க்கள் சிபாரிசு செய்ய, கோட்டா உள்ளது. கடந்த காலங்களில் எம்.பி.க்களின் கோட்டாவாக இரண்டு சீட்டுகள் மட்டுமே இருந்தநிலையில், படிப்படியாக தற்போது அது பத்து சீட்டுகளாக அதிகரித்துள்ளது.

எம்.பி.க்களிடம் சிபாரிசுக் கடிதத்தைப் பெறுவதற்கு ரூ.1 லட்சம்வரை லஞ்சமாக அவர்களின் உதவியாளர்களே வாங்குகிறார்கள். டெல்லியில் இதைத் தொழிலாக செய்யும் கும்பல்கள் இருக்கின்றன. சென்னை அசோக்நகர் கேந்திரிய வித்யாலயா முதல்வர் ஆனந்தன் என்பவர் இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டார். இருந்தும் பிள்ளைகளின் கல்விக்காக லட்சங்களை லஞ்சமாகக் கொட்ட பெற்றோரும் தயாராகவே இருக்கின்றனர்.

இந்நிலையில், திருச்சி எம்.பி.யான திருநாவுக்கரசரிடம், திருச்சி, புதுக்கோட்டை மா.செ.க்கள் உட்பட 36 பேர் சிபாரிசுக் கடிதம்கேட்டு விண்ணப்பித்தார்கள். எவ்வளவு கேட்டாலும் கொடுத்துவிடும் எண்ணத்தில் அவர்கள் காத்திருந்தார்கள்.

திருநாவுக்கரசரோ, ஒன்றாம் வகுப்புக்கான 9 விண்ணப்பங்களை தனியாக எடுத்து வைத்துவிட்டு, மீதமிருந்த 27 விண்ணப்பங்களில் சீனியாரிட்டி அடிப்படையில் தேர்வுசெய்து, எந்தவித பணமும் வாங்காமல் சிபாரிசுக் கடிதம் கொடுத்து பெற்றோரைத் திக்குமுக்காடச் செய்தார். கடிதம் கிடைக்காதவர்களுக்கு அடுத்த வருடம் தருவதாக உறுதியளித்து அனுப்பி வைத்தார்.

அதேபோல், தனியாக எடுத்துவைத்த 9 விண்ணப்பங்களுக்கு, சிறப்பு அனுமதியுடன் மனிதவள மேம்பாட்டுத்துறையில் பேசி, அவர்களுக்கு கோட்டாவில் சீட் கிடைக்க வழிவகை ஏற்படுத்தி ஆச்சர்யப்பட வைத்திருக்கிறார்.

-ஜெ.டி.ஆர்.

கமிஷன் புள்ளிகளைக் களையெடுக்கும் கமிஷனர்!

f

தூத்துக்குடி மாநகராட்சியின் கட்டுப்பாட்டின்கீழ் நான்கு வாகனக் காப்பகங்கள் இருக்கின்றன. இவற்றை அரசுக்கு நஷ்டம் ஏற்படுத்தி குறைந்த தொகைக்கு குத்தகை எடுத்ததோடு, பொதுமக்களிடம் அதிக கட்டணம் வசூலிப்பது வாடிக்கையானது. மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள ஒரு திருமண மண்டபத்திற்கும் இதே நிலைதான்.

இதுபற்றி பொதுமக்கள் மாநகராட்சிக் கமிஷனருக்குக் கொடுத்துவந்த புகார்களுக்கு எந்தவித பயனும் இல்லாமல் போனது. கடந்த ஏழு மாதங்களுக்கு முன்பு தூத்துக்குடி மாநகராட்சி கமிஷனராக பொறுப்பேற்ற ஜெயசீலன் ஐ.ஏ.எஸ்., இதுதொடர்பான புகார்களை விசாரித்து, அதிர்ந்துபோனார். உடனடியாக அவற்றுக்கான குத்தகைகளை ரத்துசெய்து, மாநகராட்சிக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து கட்டணங்களை சீராக்கினார்.

ஆளுங்கட்சிப் புள்ளிகளின் ஆதரவோடு குத்தகை எடுக்கப்படுகிற சுகாதார வளாகங்களின் நிலை குறித்தும் ஆய்வுசெய்த கமிஷனர் ஜெயசீலன், அதில் கட்டணக் கொள்ளை நடப்பதைக் கண்டு திகைத்துப்போனார். "ஏழைகளுக்கு இலவசமா ரேசனில் அரிசி கொடுக்கிறாங்க. அந்த மக்கள் டாய்லெட்போக இவ்வளவு கட்டணமா?' என்று கூறி, சிட்டிக்குள் இருக்கும் 40 சுகாதார வளாகங்களையும் மாநகராட்சி பொறுப்பிற்குள் கொண்டுவந்து கட்டணமில்லா சேவைக்கு அனுமதித்தார்.

அதுபோக, மாநகராட்சியில் தரமற்ற சாலைகளைப் போட்டுவந்த காண்ட்ராக்டர் ஜோதிமணி என்பவரை அழைத்து டோஸ் விட்டிருக்கிறார். அப்போது, ஆணையரிடமே ஜோதிமணி கமிஷன் தருவதாக பேரம்பேச... “"அரசு சம்பளம் தருது. கமிஷன் கொடுக்கிற பணத்தில் தரமான சாலைகள் போடுங்க. நானே காண்ட்ராக்ட் தர்றேன்' என பொரிந்துதள்ளி அனுப்பியிருக்கிறார்.

இதுபற்றி கமிஷனர் ஜெயசீலனிடம் கேட்டபோது, “""எனக்குக் கொடுத்த வேலை; மக்கள் நலனுக்காக கடமையைச் செய்கிறேன்'' என்றார் இயல்பாக. அதேசமயம், கமிஷனரின் களையெடுப்புகளால் பலனிழந்தவர்களைத் திரட்டி, 30 "எல்' இருந்தால் கமிஷனரை இங்கிருந்து மாற்றிவிடலாம் என்ற மெகா ப்ளானில் இறங்கியிருக்கிறார் ஏஜெண்ட் ஒருவர்.

-பரமசிவன்