பெரியாரைக் கொண்டாடிய டீக்கடை!
புதுக்கோட்டை மாவட்டம் வம்பன் கிராமத்தில் டீக்கடை நடத்திவரும் சிவக்குமார், தனது டீக்கடைக்கு வந்த வாடிக்கையாளர் அனைவருக்கும் பெரியாரின் "பெண் ஏன் அடிமையானாள்..' புத்தகத்தை டீயோடு இலவசமாக வழங்கி அசத்தியிருக்கிறார். செப்டம்பர் 17- தந்தை பெரியார் பிறந்த நாளை சமூக நீதி நாளாக தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில் இவர் இந்த முன்னெடுப்பை மேற்கொண்டுள்ளார். இதே சிவக்குமார் கஜா புயலின்போது, தனது வாடிக்கையாளர்களின் கடன் தொகையை ரத்துசெய்தும், கொரோனா ஊரடங்கின்போது, இல்லாதவர்களுக்கு அரிசி, மளிகைப்பொருட்களை வழங்கியும் சேவையாற்றியவர்.
தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகே பெரியார் சிலை முன்பு பா.ஜ.க.வினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி னார்கள். அந்த வழியாகச் சென்றவர்கள் பா.ஜ.க.வினர் பெரியார் பிறந்தநாளை கொண்டாடி இனிப்பு வழங்குகிறார்களா என்று வியப்புடன் பார்த்தனர். பிறகுதான் அவர்கள் மோடியின் பிறந்தநாளைக் கொண்டாடுவது தெரிந்தது. அவ்வழியே சென்ற வர்கள், முன்பு திராவிட அரசியலில் இருந்தவர்கள் என்பதால் பெரியார் பாசம் போகவில்லைபோல என்று கமெண்டடித்து சென்றனர்.
-செம்பருத்தி
400 ஆண்டு பழமையான சதிக்கல் கண்டெடுப்பு!
தமிழகத்தில் கீழடி, சிவகளை போன்ற இடங்களில் நடத்தப் படும் அகழாய்வில் தமி ழர்களின் வரலாற்றுப் பெருமைகளை நிலைநிறுத்தும் அரிய தொன்மையான பொருட்கள் கண்டெ டுக்கப்பட்டு உலகின் கவனத்தை தமிழகம் பெற்றுவருகிறது.
இந்நிலையில் விருதுநகர் மாவட்டம், திருச்சுழி தாலுகாவைச் சேர்ந்த புரசலூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில் சுற்றுச்சுவர் கட்டுவதற்குப் பள்ளம் தோண்டியபோது, புதைந்திருந்த ஒரு சிற்பம் வெளிப்பட்டுள்ளது. அவ்வூரைச் சேர்ந்த அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக் கல்லூரி வரலாற்றுத்துறை உதவிப் பேராசிரியர் செ.இரமேஷ், ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுருவுக்குத் இத்தகவலைத் தெரிவித் தார்.
இச்சிற்பத்தை ஆய்வு செய்தபின், தொல்லியல் ஆய்வாளர் வே.ராஜகுரு, "திருச்சுழி அருகிலுள்ள புரசலூரில் கண்டெடுக்கப்பட்ட சிற்பம், உடன்கட்டை ஏறி இறந்த பெண்ணுக்கு வைத்த சதிக்கல் ஆகும். போரில் வீரமரணமடைந்த வீரர்களுக்கு நடுகற்கள் நட்டு வழிபடும் முறை சங்க காலம் முதல் தமிழ்நாட்டில் இருந்துள்ளது. போரிலோ, வேறு காரணங்களினாலோ கணவன் இறந்தபின் அவனுடனோ அல்லது தனியாகவோ உடன்கட்டை ஏறி இறந்த பெண்ணுக்கு நினைவுச் சின்னங்கள் அமைத்து வழிபடும் வழக்கமும் உள்ளது. இவற்றை மாலையீடு, மாலையடி, தீப்பாஞ்சம்மன், மாலைக்காரி, சீலைக்காரி என்றும் அழைக் கிறார்கள். சதி, மாலை ஆகிய சொற்களுக்குப் பெண் என்றும் பொருள் உண்டு.
புரசலூரில் கண்டெடுக்கப்பட்ட சதிக்கல் 2ணீ அடி உயரமும், 1ணீ அடி அகலமும் கொண்டது. இதில் ஆண் வலது கையையும், பெண் இடது கையையும் தொடையில் வைத்துள்ளனர். ஆண் வலது காலை மடக்கி, இடது காலை தொங்கவிட்டும், பெண் இடது காலை மடக்கி வலது காலைத் தொங்கவிட்டும் அமர்ந்த நிலையில் உள்ளனர். ஆண் இடது கையில் கட்டாரி எனும் குத்துவாளையும், பெண் வலது கையில் பூச்செண்டையும் ஏந்தியுள்ளனர்.
சிற்பத்தின் மேற்பகுதி, கபோதம், கண்டம், கலசங்கள் ஆகிய பகுதிகளுடன் கோவிலின் சாலை விமானம் போன்ற அமைப்பில் உள்ளது. சிற்பத்தின் கீழ்ப்பகுதியில் காலை தொங்கவிட்டு அமர்ந்தநிலையில் ஊஞ்சலாடும் ஒரு பெண்ணின் சிறிய சிற்பம் உள்ளது.
சதிக்கல் அமைப்பைக் கொண்டு இது கி.பி.17-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது எனலாம். இப்பள்ளியின் வடக்குப் பகுதியில் ஏற்கனவே இரு சதிக்கற்கள் மக்கள் வழிபாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது. சென்ற ஆண்டு இவ்வூரில் கி.பி.13-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டியர் கால கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன'' என தெரிவித்தார்.
-பகத்சிங்
முதல்வர் படத்துடன் போராடிய இலங்கைத் தமிழர்கள்!
திருச்சி சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்களில் 30-க்கும் மேற்பட்டோர் தங்களை விடுதலை செய்யவேண்டும் என்று கடந்த மாதம் 11-ஆம் தேதி முதல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த ஆகஸ்டு மாதம் 18-ஆம் தேதி இம் முகாமிலுள்ள 16 பேர் தூக்க மாத்திரைகளை விழுங்கியும் கூரிய ஆயுதங்களால் அறுத்துக் கொண்டும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர்.
பொய் வழக்கிலும், தண்டனைக் காலம் முடிந்தும் இம்முகாமில் பலர் அடைக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர். 40-நாட்களைத் தாண்டி அவர்களுடைய போராட்டம் தொடர்ந்து நடை பெற்றுவருகிறது. இந்தப் போராட் டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் படத்தைக் கையில் வைத்துக் கொண்டு, பொது மன்னிப்பு வழங்கி அனைவரையும் சிறப்பு முகாமிலிருந்து விடுவிக்கவேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
-துரை.மகேஷ்